"உங்கள் சாம்ராஜ்ஜியத்தை எனது மரணம் அசைத்துப் பார்க்கும்" - திருமலா பால் நிறுவனத்தில் அதிர்ச்சி!
திருமலா பால் நிறுவனத்தின் மேலாளர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மரணத்திற்கு முன்னதாக அவர் அனுப்பிய மின்னஞ்சல் கடிதம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? மின்னஞ்சல் கடிதத்தில் இருப்பவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 38 வயதான நவீன் பொல்லினேனி என்பவர், கடந்த 3 ஆண்டுகளாக சென்னை ரெட்டேரியில் உள்ள பிரபல தனியார் பால் நிறுவனமான திருமலா பால் நிறுவனத்தில் கருவூல மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். அண்மையில் பால் நிறுவனத்தில் கணக்கு வழக்குகளை சரிபார்த்தபோது, சுமார் 45 கோடி வரை நவீன் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
இதில் மேலாளர் நவீன் மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாக கொளத்தூர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் அவமானத்திற்கு ஆளாக நேரிடும் என மன உளைச்சலில் இருந்த நவீன், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது அக்கா மற்றும் பால் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கொடுத்து விட்டு நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். மின்னஞ்சலை கண்டு அதிர்ந்துபோன நவீனின் சகோதரி மாதவரம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் நவீனின் வீட்டிலும் அலுவலகத்திலும் சென்று தேடியபோதும், அவர் இல்லாத நிலையில், சொந்தமாக வாங்கிய மனைக்குச் சென்று பார்த்தபோது, குடிசையில் தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த புழல் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், நவீன் திருமணம் ஆகாதவர் என்பதும், திருமலா பால் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய போது 45 கோடி ரூபாய் கையாடல் செய்த புகாரில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும் புழலில் சுமார் 4 கிரவுண்ட் அளவிற்கு சொந்தமாக இடத்தை வாங்கி வைத்துள்ளதும், பல லட்ச ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்களையும் வாங்கி வைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலைக்கு முன்பு நவீன் அனுப்பியிருந்த மின்னஞ்சல் கடிதத்தில், தன்னை சந்தித்த நரேஷ் மற்றும் முகுந்த் ஆகிய இருவரும் மோசடி செய்த பணத்தை தான் திருப்பி கொடுத்தாலும், ஜெயிலில் இருப்பாய் என மிரட்டியதாகவும், இதனால் அச்சமடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னுடைய தற்கொலைக்கு திருமலா பால் கம்பெனி நிர்வாகமே காரணம் என்று கூறியவர், இந்த மோசடி தொடர்பாக பால் நிறுவன அதிகாரிகள் புகார் ஏதும் அளிக்க வேண்டாம் என்றும் கூறிய நிலையில், அவர்கள் புகார் அளித்ததாகவும், இது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று கூறியபோதும், பால் நிறுவனம் ஏற்றுக்கொள்ளாமல் தன்னை சித்திரவதை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உச்சபட்சமாக தன்னுடைய சடலத்திலிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றும், என்னுடைய மரணம் உங்களது சாம்ராஜ்யத்தை விரைவில் அசைத்துப் பார்க்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் நவீன். அதோடு, குடும்பத்தாரின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார் நவீன்.