இதே நாள் சட்டையை சுழற்றிய கங்குலி| ’ஒட்டுமொத்த அணியையும் செய்ய சொன்ன தாதா..’ 3 சுவாரசிய தகவல்கள்!
இந்திய கிரிக்கெட்டை கங்குலிக்கு முன், கங்குலிக்கு பின் என்று பிரித்துவிடலாம். நலிந்துபோன நிலைமையில் இருந்த இந்திய அணியை மீட்டு எடுத்துவந்த பெருமை கேப்டன் கங்குலிக்கே சேரும். அதிலும் அதுவரை இந்திய கிரிக்கெட்டில் அப்படி ஒரு ஆக்ரோஷத்தை எந்த கேப்டனும் கொண்டுவந்ததில்லை. அதற்கு லார்ட்ஸ் மைதானத்தில் சட்டையை கழற்றி சுற்றிய கொண்டாட்டமே சான்று!
ஏன் கங்குலி சட்டையை கழற்றி சுற்றினார்?
2002-ம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருந்த இங்கிலாந்து அணி 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் 4 போட்டியில் இந்தியா மூன்றில் வெற்றிபெற்று 3-1 என முன்னிலை பெற்றது. எப்படியும் இந்தியாதான் தொடரை வெல்லப்போகிறது என்ற எண்ணமே எல்லோருக்கும் இருக்க, டெல்லியில் நடந்த 5வது போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, மும்பை வான்கடேவில் நடந்த 5வது போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 3-3 என சமன்செய்தது.
மும்பை வான்கடேவில் கையிலிருந்த இந்தியாவின் வெற்றியை தட்டிப்பறித்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ பிளின்டாஃப், வெற்றிக்கு பிறகு தன்னுடைய சட்டையை கழற்றி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனைத்தொடர்ந்து அதே ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற NatWest முத்தரப்பு தொடரில் பங்கேற்ற இந்திய அணி, இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஃபைனலில் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைனும், மார்க்கஸ் ட்ரஸ்கோத்திக்கும் சதமடித்து அசத்த 325 ரன்களை குவித்தது இங்கிலாந்து.
அதுவரை அவ்வளவு பெரிய இலக்கை இந்தியா துரத்தியதே இல்லை என்ற சூழலில் எப்படியும் இங்கிலாந்தே வெற்றிபெற்று கோப்பை வெல்லப்போகிறது என்ற நிலையே இருந்தது. ஆனால் முகமது கைஃப் மற்றூம் யுவராஜ் சிங்கின் அசத்தலான பேட்டிங்கால் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஒரு த்ரில் வெற்றியை பதிவுசெய்தது.
அப்போது வெற்றிக்கொண்டாட்டத்தை ஆக்ரோசமாக வெளிப்படுத்திய இந்திய கேப்டன் கங்குலி, லார்ட்ஸ் மைதானத்தில் பால்கனியில் இருந்து தன்னுடைய சட்டையை கழற்றி செலப்ரேட் செய்தார். இது கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத சம்பவமாக மாறிப்போனது.
லார்ட்ஸ் கொண்டாட்டம் - சுவாரசிய தகவல்கள்!
லார்ட்ஸும் கங்குலியும் - லார்ட்ஸில் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடிய சவுரவ் கங்குலி, முதல் போட்டியிலேயே சதமடித்து முத்திரை பதித்தார்.
லார்ட்ஸ் மைதானத்துடன் இப்படி ஒரு பாண்டை கொண்டிருக்கும் கங்குலி, லார்ட்ஸின் பால்கனி வெற்றிக்கொண்டாட்டத்தாலும் கொண்டாடப்படுகிறார்.
மொத்த அணியையும் சட்டையை கழற்ற சொன்ன கங்குலி - 2002 NatWest வெற்றியின் போது இந்திய அணியின் மேலாளராக இருந்த ராஜீவ் சுக்லா சமீபத்திய பேட்டி ஒன்றில் சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார். அதில் பேசிய அவர், “வெற்றி வருமா என்ற பதட்டத்தில் நான் இரத்த அழுத்த மாத்திரையை போட்டுக்கொண்டேன். ஆனால் கங்குலி நம்பிக்கையுடன் காத்திருந்தார். வெற்றிக்கு அருகில் இந்தியா வந்தபோது, மொத்த அணி வீரர்களையும் சட்டை கழற்றி சுற்றுமாரு கங்குலி கூறினார்.
ஆனால் என்னிடம் பேசிய சச்சின், அப்படி செய்ய அனுமதிக்காதீர்கள். கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் விளையாட்டு, அப்படி எல்லோரும் செய்தால் நன்றாக இருக்காது என்று கூறினார். நான் கங்குலியிடம் எல்லோரும் அதை செய்யதேவையில்லை, நீங்கள் செய்ய நினைத்தால் செய்யுங்கள் என்று கூறினேன். அவர் அதை செய்தார், அது வரலாற்றின் ஒரு பகுதியாக மாறியது. இந்திய அணியில் ஆக்ரோஷத்தை கொண்டுவந்த முதல் கேப்டன் கங்குலி” என்று நினைவுகூர்ந்தார்.
கொண்டாட்டத்திற்காக வெட்கப்பட்ட கங்குலி - ஒரு நேர்காணலில் லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனி கொண்டாட்டம் குறித்து எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்த கங்குலி, ஒருநாள் அந்த கொண்டாட்டம் குறித்து எனக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது. ஒரு நாள், என் மகள் அந்தக் காட்சிகளைப் பார்த்து, 'நீங்கள் ஏன் அப்படிச் செய்தீர்கள்? கிரிக்கெட்டில் நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றா?' என்று கேட்டாள். நான் அவளிடம், 'இல்லை, அப்படி செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நேரத்தில் அப்படி செய்துவிட்டேன்” என்று வெட்கப்பட்டு கூறியதாக வெளிப்படுத்தினார்.