”காப்பாற்ற கடவுள் வரமாட்டார்..” தோனி தலைமையில் தரமான சம்பவம்.. 2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற தினம்!
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என 3 ஐசிசி கோப்பைகளை வென்ற முதல் கேப்டனாக தோனி வரலாறு படைத்த தினம் இன்று.
2013 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை அவர்களின் சொந்த மண்ணில் வைத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய அணி வரலாற்று சம்பவத்தை நிகழ்த்தியது.
5 ரன்னில் த்ரில் வெற்றி..
2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியானது மழை காரணமாக 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவரில் வெறும் 129 ரன்கள் மட்டுமே சேர்த்தது. விராட் கோலியும் ஷிகர் தவானும் 43 மற்றும் 31 ரன்கள் அடிக்க, கடைசியாக வந்து 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்த ஜடேஜா இந்தியாவை ஒரு ஃபைட்டிங் டோட்டலுக்கு அழைத்துச்சென்றார்.
130 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 16 ஓவர்கள் முடிவில் 90/4 என்ற வலுவான நிலையில் இருந்தது. கடைசி 4 ஓவரில் 40 ரன்கள் தேவை களத்தில் 30, 33 ரன்கள் அடித்த இயன் மோர்கன் மற்றும் ரவி போபரா பேட்டிங் செய்தனர்.
17வது ஓவரில் ரவி போபரா ஜடேஜா ஓவரில் 12 ரன்கள் விரட்ட இங்கிலாந்து அணியே வெற்றிபெறும் என எல்லோராலும் நினைக்கப்பட்டது. ஆனால் தோனி கேப்டன்சியின் பிரிலியன்ஸியும், பவுலர்களின் தன்னம்பிக்கையும் இந்தியாவை ஒரு மேஜிக் வெற்றிக்கு அழைத்துச்செல்லும்.
அதுவரை குறைவான ஸ்கோர் போட்டியில் 9,10 ரன்கள் என விட்டுக்கொடுத்திருந்த இஷாந்த் சர்மா, 18வது ஓவரில் நீண்ட நேரத்தில் களத்தில் நிலைத்துநின்ற இயன் மோர்கன், ரவி போபரா இருவரையும் அவுட்டாக்கி ஆட்டத்தையே தலைகீழாக திருப்பினார். அடுத்த ஓவரில் பட்லர் மற்றும் பிரெஸ்னன் விக்கெட்டை ஜடேஜா அள்ள, விக்கெட்டை வேட்டை நடத்தியது இந்தியா.
ஆட்டத்தில் அழுத்தம் அதிகமாக இங்கிலாந்து அணி அஸ்வின் வீசிய கடைசி ஓவரில் 15 ரன்களை அடிக்கவேண்டியிருந்தது. 5 பந்தில் 10 ரன்களை இங்கிலாந்து அடிக்க, இறுதிபந்தில் சிக்சர் அடித்தால் இங்கிலாந்து வெற்றி என்ற நிலை உருவானது. ஆனால் கடைசி பந்தை அஸ்வின் டாட் பந்தாக வீச, 2013 சாம்பியன்ஸ் டிராபியை தட்டித்தூக்கியது இந்திய அணி. 3 ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே சர்வதேச கேப்டனாக வரலாறு படைத்தார் தோனி.
காப்பாற்ற கடவுள் வரமாட்டார்..
வெல்லவே முடியாது என்று நினைத்த போட்டியை வென்றபிறகு பேசிய இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, “பாசிட்டிவாக இருப்பது முக்கியம். நான் அணி வீரர்களிடம் இதைத்தான் சொன்னேன், 'பந்துவீச்சில் நல்ல தொடக்கத்தை பெற முயற்சிப்போம். அது மிகவும் முக்கியமான ஒன்று. முடிவைப் பற்றி யோசிக்காதீர்கள். நீங்கள் செய்யவேண்டிய முதல் மற்றும் முக்கிய விஷயம் என்னவென்றால், மேலே பார்க்காதீர்கள், கடவுள் உங்களைக் காப்பாற்ற வரப்போவதில்லை. வெல்லவேண்டுமென்றால் நீங்கள் தான் அதை எதிர்த்துப் போராட வேண்டும். நாம் நம்பர் 1 அணி, அப்படியே விளையாடுவோம். நாம் தோற்கவேண்டுமென்றால் அவர்கள் ரன்களை அடிக்கவேண்டும், அவர்களுக்கு அதை எளிதாக்க கூடாது" என்று தோனி கூறியிருந்தார்.
இங்கிலாந்து அணியை அவர்களின் சொந்த மண்ணில் இறுதிப்போட்டியில் எதிர்கொண்டு 130 ரன்களை டிஃபண்ட் செய்து 16 பந்துக்கு 20 ரன்கள் என்ற நிலையிலிருந்து வீழ்த்தி வென்றதெல்லாம் காலத்திற்குமான தரமான சம்பவம்.