100 ஆண்டுகால சாதனைகள்... முறியடிக்கக் காத்திருக்கும் கில்! இங்கிலாந்தில் மாறப்போகும் வரலாறு!
இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையான டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடந்து வருகிறது. நடந்து முடிந்திருக்கும் இரு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒருபோட்டியில் வெற்றி பெற்று சமனில் இருக்கின்றன.
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது. இத்தகைய சூழலில்தான், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் முறியடிப்பதற்கென்ற பல்வேறு சாதனைகள் காத்திருக்கின்றன.
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் நடந்து முடிந்திருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளை மட்டும் சேர்த்து 585 ரன்களைக் குவித்திருக்கிறார். இதேவேகத்தில் அவர் இந்தத் தொடரை நிறைவு செய்தால் அவரால் டான் பிராட்மேன் நிகழ்த்தியிருக்கும் பல சாதனைகளை முறியடிக்க முடியும்.
ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களைக் குவித்த கேப்டன் எனும் சாதனையை தற்போதுவரை தன் வசம் வைத்திருக்கிறார் ஆஸ்திரேலியாவின் ‘டான்’ பிராட்மேன். கிட்டத்தட்ட 88 ஆண்டுகளுக்கு முன், 1936-1937 ஆம் ஆண்டுகளில் நடந்த 5 போட்டிகளைக் கொண்ட ஆஷிஸ் தொடரில் 810 ரன்களைக் குவித்திருந்தார் டான் பிராட்மேன். ஆனால், கில் 4 இன்னிங்ஸ் முடிவிலேயே 585 ரன்களை எடுத்திருக்கிறார். டான் பிராட்மேனின் சாதனையை முறியடிக்க இன்னும் 225 ரன்களே தேவை. ஆனால், அவருக்கு இன்னும் 6 இன்னிங்ஸ் மீதமிருக்கின்றன. எனவே, கில் பிராட்மேனின் சதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.
டான் பிராட்மேனின் மற்றொரு சாதனையையும் கில் முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது. அது டெஸ்ட் தொடரில் அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் சாதனை. 1930 ஆம் ஆண்டு நடந்த 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷிஸ் தொடரில் பிராட்மேன் 974 ரன்களைக் குவித்திருந்தார். அந்த சாதனையை முறியடிக்க கில்லிற்கு இன்னும் 390 ரன்கள் தேவைப்படுகிறது. கில் அந்த சாதனையையும் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக வேகமாக 1000 ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையையும் டான் பிராட்மேன் தன் வசமே வைத்திருக்கிறார். 1000 ரன்களைக் கடக்க அவர் 11 இன்னிங்ஸை எடுத்துக்கொண்டார். தற்போது கில் 4 இன்னிங்ஸிலேயே 585 ரன்களைக் குவித்திருக்கிறார். இதேவேகத்தில் கில் சென்றால் பிராட்மேனின் மற்றொரு சாதனயையும் கில் முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.
ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் அடித்த சாதனையை டான் பிராட்மேனே தன் வசம் வைத்திருக்கிறார். ஆனால் ஒரு கேப்டனாக, மேற்கிந்திய தீவுகள் வீரர் கிளைட் வால்காட் ஒரு தொடரில் அதிக சதங்களை அடித்திருக்கிறார். 1955 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் தொடரில் வால்காட் 5 சதங்கள் அடித்திருந்தார். கில் தற்போதுவரை கில் 3 சதங்களை அடித்திருக்கிறார். எனவே, ஒரு கேப்டனாக பிராட்மேனின் சாதனையை சமன் செய்ய கில்லுக்கு இன்னும் ஒரு சதமும், வால்காட்டின் சாதனையை சமன் செய்ய இரண்டு சதங்களும் தேவைப்படுகிறது. கில் அந்த சாதனையையும் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதனைகள் என்பது வெறும் எண்கள் அல்ல. ஒரு வீரர் தான் கடந்து வந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதில்... இங்கிலாந்து தொடருக்கு முன்பாக கில் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு எல்லாம் அவரது சதங்களே பதிலாகி வருகின்றன. அவர் ஒரு தொடரின் நாயகன் மட்டுமல்ல.. வரலாற்றின் நாயகன்.. விமர்சனங்களுக்கு மத்தியில் மீண்டு வருவதற்கான வாழும் உதாரணம்...