’போதும் சாமி.. இனி கிரிக்கெட்டே வேணாம்’ - 2023 WC தோல்வியின் தாக்கம் குறித்து ரோகித் ஓபன்!
2023 உலகக்கோப்பை தோல்வி ரோகித் சர்மாவை ஆழமாக பாதித்தது. உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவுடன் களமிறங்கிய அவர், இறுதியில் தோல்வியால் நொறுங்கினார். ஆனால், இந்திய அணிக்காக மீண்டும் போராடி, 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி வென்றார். சிறுவயது கனவான ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல முடியாதது அவருக்கு இன்னும் வருத்தமாக உள்ளது.
உலகக்கோப்பையை வெல்ல வேண்டும், அதிலும் சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்ற கனவு ஒவ்வொரு கிரிக்கெட் அணி கேப்டனுக்கும் அதிகமாகவே இருக்கும். அப்படி மில்லியன் மக்களின் கனவுக்காக களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஒருநாள் உலகக்கோப்பையை இறுதிப்போட்டிக்கு சென்று நழுவவிட்டது.
லீக் முழுவதும் ஒரு போட்டியில் கூட தோல்வியில்லை, டாப் ஆர்டர்கள் 4 பேரும் சதமடித்திருந்தனர் என இறுதிப்போட்டிக்கு முன்புவரை எல்லாம் கைக்கூடியிருந்தது. ஆனால் இறுதிப்போட்டியில் முக்கியமான நேரத்தில் ரோகித் மற்றும் கோலி இருவரும் அவுட்டானது, மிடில் ஆர்டர் வீரர்கள் சொதப்பல், முகமது ஷமிக்கு காயம் என இந்திய அணிக்கு எதுவுமே கைக்கூடி வரவில்லை. எப்படியும் கோப்பையை வென்றுவிடுவோம் என்ற கனவோடு இருந்த ரோகித் சர்மாவின் கனவுக்கோட்டை தவிடுபொடியானது.
இறுதிப்போட்டியின் தோல்விக்கு பின் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று பேசுவதற்கு கூட விருப்பம் தெரிவிக்காத ரோகித், கிரிக்கெட்டிலிருந்து கிட்டத்தட்ட விலகும் முடிவுக்கே சென்றிருந்தார். ஆனால் இந்திய அணிக்காக கோப்பையை வெல்லவேண்டும் என்ற தன்னுடைய கனவிற்கு மீண்டும் உயிர்கொடுத்த அவர், மீண்டுவந்து 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி என 2 ஐசிசி கோப்பைகளை வென்று சாதனை படைத்தார்.
ஆனால் சிறுவயதியிலிருந்து கனவுகண்ட ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல முடியாதது குறித்து மீண்டும் தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரோகித் சர்மா.
என்னிடம் இருந்த அனைத்தையும் உறிஞ்சி விட்டது..
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 2023 உலகக்கோப்பை தோல்வி குறித்து ரோகித் சர்மாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா, ”எல்லோரும் மிகவும் ஏமாற்றமடைந்தனர், என்ன நடந்தது என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. தனிப்பட்ட முறையில் அது எனக்கு மிகவும் கடினமான நேரம், ஏனென்றால் 2023 உலகக்கோப்பைக்காக நான் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு தயாராகவில்லை. நான் 2022-ல் கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டதிலிருந்தே உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்பதில் தான் என் எல்லாவற்றையும் செலுத்தினேன்.
2023 உலகக் கோப்பையை வெல்வதே எனது ஒரே குறிக்கோளாக இருந்தது, ஆனால் அது நடக்காதபோது, நான் முற்றிலும் நொறுங்கிப் போனேன். என் உடலில் எந்த சக்தியும் இல்லை. என்னிடமிருந்த எல்லாவற்றையும் அந்த தோல்வி உறிஞ்சி எடுத்துவிட்டது. அதிலிருந்து என்னை மீட்டுக்கொண்டு வர எனக்கு இரண்டு மாதங்கள் ஆனது.
நீங்கள் ஏதாவது ஒன்றிற்காக உங்களுடைய அனைத்தையும் கொடுத்தபிறகு அது கிடைக்கவில்லை என்றால், நீங்கள் மிகவும் நொறுங்கிப்போவீர்கள், அது தான் இயல்பு. எனக்கும் அதுதான் நடந்தது. ஆனால் வாழ்க்கை அந்த இடத்திலேயே முடிந்துவிடவில்லை என்பது எனக்கு தெரியும். ஏமாற்றத்தை எவ்வாறு சமாளிப்பது, அதிலிருந்து எப்படி மீண்டுவருவது, அடுத்த இலக்கை நோக்கி புதிதாக எப்படி தொடங்குவது என்பது எனக்கு ஒரு பெரிய பாடமாக இருந்தது.
2024 டி20 உலகக் கோப்பையில் நிச்சயம் வேறொன்று வரப்போகிறது என்பதை நான் அறிந்தேன், எனது முழு கவனத்தையும் அதை நோக்கி மாற்ற வேண்டியிருந்தது. இப்போது அதை எளிதாக சொல்லிவிடலாம், ஆனால் அந்த நேரத்தில் அது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.
ஒரு கட்டத்தில், இந்த விளையாட்டு என்னிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துவிட்டது, அதனால் இனி இந்த விளையாட்டே வேண்டாம் ஓய்வு பெற்றுவிடலாம் என்று உண்மையில் நினைத்தேன், இனிமேல் எனக்கு எதுவும் மிச்சமில்லை என்று தோன்றியது. நான் இழந்த அனைத்தையும் திரும்பபெற சிறிது நேரம், நிறைய சக்தி மற்றும் சுயபரிசோதனை தேவைப்பட்டது. இந்தியாவிற்காக உலகக்கோப்பை வெல்வதுதான் என் சிறுவயது குறிக்கோள், அது என் முன்னால் இருக்கிறது, அதை அவ்வளவு எளிதில் விட்டுவிட கூடாது என்பதை நான் எனக்குள் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தேன்.
என்னை நானே விட்டுக்கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்து, என் சக்தியை மீண்டும் பெற்று, மைதானத்தில் மீண்டும் என்னை சரியான பாதையில் நகர்த்திக் கொண்டேன்” என்று ரோகித் சர்மா பேசியுள்ளார்.

