உ.பி. | ”மகளுக்கு இன்சுலின் போட பணம் இல்லை” - வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்த தொழிலதிபர்!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், கடன் பிரச்னையில் சிக்கித் தவித்துள்ளார். இந்த நிலையில், ஃபேஸ்புக் லைவ் வீடியோவில், இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளார். பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் தனது குடும்பத்திற்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் நிதிக் கடமைகளின் அழுத்தத்தை இனி தாங்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த வீடியோவில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு உயிர் காக்கும் இன்சுலின் வாங்குவதற்குக்கூட பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
ஃபேஸ்புக்கை நேரலையில் பார்த்த அவரது குடும்ப உறுப்பினர்கள், காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால், அவர்கள் செல்வதற்கு முன்பே, தனது அலுவலகத்தில் ஒரு பாதுகாவலரின் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு அவர் தற்கொலை செய்துகொண்டார். ஆரம்ப விசாரணையில் அவர் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்ததாகவும், கடந்த சில ஆண்டுகளாக பல கோடி அளவுக்கு கடன்களைப் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.