பந்தய செயலிகள் விளம்பரம்.. ED வசம் சிக்கிய பிரபலங்கள்.. தெலுங்கு திரையுலகில் பரபரப்பு
செய்தியாளர் - Hajirabanu.A
ஆன்லைன் ஆப் விளம்பரங்களால் சிக்கிய நடிகர்கள்
ஆன்லைன் ரம்மி, பந்தய செயலிகள், உறுதிப்பாடற்ற ஹெல்த் மற்றும் காஸ்மெட்டிக் ப்ராடெக் உள்ளிட்டவற்றிற்கு சிறிதும் முன் யோசனையின்றி விளம்பரம் செய்த நடிகர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன. விளம்பரம் செய்வதற்கு பணம் பெற்று ஒப்பந்தம் போடும் நடிகர்கள் முகங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து அக்ரீமெண்ட் முடியும் வரை நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துகின்றன.
பதஞ்சலி நிறுவன விவகாரத்தில் நடிகை தமன்னா சிக்கியது கூட இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டுதான். அதன் பின் அண்மையில் நடிகை சமந்தா கூட விளம்பரம் செய்யும் ப்ராடெக்டுகள் குறித்து கவனமுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார். இப்போது இந்த வரிசையில் சட்டவிரோத ஆன்லைன் பந்தைய ஆப்களை விளம்பரப்படுத்தியதாக 29 நடிகர்கள் கொத்தாக சிக்கியுள்ளனர்.
தொழிலதிபர் அளித்த புகார்
சட்டவிரோத ஆன்லைன் பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதாக தொழிலதிபர் பனிந்திர சர்மா என்பவர் அளித்த புகாரில் 29 பிரபலங்கள் மீது அமலாக்கதுறை வழக்கு பதிந்துள்ளது. தெலங்கானா மாநிலம் சைபராபாத் காவல் துறையால் முன்னர் பதிவு செய்யப்பட்ட FIRஇன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகர்களான பிரகாஷ் ராஜ் விஜய் தேவரகொண்டா மற்றும் ராணா டகுபதி உள்ளிட்டோர் மீதும், நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லட்சுமி, பிரணிதா சுபாஷ், அனன்யா நாகல்லா ஆகியோர் மீது ஈடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.
இதில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஸ்ரீமுகி ஆகியோரும் அமலாக்கத் துறை வளையத்தில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. கூடுதலாக யூடியூபர்கள், டிஜிட்டல் ஊடகப் பிரபலங்களும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அமலாக்கத்துறையின் நடவடிக்கை
பிரபலங்களின் விளம்பரங்களால் நிதி ரீதியாக பாதிக்கப்படக்கூடிய பயனர்களை, தவறாக வழிநடத்தி அவர்களை பெரும் நிதி இழப்புகளுக்கு ஆளாக்கியதாக பனிந்திர சர்மா தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார் என சொல்லப்படுகிறது. வழக்குப் பதியப்பட்டுள்ள 29 பிரபலங்களின் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் தடயங்களை அமலாக்கத்துறை ஆராய்ந்து வருவதாக தெரிகிறது. இந்த விளம்பரங்கள் பெரும் பணத்தை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், இது ஆயிரக்கணக்கான அப்பாவி பயனர்களைப் பாதிக்கும் என்றும் அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது.
இந்நிலையில், சில பிரபலங்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததாகவும் தெரிகிறது. தாங்கள் விளம்பரப்படுத்திய தளங்கள் திறமையை அடிப்படையாகக் கொண்ட கேம்கள் என்றும், சட்டபூர்வமானவை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 2016இல் ஜங்கில் ரம்மி ஆப்பிற்காக விளம்பரம் செய்ததை ஒப்புக்கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ், அதனை அடுத்த ஓராண்டிலேயே ரத்து செய்ததாக தெரிவித்தார்.
இதேபோல், 2017-ஆம் ஆண்டிலேயே ஒரு கேமிங் ஆப் உடனான அக்ரீமெண்டை முடித்துக்கொண்டதாகவும், தன் அனைத்து விளம்பரங்களும் சட்டப்பூர்வமாக, அனுமதிக்கப்பட்டவை என்றும் ராணா டகுபதி தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிகிறது.
இருப்பினும் இந்திய பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்கள் ஆதரவுடன் இயங்கும் ஆன்லைன் பந்தய தளங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட மிக முக்கியமான நடவடிக்கைகளில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சூடுபிடிக்கும்போது மேலும் பல உண்மைகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது...