சத்தீஸ்கர்: சன்னி லியோன் பெயரில் போலி வங்கிக்கணக்கு... மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ 1,000 பெற்ற நபர்!
நடிகை சன்னி லியோன் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி, மத்திய அரசின் மகப்பேறு நிதி உதவியாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்ற நபரால் சதீஷ்கரில் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. சன்னி லியோனின் கணவர், ஜானி சின்ஸ் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து துறைரீதியான விசாரணை நடப்பதாக, சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மாவட்ட கலெக்டர் ஹரீஸ் தெரிவித்திருக்கிறார். மாவட்ட நிர்வாகம் புகார் கொடுத்தால் மோசடி செய்த நபர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாவட்ட காவல் துறையும் அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித்திட்டம் நடைமுறையில் இருப்பது போல, சத்தீஸ்கரில் மத்திய அரசின் மகதரி வந்தன் யோஜனா (Mahatari Vandan Yojana) என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ்தான் போலியான பெயரைப் பதிவுசெய்து, ஆன்லைன் வங்கிக் கணக்கின் மூலம் அந்த நபர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்றிருக்கிறார். “மோசடி செய்வதற்காக அல்லாமல்... அரசு திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தவே சன்னி லியோன் பெயரில் உதவித்தொகை பெற்றிருக்கக்கூடும்” என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.