2024 அரசியல் சர்ச்சைகள் | 'கடவுளால் அனுப்பப்பட்டவன் - மோடி' To 'அம்பேத்கர், அம்பேத்கர்.. - அமித்ஷா'
ஒவ்வொரு ஆண்டும் அரசியலில் சர்ச்சைகளுக்கு குறைவில்லாமல் இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன் அரசியல் தலைவர்கள் பேசி இருந்தது கூட மீண்டும் வைரலாக்கப்படும். அதை ஒட்டிய விவாதங்கள் நடக்கும்., 2024 ஆம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில் நாம் இருக்கும் நிலையில், நடப்பாண்டில் சர்ச்சைக்குள்ளான தலைவர்களின் கருத்துகளை சின்னதாக திரும்பிப் பார்ப்போம்.
”தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள், கிழக்கிந்தியர்கள் சீனர்கள்” சாம் பிட்ரோடா
காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா இந்திய மக்களது ஒற்றுமை குறித்து பேசியிருந்தார். தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போன்றும் கிழக்கிந்தியர்கள் சீனர்கள் போன்றும் வட இந்தியர்கள் வெள்ளையின மக்கள் போலவும் மேற்கு இந்திய மக்கள் அரபியர்கள் போலவும் இருக்கின்றனர் எனக் கூறியிருந்தார்.
அவரது கருத்து அரசியல் களத்தில் மிகப்பெரிய பேசுபொருளானது. பாஜக இவரது கருத்தினை கடுமையாக எதிர்த்தது. ஆந்திராவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் சாம் பிட்ரோடாவின் கருத்தை பிரதமர் மோடி விமர்சனம் செய்தும் பேசியிருந்தார்.
சாம் பிட்ரோடா கருத்துக்களில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்த காங்கிரஸ் கட்சியே தெரிவித்தது. மேலும், அவரது கருத்துகள் துரதிர்ஷ்டவசமானது என்றும் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவுத் தலைவர் பொறுப்பில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துவிட்டதாக செய்திகள் வெலியானதும் குறிப்பிடத்தக்கது.
”விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும் கொலைகளும் அரங்கேறின” - கங்கனா ரானாவத்
இமாச்சல் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியான கங்கனா ரனாவத், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், “மத்திய அரசின் புதிய வேளாண்மைச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும் கொலைகளும் அரங்கேறின. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது. இல்லையென்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும்.
விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மோடி அரசு, வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து தேசம் அறியாது. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது அவர்களுக்கு அதிர்ச்சியளித்தது. அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பிறகும் போராட்டங்கள் தொடர்ந்ததற்கு வெளிநாட்டு சதிகள்தான் காரணம்” என தெரிவித்திருந்தார்.
இவரது பேச்சுக்கு நாடுமுழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. விவசாயி சங்கங்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தன. பாஜகவே கங்கனா ரானாவத் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தது. அவரது கருத்து கட்சியின் கருத்து அல்ல என தெரிவித்திருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை தரக்குறைவாக பேசிய வேறொரு விவகாரத்திற்காக சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் என்ற பெண்மணி விமான நிலையத்தில் வைத்து கங்கணா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த சம்பவமும் நிகழ்ந்தது.
”முஸ்லீம்கள் வாழும் பகுதி பாகிஸ்தான்” - நீதிபதி சர்ச்சை கருத்து
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாச ஆச்சார் ஸ்ரீஷானந்தா, நில உரிமையாளர் – குத்தகைதாரர் தொடர்பான ஒரு வழக்கு விசாரணையின்போது, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பெங்களூருவின் கோரிபாளையா பகுதியை பாகிஸ்தான் என்று கூறியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என குறிப்பிட்டதற்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இவ்விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில், நீதிபதி மன்னிப்புக் கேட்டபின்பு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
”மாநில பகிர்வு வரியை குறைக்க வேண்டும்” - சர்ச்சையான பேச்சு
சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையம் எனும் அரசு சாரா சிந்தனைக் குழுவால், கடந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிதிநிலை அறிக்கை குறித்தான கருத்தரங்கு ஒன்றில் நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பிவிஆர் சுப்ரமணியம் கலந்துகொண்டு பேசினார்.
அதில், “பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மத்திய அரசின் வரியில் 50 விழுக்காடு மாநில அரசுக்கு வர வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் மோடி பிரதமரான பிறகு அவரின் சிந்தனை செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு மத்திய அரசின் வரியில் 42 விழுக்காடு மாநிலங்களுக்கு செல்ல வேண்டும். ஆனால் பிரதமர் அதனை 33 விழுக்காடாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால் அப்போதைய நிதி ஆயோக் தலைவர் ஒய்.வி.ரெட்டி இதனை ஒப்புக்கொள்ளவில்லை. இதனை அவர் மறுத்துள்ளார்” என்று தெரிவித்து இருந்தார். அரசு அதிகாரி ஒருவரின் வெளிப்படையான இந்த கருத்துகள் இந்தாண்டு தொடக்கத்தில், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சி இதைக் கடுமையாக விமர்சித்திருந்தது.
இஸ்லாமியர்கள் குறித்த மோடியின் பேச்சுகள்!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது, பிரதமர் மோடி 110 உரைகளில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.
குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பரப்புரை ஒன்றில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என சொன்னார்கள். தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தங்கத்தை எடுத்து நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும் விநியோகம் செய்ய காங்கிரஸ் கட்சி விரும்புகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார். நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தது. நாடு முழுவதும் பிரதமர் மோடி வெறுப்புப் பிரச்சாரத்தை செய்வதாகவும் காங்கிரஸ் தெரிவித்திருந்தது.
மகராஷ்டிர பரப்புரையில் சம்பவம் செய்த யோகி ஆதித்யநாத்
நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை மேற்கொண்ட உத்தரபிரதேச முதலமைச்சர்வ் யோகி ஆதித்யநாத், ‘பட்டேங்கே தோ கட்டங்கே' எனும் முழக்கத்தைப் பயன்படுத்தினார். இந்துக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த முழக்கத்தின் பொருள் ‘பிளவுபட்டால் நாம் வீழ்ச்சி அடைகிறோம்’ என்பதாகும். இந்த முழக்கம் பல பாஜக தலைவர்களால் தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தப்பட்டது.
அதேவேளையில், எதிர்க்கட்சிகள் இந்த முழக்கத்தை கடுமையாக விமர்சித்தன. மகாயுதியின் கூட்டணிக்குள்ளேயே யோகி ஆதித்யநாத்துக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. உத்தர பிரதேச அரசியல் களம் வேறு, மகாராஷ்டிர அரசியல் களம் வேறு. இது போன்ற முழக்கங்கள் எல்லாம் இங்கு செல்லுபடியாகாது என கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அக்னி வீரர்கள் ராகுல்காந்தி
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது ரேபரேலி தொகுதியில் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, “பிரதமர் மோடி இரண்டு வகையான ராணுவ வீரர்களை உருவாக்கியுள்ளார். ஒன்று பென்சன், கேண்டீன் என எந்த வசதியும் கிடைக்காத அக்னி வீரர்கள், மற்றவர்கள் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்” எனத் தெரிவித்திருந்தார். இது பாஜக தலைவர்களிடையே கடும் கண்டனங்களைப் பெற்றது. ராகுல்காந்தி தேர்தல் ஆணைய நடத்தை விதிமுமுறைகளை மீறியதாகவும், ராணுவத்தை அவமரியாதை செய்ததாகவும் தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகாரும் அளித்திருந்தது.
கடவுளால் அனுப்பப்பட்டவன்
மக்களவைத் தேர்தலின்போது, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “என் அம்மா இருந்தவரை நான் உயிரியல் ரீதியாகவே பிறந்தேன் என நம்பினேன். ஆனால், அவர் இறந்தபின் என் அனுபவங்களை எல்லாம் யோசித்து பார்த்தபின், கடவுள்தான் என்னை அனுப்பியுள்ளார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். என்னுடைய இந்த ஆற்றல் சாதாரண உயிரியல் உடலில் இருந்து வர முடியாது. கடவுளால் எனக்கு வழங்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.
பிரதமரின் இந்த கருத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது. காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, “சாதாரண மனிதர் இதைக் கூறியிருந்தால் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்துக்கள் வன்முறையாளர்களா?
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடந்தது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி, “நரேந்திர மோடி ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதி அல்ல. பாஜக ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதி அல்ல. ஆர்எஸ்எஸ் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதி அல்ல. தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவர்கள், 24x7 மணி நேரங்களும் வன்முறை, வெறுப்பு மற்றும் பொய்களை பரப்பி வருகின்றனர். அப்படிப்பட்டவர்கள் இந்துக்களாக இருக்க முடியாது” என பாஜகவினரைக் குறிப்பிட்டு பேசினார். ஆனால், ஒட்டுமொத்த இந்துக்களையும் ராகுல்காந்தி அவமதித்துவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியது. பாஜகவினர் ராகுல்காந்திக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க, காங்கிரஸ் கட்சியினர், ராகுல்காந்தி பேசிய முழுவீடியோவையும் பகிர்ந்து பதிலடி கொடுத்தனர்.
அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் - அமித்ஷா பேச்சும் போராட்டங்களும்
அரசியலமைப்பு உருவாகி 75 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது. அதில், மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அம்பேத்கர், “இந்த காலத்தில் அம்பேத்கர் என கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பதிலாக, பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
காட்டுத்தீ போல இந்த பேச்சு தேசமெங்கும் பற்றிக்கொண்டது. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தினை நடத்தின. எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான கண்டங்களைப் பதிவு செய்தனர்.