ஹரியானா| ”தலைமுடியை ஒழுங்காக வெட்டு” - கண்டித்த பள்ளி முதல்வரை கொலை செய்த ப்ளஸ் டூ மாணவர்கள்!
ஹரியானா மாநிலம், ஹிசாரில் உள்ள பாஸ் பாட்ஷாபூர் கிராமத்தில் உள்ள கர்தார் நினைவு சீனியர் செகண்டரி பள்ளியின் முதல்வராக இருந்தவர் ஜக்பீர் சிங் (50). இவர், இன்று காலை 10.30 மணியளவில் கத்தியால் குத்தப்பட்டார். தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வளாகத்தில் பீதியை ஏற்படுத்தியது. 12ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரால் அவர் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தலைமுடி வெட்டவும், ஒழுக்கத்தைப் பின்பற்றவும் முதல்வர் கேட்டுக் கொண்டதால், மாணவர்கள் அவரை கத்தியால் பலமுறை குத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இவ்விவகாரம் குறித்து ஹன்சியின் காவல் கண்காணிப்பாளர் அமித் யஷ்வர்தன், முதல்வர் மாணவர்களை தலைமுடி வெட்டவும், சரியாக உடை அணியவும், பள்ளியின் விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றவும் கேட்டுக் கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர், மாணவர்களிடம் தங்கள் தவறுகளைச் சரி செய்யச் சொன்னார். இதுதொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர்கள் பள்ளி முதல்வரால் பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விரிவான விசாரணைக்குப் பிறகுதான் கொலைக்கான சரியான விவரங்கள் தெரியவரும்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கு மரியாதை காட்டும் குரு பூர்ணிமா என்று அழைக்கப்படும் புனித நாளான இன்று கொடுஞ்செயல் அரங்கேறியிருப்பது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.