“தோல்வியிலும் எனக்காக நின்றீர்கள்.. தேங்க் யூ பொண்டாட்டி” - மனைவிக்கு நன்றி சொன்ன சாம்சன்!
2026 டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு சஞ்சு சாம்சன் தனது மனைவிக்கு நன்றி தெரிவித்தார். தொடர் நாயகன் விருதை வென்ற அவர், தனது மனைவியின் ஆதரவுக்கு உருக்கமான நன்றி கூறினார். சாம்சன் தனது மனைவியின் உண்மையான ஆதரவைப் பாராட்டி, கிரிக்கெட்டில் வெற்றியடைய அவரின் பங்களிப்பை வெளிப்படுத்தினார்.
2026 டி20 உலகக்கோப்பையானது சஞ்சு சாம்சனுக்கு அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. உலகக்கோப்பை தொடருக்கு முன் தன்னுடைய பேட்டிங் ஆர்டர் மாற்றி களமிறக்கப்பட்ட சஞ்சு சாம்சன், தன்னுடைய ஃபார்மை இழந்துதான் டி20 உலகக்கோப்பையில் இடம்பிடித்தார்.
முதலில் அணியில் இடம்கிடைக்குமா என்ற சந்தேகம் அதிகமாக இருந்தாலும், அவருக்கான இடம் அணியில் வழங்கப்பட்டது. ஆனால் லீக் சுற்று மற்றும் சூப்பர் 8 இரண்டிலும் சேர்ந்து 2 போட்டிகளில் மட்டுமே சஞ்சுவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 22 ரன்கள், 24 ரன்கள் என மட்டுமே அடித்தார். அதனால் அவரின் ஆட்டத்தின் மீது ரசிகர்களுக்கு கூட நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தது.
இருப்பினும் வெற்றிபெற்றே ஆகவேண்டிய வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான காலிறுதிப்போட்டியில் களம்கண்ட சஞ்சு சாம்சன், அப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் குவித்து இந்தியாவை தனியாளாக வெற்றிக்கு அழைத்துச்சென்றார். அப்போட்டியில் தன்னுடைய ஃபார்மை மீட்டெடுத்த சஞ்சு சாம்சன், பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப்போட்டியிலும், நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 89 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார்.
இவர் அணிக்கு வேண்டாம் என சொல்லப்பட்ட ஒருவர், அணி எப்போதெல்லாம் ஆபத்தில் இருந்ததோ அப்போதெல்லாம் காப்பானாக மாறி அணியை தன் தோள்களில் சுமந்து மீட்டார். நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் வெறும் 5 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடிய அவர், 199 ஸ்ட்ரைக்ரேட் உடன் 321 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். முதலிடத்திலிருந்த விராட் கோலியை பின்னுக்கு தள்ளி அசத்தினார்.
மனைவிக்கு நன்றி சொன்ன சாம்சன்..
2026 டி20 உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றபிறகு, தன்னுடைய மனைவிக்கு உருக்கமான நன்றியை வெளிப்படுத்தியுள்ளார் சஞ்சு சாம்சன்.
இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “உன்னைச் சந்தித்த நாள் முதல், என் வாழ்க்கையின் இந்த நாள் வரை...!!
என் பக்கத்தில் இருந்ததற்கும், நான் யார் என்பதற்காக மட்டுமே என்னை நேசிப்பதற்கும், வெளி உலகிற்கு நான் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் எனக்கு முற்றிலும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்ததற்கும் மிக்க நன்றி.. என் சிறந்த பக்கத்தையும், என் மோசமான பக்கத்தையும் பார்த்த நீங்கள், அனைத்தையும் பார்த்து, இன்னும் எனக்கு ஆதரவாக நின்றீர்கள்..!!
என் வாழ்க்கையில் கிரிக்கெட் எவ்வளவு பெரியது என்பதைப் புரிந்துகொண்டு, அதை உங்களுக்கானதாகவும் மாற்றியதற்கு நன்றி..
இந்த தருணத்திற்காக நான் செய்த அதே ஆர்வத்துடனும் தீவிரத்துடனும் நீங்களும் ஆசைப்பட்டு என்னுடன் கனவு கண்டிருக்கிறீர்கள்..
மிக்க நன்றி என் அன்பான பொண்டாட்டி” என பதிவிட்டுள்ளார்.
