செக் மேட்! தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய கடிதம்.. அதிர்ச்சியில் அன்புமணி!
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி இடையேயான மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. இருவரையும் சமாதானம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட மூத்த நிர்வாகிளின் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. அடுத்தடுத்து இருவரும் தனித்தனியே கூட்டம் நடத்துவது, நிர்வாகிகளை சந்திப்பது ஆலோசனைகள் வழங்குவது என பல்வேறு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாமகவில் நடந்து வரும் மோதல் போக்கால் யார் பக்கம் செல்வது என தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஒரு சிலர் மாற்றுக் கட்சிகளிலும் இணைந்து வருகின்றனர். இப்படி பரபரப்பான சூழலில், கடந்த 5 ஆம் தேதி தைலாபுரத்தில் பாமக நிர்வாகக்குழு கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், பாமக நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டார். அதே போல ராமதாஸின் லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின் பெயர் நீக்கப்பட்டது.
இதையடுத்து, திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் கடந்த 8-ம் தேதி பாமக மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த செயற்குழு கூட்டத்தில், பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக பாமகவில் கூட்டணி உட்பட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு மட்டுமே இருக்கிறது. கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு முழு அதிகாரம் உள்ளது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கிடையில், பாமக தலைவராக இருந்த அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே 28-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து பாமக சட்ட விதிகளின்படி கட்சியின் தலைவராக ராமதாஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இது தொடர்பான தகவல் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் தரப்பு முறைப்படி கடிதம் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.