இந்திய கிரிக்கெட் அணி 15 இறுதிப்போட்டிகள்  pt
கிரிக்கெட்

'HEARTBREAK to GLORY'| இந்தியாவின் 15 இறுதிப்போட்டிகள் தொகுப்பு.. மறக்க முடியாத தருணங்கள்!

இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 15 முறை ஐசிசி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், 7 நேரடி கோப்பைகளும், 1 பகிர்வு கோப்பை மற்றும் 7 தோல்விகளையும் கண்டுள்ளது..

Rishan Vengai

சர்வதேச கிரிக்கெட்டில், வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட ODI மற்றும் டி20 வடிவத்தில், இந்தியா வலுவான அணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவர்கள் ஒருநாள் உலகக் கோப்பையை இரண்டு முறை (1983 மற்றும் 2011), சாம்பியன்ஸ் டிராபியை மூன்று முறை (2002 பகிரப்பட்டது, 2013 மற்றும் 2025) மற்றும் டி20 உலகக் கோப்பையை மூன்று முறை (2007, 2024 மற்றும் 2026) என வென்று அசத்தியுள்ளனர்.

1983 World Cup

இதன்மூலம் அதிக ஐசிசி கோப்பைகள் என்ற பட்டியலில் ஆஸ்திரேலியாவிற்கு பிறகு 2வது வலுவான அணியாக இந்தியா கோலோச்சியுள்ளது. ஆஸ்திரேலியா 10 கோப்பைகளுடன் முதலிடத்திலும், இந்தியா 8 கோப்பைகளுடன் இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றன.

1983 - முதல் கோப்பையை ஏந்திய இந்தியா

1983 உலகக்கோப்பை

தற்போது பிசிசிஐ உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக திகழும் நிலையில், 1983 உலகக்கோப்பை வென்றபோது அடிப்படை வசதிகள் கூட இல்லாதசூழலே இந்திய அணிக்கு இருந்தது. இந்த அணியெல்லாமா கோப்பை வெல்லப்போகிறது என்ற ஏலனப்பேச்சுக்கு இடையில் போராடி வென்ற கோப்பை என்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு எப்போதும் 1983 உலகக்கோப்பை ஆனது மகுடமாகவே இருந்துவருகிறது.

2000 - கங்குலியின் எழுச்சியும் தோல்வியும்

இந்திய கிரிக்கெட்டை கங்குலிக்கு முன், கங்குலிக்கு பின் என்று பிரித்துவிடலாம். நலிந்துபோன நிலைமையில் இருந்த இந்திய அணியை மீட்டு எடுத்துவந்த பெருமை கேப்டன் கங்குலிக்கே சேரும். அதிலும் அதுவரை இந்திய கிரிக்கெட்டில் அப்படி ஒரு ஆக்ரோஷத்தை எந்த கேப்டனும் கொண்டுவந்ததில்லை. 

அவ்வளவுதான் இந்திய அணியின் எதிர்காலம் முடிந்துவிட்டது என்ற சூழலில், அணியை தன் தோள்களில் தாங்கி எடுத்துவந்த கேப்டன் கங்குலி 2000 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு இந்திய அணியை வழிநடத்தினார். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தியா இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றது. அந்த இறுதிப்போட்டியில் கங்குலி 117 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2002 - மழையால் பறிபோன கோப்பை

2000ஆம் ஆண்டு விட்ட சாம்பியன்ஸ் டிராபியை 2002-ல் பிடித்துவிடும் நிலையிலேயே இருந்தது இந்திய அணி. இலங்கைக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2 நாட்கள் ஃபைனல் நடைபெற்றது. ஆனால் மீண்டும் மழையால் ஆட்டம் வாஷ்அவுட் செய்யப்பட்ட நிலையில் கோப்பை இந்தியா மற்றும் இலங்கை 2 அணிகளுக்கும் பகிரப்பட்டது.

2002 சாம்பியன்ஸ் டிராபி

ஒருவேளை மழையால் அந்த ஆட்டம் தடைபடாமல் போயிருந்தால், இந்தியா நிச்சயம் கோப்பை வென்று ஐசிசி கோப்பை வென்ற கேப்டன்களில் கங்குலியின் பெயரும் தவிர்க்க முடியாதாக ஒன்றாக இருந்திருக்கும்.

2003 - மறக்க முடியாத தோல்வி

2002 சாம்பியன்ஸ் டிராபி வென்ற கையோடு 2003 உலகக்கோப்பையையும் இந்தியாவே வெல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. அதிலும் ஒரோயொரு லீக் போட்டியில் மட்டுமே தோற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி மீது அதிக நம்பிக்கை இருந்தது. ஆனால் இறுதிப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலியா, இந்திய அணியை படுமோசமான இரவை பரிசளித்தது.

சச்சின் 2003 உலகக்கோப்பை

’ரிக்கி பாண்டிங் பேட்டில் ஸ்பிரிங் வைத்துவிட்டார்கள்’ என்ற வதந்தியை நம்பி இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலியா மீது வெறுப்பை விதைத்துகொண்டிருந்தார்கள். இதுவரை இந்தியா அடைந்த ஹார்ட் பிரேக்கிங் தோல்விகளில் முதலிடத்தில் 2003 இறுதிப்போட்டியே இருந்துவருகிறது.

2007 - கைவிடப்பட்ட இந்திய அணியை கரைசேர்த்த தோனி

2007 ஒருநாள் உலகக்கோப்பையில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு நடந்த முதல் டி20 உலகக்கோப்பையில் வெல்லவா போகிறோம் என்ற மனநிலையே இந்திய நிர்வாகத்திடம் இருந்தது. அதன் காரணமாகவே மூத்த வீரர்கள் அனைவரும் விலக்கிக்கொள்ள, இளம் வீரர்கள் கொண்ட படையுடன் அணியை தலைமை தாங்கினார் தோனி.

2007 t20 wc final

அதுவரை இந்த பையன் கேப்டனா? என கேட்டவர்கள் எல்லோரையும் அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியபோதே ஆச்சரியப்பட வைத்தார் தோனி. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பை வென்று இந்திய அணியின் மிகப்பெரிய எழுச்சிக்கு பாதை அமைத்தார் கேப்டன் தோனி.

2011 - மொத்த இந்தியாவும் ஆனந்த கண்ணீர் விட்டது

"15 வருஷம் ஆச்சு, இன்னும் தோனி அடிச்ச அந்த வின்னிங் சிக்சும், “Dhoni finishes off in style, A magnificent strike into the crowd, India lifts the World Cup after 28 years" என டெலிவிஷனில் ஒலித்த ரவி சாஸ்திரியின் குரலும், ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் மனதிற்குள்ளும் இன்றளவும் மறக்க முடியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.

2011 உலகக்கோப்பையில் சச்சினை சுமந்து சென்ற வீரர்கள்

28 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வென்றதும், சச்சினை தூங்கிக்கொண்டு மும்பை வான்கடேவில் வலம்வந்ததும், கேன்சருடன் போராடி யுவராஜ் உலகக்கோப்பை வென்றதும், தோனியின் கடைசி சிக்சரும், இந்திய வீரர்களின் ஆனந்த கண்ணீரும் 2011 உலகக்கோப்பை வெற்றியை அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் மனதளவில் நெருக்கமாக கொண்டு சேர்த்துள்ளது.

2013 - இந்திய அணியின் எழுச்சி

2013 சாம்பியன்ஸ் டிராபி

2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றபோது இந்தியா உலக கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்தி நம்பர் 1 அணியாக எழுச்சிகண்டது. 3 ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டனாக தோனி வரலாறு படைத்தார். வெற்றித் தருணத்தில் துள்ளிக்குதித்த தோனியின் கொண்டாட்டத்தை இப்போதும் மறக்கமுடியாது.

2014 - வீணாய்போன கோலியின் போராட்டம்

2014 உலகக்கோப்பை இந்தியா தோல்வி

2014 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக தோல்வியை தழுவியது. ஆனால் யுவராஜ் சிங்கின் 21 பந்தில் 11 ரன்கள் மட்டும் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. 77 ரன்கள் அடித்த விராட் கோலியின் போராட்டம் வீணாய்ப்போனது. லசித் மலிங்கா, சங்கக்கரா, ஜெயவர்த்தனே, தில்சான் என இலங்கையின் அனைத்து ஜாம்பவான் வீரர்களும் ஒன்றாக கோப்பை வென்றனர்.

2017, 2021 - வெற்றிக்கேப்டனாக கோலி இருந்திருக்க வேண்டும்

உலகக்கோப்பை வென்ற கேப்டன்களாக கபில்தேவ், தோனி, ரோகித் சர்மா வரிசையில் கோலியும் இருந்திருக்க வேண்டும். இந்திய அணியை உலகின் தலைசிறந்த ரெட்பால் மற்றும் ஒயிட்பால் கிரிக்கெட் அணியாக மாற்றிய கேப்டனின் கைகளில் ஒரு கோப்பையாவது சேர்ந்து உட்கார்ந்திருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு ரசிகனின் பெரிய கவலையாக இன்றுவரை இருந்துவருகிறது.

2017 சாம்பியன்ஸ் டிராபி

2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றது. தான் ஒரு வெற்றிக்கேப்டன் இல்லை என்ற விமர்சனத்தை சுட்டிக்காட்டி பலமுறை வேதனைப்பட்டுள்ளார் விராட் கோலி.

2023 - நிலைகுலைந்த ரோகித் சர்மா

2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோற்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, சொந்தமண்ணில் நடைபெற்ற 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் படுதோல்வியை அடைந்தது.

2023 உலகக்கோப்பை

கேப்டனாக அந்ததோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ரோகித் சர்மா, தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் முடிவையே எழுதும் நிலைக்கு சென்றார். சொந்தமண்ணில் இந்தியாவின் தோல்வியானது இந்திய ரசிகர்களுக்கு பேரிடியாக விழுந்தது. சொன்னதை போலவே ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் 1 லட்சம் மக்களை சைலன்ஸ் செய்தார்.

2024 - இந்தியாவின் தலைசிறந்த வெற்றி

30 பந்தில் வெறும் 30 ரன்கள் அடிக்க வேண்டும்.. வெற்றியின் பக்கத்தில் 99% தென்னாப்பிரிக்காவே இருக்கிறது. அந்த இடத்திலிருந்து ஒரு அணியால், ஒரு கேப்டனால் வெற்றியை வசப்படுத்த முடியுமா. அப்படியான நம்பமுடியாத சாதனையை 2024 டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி படைத்தது.

2024 t20 world cup champion india

சிக்ஸ் லைனில் பிடித்த சூர்யகுமாரின் கேட்ச், பும்ராவின் மேட்ச் சேஞ்சிங் ஸ்பெல், ஹர்திக் பாண்டியாவின் முக்கியமான விக்கெட், கண்ணீர்விட்ட ரோகித் சர்மா, வெற்றியில் திளைத்த ரோ-கோ ஜோடி என இந்திய ரசிகர்களின் ஆகச்சிறந்த வெற்றியாக 2024 டி20 உலகக்கோப்பையே முதலிடத்தில் நிற்கிறது.

2025 - ரோகித் சர்மாவின் இரட்டை துப்பாக்கி

2025 சாம்பியன்ஸ் டிராபி

2023 உலகக்கோப்பையை இழந்த ஆராத ரணத்திற்கு மருந்தாய் 2024 டி20 உலகக்கோப்பையின் வெற்றி இருந்தாலும், 2025 சாம்பியன்ஷ் டிராபி வெற்றியானது இத்தனை ஆண்டுகள் ரோகித் சர்மா, விராட் கோலியின் அர்ப்பணிக்கு விருதாய் வந்துசேர்ந்தது. தொடர் முழுவதும் டாமினேட் செய்த இந்திய அணி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சம்பவம் செய்தது.

2026 - இந்திய இளம் வீரர்களின் எழுச்சி

2026 டி20 உலகக்கோப்பை

ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாமல் இந்திய அணியால் கோப்பை வெல்லமுடியுமா என்ற கேள்விக்கு, வீரர்கள் வரலாம், போகலாம் ஆனால் இந்திய கிரிக்கெட் எப்போதும் நிலைத்து நிற்கும் என்ற கூற்றுக்கு சான்றாக வந்துசேர்ந்தது 2026 டி20 உலகக்கோப்பை வெற்றி. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இளம்வீரர்கள் படையுடன் உலகக்கோப்பை வென்று மகுடம் சூடியது. இது இந்திய அணிக்கு தொடர்ந்து 3வது ஐசிசி கோப்பையாகும்..