PT EXPLAINER | பதவி பறிப்பு மசோதா என்பது என்ன? விரிவான பார்வை
பதவி பறிப்பு மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மசோதாவை ஆதரிக்க, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மசோதா, 30 நாட்கள் சிறையில் இருக்கும் பிரதமர், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்க வழிவகுக்கும். இது ஜனநாயகத்திற்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
முக்கியமான சட்டமன்றத் தேர்தல்கள் எதிர்வர இருக்கின்றன. இந்நேரத்தில் வாக்குத்திருட்டு என புகார்களை எழுப்புகிறது காங்கிரஸ். பிகார் சட்டமன்றத் தேர்தலோ நெருங்கிவிட்டது. அந்த மாநிலத்துக்கென கோடிக்கணக்கில் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. பிரதமர் மோடி அங்கு பரப்புரை பொதுக்கூட்டங்களைத் தொடர்கிறார். இந்நேரத்தில் அரசியல் களத்தில் புயலை கிளப்பியிருக்கிறது நாடாளுமன்றத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சட்டமசோதா. மழைக்காலக் கூட்டத்தொடரில் இடியையும், மின்னலையும் இறக்கிய அந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. மசோதா நகல்களை மக்களவையிலேயே எதிர்க்கட்சி எம்.பிக்கள் கிழித்தெறிந்தனர். எதிர்ப்புகள் வலுத்துள்ள மசோதா என்ன சொல்கிறது? ஆளும் பாஜகவின் வாதம் என்ன? இந்தியா கூட்டணியின் எதிர்ப்புகளுக்கு காரணம் என்ன? விரிவாக அலசலாம்.
ஆகஸ்ட் 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் கடைசிநாள். இந்த கூட்டத்தொடர் முழுவதுமே அமளியோடு நீடித்த நிலையில் கடைசிநாளில், எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்துக்கு ஆளும் கூட்டணியினரும் பதிலடி கொடுக்க முற்பட்டபோது, கடும் மோதல் சூழல் உருவானது. அடுத்தடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர், பள்ளி மாணவர்களைப் போல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொள்கிறார்கள் என கடும் விமர்சனம் செய்தார். விவாதங்களில் கலந்து கொள்ளாமல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம் முதலே மக்களவை மற்றும் மாநிலங்களவையை எதிர்க்கட்சிகள் முடக்கி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். மசோதா நகல்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது கிழித்து எறியப்பட்டதால் ஆளும் கூட்டணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய இருக்கைகளில் இருந்து எழுந்து, அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களை அணுகினர். கைகலப்பு சூழல் ஏற்பட்டதற்கு ஆளும் கூட்டணி எம்பிகள்தான் காரணம் என எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டினர்.
எதிர்க்கட்சிகள் கடும் அமளி
பிரதமர், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு மேலாக காவலில் இருந்தால் அவர்களை பதவிநீக்கம் செய்வதற்கான மசோதாக்களை அமித் ஷா தாக்கல் செய்யும்போதே எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியின் மணிஷ் திவாரி மற்றும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் அசாதுதீன் ஓவைசி ஆகியோர் இது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை என குற்றம் சாட்டினர். அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை போன்ற பல்வேறு அமைப்புகளை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் அரசு இந்த புதிய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் என அவர்கள் வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகளின் தொடர்முழக்கம் மக்களவையில் எதிரொலித்ததால், கடும் அமளி நிலவியது.
அன்றைய நாளில் அரசமைப்புச் சட்டம் 130 திருத்த மசோதா 2025 யூனியன் பிரதேச அரசு திருத்த மசோதா 2025, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதற்கு வழியமைக்கும் மறுசீரமைப்பு மசோதாவையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என அவர் வைத்த கோரிக்கை குரல் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மசோதா சொல்வது என்ன?
சர்ச்சைக்குரிய பதவிநீக்க மசோதா என்ன சொல்கிறது என்று விரிவாக பார்க்கலாம். 130ஆவது அரசமைப்பு திருத்த மசோதாவின் படி, குறைந்தது 5 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் வழக்குகளில் பிரதமரோ, முதலமைச்சரோ, மத்திய, மாநில அமைச்சர்களோ கைதாகி, 30 நாட்கள் பிணையில் வராமல் காவலில் இருக்கும் பட்சத்தில், 31ஆவது நாள் அவர்கள் பதவி விலக வேண்டும். இல்லையெனில், அவர்களை குடியரசு தலைவரோ ஆளுநர்களோ பதவி நீக்கம் செய்யலாம். கைதாகும் நபர்கள் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளிக்காவிட்டாலும், அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
இந்த திருத்த மசோதாக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, பாரபட்சமான மத்திய அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சி முதல்வர்களை கைது செய்வது, எதிர்க்கட்சிகளை சீர்குலைப்பதற்கான வழி என விமர்சித்துள்ளார்.
பிரதமர் பேசியது என்ன?
இந்நிலையில், இச்சட்டம் குறித்து முதன்முறையாக, பிகாரில் கயாஜி நகரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் பேசினார். சிறைக்கு சென்றால் கனவுகள் அனைத்தும் சிதைந்து விடும் என்பதால், புதிய மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாக விமர்சித்துள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்கள் சிறையில் இருந்து கொண்டு ஆட்சியை நடத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்றார். காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சித்தலைவர்கள் ஊழல் செய்ததால் இந்த மசோதாவை எதிர்க்கின்றன என்று அவர் கூறினார்.
அவர் கூறுகையில், “நாங்கள் இந்த சட்டத்தை கொண்டு வந்ததற்கு காரணம், இந்த சட்டத்தில் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் அனைவரும் அடக்கம். இந்த சட்டம் நிறைவேறிய பின்னர், பிரதமர் முதல் முதல்வர் வரை யாராக இருந்தாலும் தவறு செய்திருந்து சிறைக்குச்சென்ற 31 ஆவது நாள் பதவியை இழப்பார்கள். அவர்கள் நாற்காலியை காலி செய்தே ஆகவேண்டும்” எனத் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு மதுபான கொள்கை முறைகேடு புகாரில் கைதான அப்போதைய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பதவி விலக மறுத்து சிறையில் இருந்த படி ஆட்சியை தொடர்ந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர், தங்கள் பாவங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்பதாலேயே எதிர்க்கட்சிகள் இச்சட்டத்தை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார்.
இது கறுப்பு சட்டம் அல்ல - அமித் ஷா
திருநெல்வேலியில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் அரசாக திமுக தலைமையிலான அரசு இருப்பதாக விமர்சித்தார். டாஸ்மாக், மணல் குவாரி, உள்கட்டமைப்பு, போக்குவரத்து, இலவச வேட்டி, 100 நாள் வேலைத்திட்டம் என அனைத்திலும் ஊழல் என்று அவர் பேசினார். பொன்முடி மீதான வழக்கையும், அமலாக்கத்துறை வழக்கில் செந்தில்பாலாஜி சிறையில் இருந்ததையும் சுட்டிக்காட்டிய அமித்ஷா, சிறையில் இருந்தபோது அமைச்சரவையில் செந்தில்பாலாஜி நீடித்தது குறித்து கேள்வி எழுப்பினார்.
அவர் கூறுகையில், “திமுகவில் உள்ளவர்கள் இந்த அரசமைப்பு சட்டத்திருத்தத்தை எதிர்க்கிறார்கள். இதனை கறுப்புச்சட்டம் என்கிறார்கள். ஸ்டாலின் அவர்களே, இது கறுப்பு சட்டம் அல்ல. நீங்கள் தான் ஊழல்வாதி, ஊழல செய்வதற்கு ஆட்சி செய்கிறீர்கள். நாட்டிலேயே ஊழல் செய்வதில் திமுகவுக்குத்தான் முதலிடம்” எனத் தெரிவித்திருந்தார். மேலும், பிரதமர் மோடி திருக்குறள் வழிநின்று ஆட்சியை நடத்துவதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் கேள்வி
மத்திய அரசின் இந்த மசோதாவிற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதவி நீக்க மசோதாவை, திமுக கடுமையாக எதிர்க்கும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், முன்னாள் அமைச்சர் இரகுமான் கான் எழுதிய 5 நூல்களை வெளியிடும் நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பவே, பதவி நீக்க மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மாநில முதல்வர் ஒருவர் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, 30 நாட்கள் பிணையில் வெளிவர இயலாவிட்டால் அவரது பதவி பறிபோகும் என கூறும் அரசியல் நோக்கர்கள், இது எதிர்க்கட்சிகளை முடக்கும் முயற்சி என தெரிவிக்கின்றனர். பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகளும் பறிபோக இம்மசோதா வழிவகை செய்தாலும், அவர்கள் முதலில் கைது செய்யப்படுவார்களா எனவும் கேள்வியை எழுப்புகின்றனர்.
சட்டம் சர்வதேச அளவில் தவறானது
இது தொடர்பாகப் பேசிய மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன், இந்த மசோதாவின் அடிப்படையே தவறானது எனத் தெரிவித்தார். அவர் கூறுகையில், “சட்டத்தின் பார்வையின் படி, குற்றம்சாட்டப்பட்ட ஒருவன் குற்றம்செய்தார் என நீதிமன்றத்தின் மூலம் நிரூபிக்கப்படும் வரை, அவர் குற்றம் செய்யாதவர் என்றுதான் பார்க்கப்பட வேண்டும்.இது சட்டத்தின் அடிப்படை மட்டுமல்ல. UDHRன்படியும் (Universal Declaration of Human Rights) அப்படித்தான் செய்ய வேண்டும். குறிப்பிட்ட செயல்முறையின் மூலம் நீதிமன்றம் செய்ய வேண்டியதை ஒரு சட்டத்தின் மூலம் நாடாளுமன்றம் செய்ய முடியாது. அப்படி ஒரு சட்டத்தால் அதைச் செய்ய முடியுமென்றால், அந்த சட்டம் சர்வதேச அளவில் தவறானது” என்றார்.
இந்த சட்டத்திருத்தம் எதிர்க்கட்சிகளை குறிவைப்பதாகவும், இச்சட்டத்திருத்தம், பாஜக ஆளும் மாநிலங்களில் எப்படி கடைபிடிக்கப்படும் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.
அய்யநாதன் கூறுகையில், “ஒரு குற்றச்சாட்டு வருகிறது என்றால், ஆதாரங்கள் ஏதும் இன்றி காவல்துறையை வைத்தோ அல்லது அமலாக்கத்துறையை வைத்தோ முக்கியமான பொறுப்பில் இருக்கும் ஒருவரை சிறைப்படுத்தினார்கள் என்றால் 31ஆம் நாள் அவருக்குப் பதவி போய்விடும். குற்றவாளி என்பதை நீதித்துறைதான் முடிவு செய்ய வேண்டும்.. அரசியலோ அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களோ அல்ல.
இவர்கள் செய்வதை ஒரு சர்வாதிகாரி கூட செய்ய வேண்டுமென நினைக்கமாட்டார்கள். ஆனால், இவர்கள் அதைச் செய்கிறார்கள். இது இவர்களது சர்வாதிகாரப்போக்கின் வெளிப்பாடே தவிர இது சட்டமும் கிடையாது நியாயமும் கிடையாது” என்றார்.
அதேவேளையில், இந்த புதிய விதிகளை நடைமுறைக்கு கொண்டுவருவதற்காக, 130ஆவது அரசமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை தேவை. அத்தகைய பெரும்பான்மை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இல்லை. எனவே மூன்று திருத்த சட்ட மசோதாக்களும், ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. மக்களவையில் இருந்து 21 உறுப்பினர்கள், மாநிலங்களவையில் இருந்து 9 உறுப்பினர்களைக் கொண்ட உறுப்பினர்கள் இந்த நிலைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். சட்டமன்றத் தேர்தல் நடக்கும் பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் ஒரே பெயரில் எண்ணற்ற வாக்காளர்கள் என்ற சர்ச்சைகளுக்கு மத்தியில், எதிர்க்கட்சிகளை குறிவைத்தும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் அமைச்சர்களை குறிவைத்தும் பதவி நீக்க சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்படுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை தொடுக்கின்றன. நிலைக்குழு பரிசீலனைக்குப்பிறகு இந்த சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டால், அதன் விளைவுகள் எதிர்க்கட்சிகளை நோக்கியே பாயும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கண்ணோட்டமாக இருக்கிறது.