EXCLUSIVE : “அம்பேத்கர் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்..” - விசிக தலைவர் திருமாவளவன்!
அமித்ஷாவின் சர்ச்சைக் கருத்து
அரசியலமைப்பு உருவாகி 75 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி, மாநிலங்களவையில் இரு நாள் விவாதம் நடந்தது. இரு நாட்கள் விவாதத்தின் நிறைவாக மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்த காலத்தில் அம்பேத்கர் என கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பதிலாக, பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். அந்தவகையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் முன்பு கூடிய எதிர்க்கட்சியினர், தங்களது கைகளில் அம்பேத்கரின் படங்களை ஏந்தி ‘ஜெய் பீம்’ என்று முழக்கமிட்டதுடன், அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சூழலில், அம்பேத்கரை முழுமையாக மதிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
டாக்டர் அம்பேத்கர் தொடர்பாக அமித்ஷா பேசியது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “புரட்சியாளர் அம்பேத்கர் விசுவரூபம் எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும்!” எனத் தெரிவித்திருந்தார்.
வெறுப்பின் வெளிப்பாடு
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பேசிய திருமாவளவன், “அமித்ஷாவின் பேச்சு அவர் எந்த அளவுக்கு அம்பேத்கர் மீதும், அவர் வகுத்துத்தந்த அரசமைப்புச் சட்டத்தின்மீதும் வெறுப்பில் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்ந்த இடத்தில் சர்வதேச நினைவிடத்தை எழுப்பிய வரலாற்றை பெருமையோடு சொல்கிறார்கள். அதேபோல, அவர் மும்பையில் எரியூட்டப்பட்ட தளத்தை புதுப்பித்திருக்கிறார்கள். அங்கு அம்பேத்கருக்கு 400 அடியில் சிலை எழுப்பப்போகிறோம் என்றெல்லாம் பெருமையோடு சொல்கிறார்கள்.
இப்படி ஒருபுறம் அம்பேத்கரின் பெருமையைப் பேசிக்கொண்டே மறுபுறம் அவருடைய கனவைத் தகர்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக அவர் வகுத்தளித்துள்ள அரசமைப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்கிற அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்கள். அரசமைப்புச் சட்டதினத்தை கொண்டாடிக்கொண்டே இருநாள் விவாதத்தினை நடத்தினார்கள். ஆனால், அதற்கு எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டம் பெரும்போராட்டம். எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்குப் பிறகே பாஜக அரசு அல்லது மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா அதற்கு இணக்கம் தெரிவித்தார். இரு தினங்கள் அதைப்பற்றி பேசுவதற்கு ஒப்புக்கொண்டார்கள்.
வெயிற்றெரிச்சலைக் கொட்டுகிறார்கள்
அந்த இரு தினங்களும் எல்லா தலைவர்களும், பாஜக சார்ந்த உறுப்பினர்கள் அனைவருமே புரட்சியாளர் அம்பேத்கர் குறித்தும், அரசமைப்புச் சட்டத்தின் தேவை குறித்தும் விரிவாகப் பேசினார்கள். இதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
காங்கிரஸ் கட்சியை பழித்துப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, அம்பேத்கரை இழிவு படுத்தியுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் தன்னுடைய பங்களிப்பால், தன்னுடைய அறிவாற்றலால் இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். அவருடைய பங்களிப்பைத் தவிர்த்துவிட்டு இந்தியா ஒரு அங்குலம் கூட நகர முடியாது எனும் அளவிற்கு அவருடைய உழைப்பு மிகப்பெரிய அளவிற்கு இங்கே இருக்கிறது. இதை அனைத்து கட்சிகளும் அங்கீகரிக்கும் நிலையில், பாஜகவால் அங்கீகரிக்க முடியவில்லை. அவர்களது வயிற்றெரிச்சலைக் கொட்டுகிறார்கள். அதைத்தான் இன்று அமித்ஷாவும் செய்திருக்கிறார்.
பிரதமர் மோடி சொன்னது நடிப்பு
பாஜக அம்பேத்கரை மதிக்கிறது என பிரதமர் மோடி சொன்னது நடிப்பு. எளிய மக்களை எய்க்கிற எத்து வேலை. அவர்கள் உண்மையிலேயே அம்பேத்கரை மதிப்பதாக இருந்தால், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான சட்டங்களை ஏன் கொண்டுவந்தார்கள்? ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கூட அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான தாக்குதல்தான். அரசமைப்புச் சட்டம் 370ஐ நீக்கி ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக மாற்றியதும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. சிஏஏ போன்ற சட்டங்களைக் கொண்டு வந்ததும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்” எனத் தெரிவித்துள்ளார்.