தமிழ்நாட்டு மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? யார் மேல் தவறு? தீர்வு என்ன? முழுமையான அலசல்
நெய்தல் வாழ்வு
“கடல் சார்ந்த வாழ்வு இடர்களால் ஆனது. நெய்தல் வாழ்க்கையின் சாரத்தை 2 வார்த்தைகளில் குறித்து விடலாம். சங்ககாலம் முதல் தொழில் நுட்பமும், தொலைத் தொடர்பும் மலிந்து கிடக்கும் இந்நாள்வரை நெய்தலின் உரிப்பொருள் இரங்கலும், இரங்கல் நிமித்தமாகவே உள்ளது” காலச்சுவடு 2010 ஆம் ஆண்டு ஜனவரி இதழில் இப்படி மீனவர்கள் படும் இன்னல்கள் தொடர்பான கட்டுரையில் இப்படி எழுதி இருந்தார் கட்டுரையாளர் வறீதையா கான்ஸ்தந்தின். கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழிந்துவிட்டது இப்போது வரையிலும் அந்த நிலை மாறவில்லை என்பது ஊரறிந்த செய்தி.
படகோட்டி படத்தின் ’தரை மேல் பிறக்க வைத்தான் – எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்’ பாடலில் இடம்பெற்ற
“முடிந்தால்
முடியும் தொடர்ந்தால்
தொடரும்
இதுதான் எங்கள்
வாழ்க்கை...
ஒருநாள்
போவார் ஒருநாள்
வருவார் ஒவ்வொரு
நாளும் துயரம்..” என்ற வாலியின் வரிகள் மீனவர்களின் உயிர்களுக்கு எந்நாளும் உத்தரவாதம் இல்லை என்பதை இன்றும் மெய்பிக்கிறது.
ஆரம்பம் முதலே இருந்த கஷ்டங்கள் குறித்து இராமேஸ்வர மீனவரான ஷேஷு இருதயம் பேசினார். அவர் கூறுகையில், “1970களில் இருந்தே ராமேஸ்வரத்தில் தொழில்கள் ஏதும் இல்லாமல் ஆகிவிட்டது. நாங்கள் மூக்கையூர் போன்ற கடல் அலை அதிகம் இருக்கும் இடங்களில் தொழில் செய்தவர்கள். உயிர்சேதம் பொருள் சேதம் எல்லாம் அதிகமிருந்தது.
பின்னர் ராமேஸ்வரம் சென்றால் நாம் நன்றாக பிழைத்துக்கொள்ளலாம். பிள்ளைகளை நன்றாக படிக்கவைக்கலாம் என்ற குறிக்கோளுடன்தான் இங்கு வந்தோம். இப்போது நடக்கும் சூழல்களைப் பார்த்தால், இனிமேல் எந்த இடத்திற்குப் போவோம், இனி வரும் சந்ததிகளுக்கு எதை வைத்துவிட்டுப் போவோம் என்ற மனக்கஷ்டம்தான் இருக்கிறது. எனக்கும் 67 வயதாகிவிட்டது. என் பிள்ளையும் என் பேரனும் இந்த உலகத்தில்தானே வாழ்ந்தாக வேண்டும். மத்திய மாநில அரசுகள் எல்லோருமே அரசியல்தான் செய்கிறார்கள்” என்கிறார் வேதனையுடன். இவரது படகும், இவர் மகனது படகும் (மதிப்பு 40 லட்சம்) இலங்கை கடற்படையால் பிடிபட்டுள்ளது என்பது வேதனையான செய்தி.
இலங்கை அதிபர் வருகை
மீனவர்களும் அவர்களது பிரச்னைகளும் அரசியலாக மட்டுமே பார்க்கப்படுவதாக எப்போதும் குற்றச்சாட்டுகள் உண்டு.. மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவரகளது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், அவர்களை மீட்கக்கோரி போராட்டங்கள் நடத்தப்படுவதும், தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும் தொடர்கதை.
ஓரிரு தினங்களுக்கு முன்புகூட இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக இந்தியாவிற்கு வந்திருந்தார். அவரிடம் பிரதமர் மோடியும், மீனவர் வாழ்வாதாரத்தை மனிதாபிமானத்தோடு அணுகும்படி கூறியிருந்தார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மீனவர்கள் தொடர்பாக இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்து, பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகவிடமும் கூறியிருந்தார்.
ஆரம்பப் பிரச்னைகள் என்ன?
இந்நிலையில் ஆரம்பப் பிரச்னைகள் என்ன என்பது குறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் எமரால்டிடம் பேசினோம். அவர் கூறியதாவது, “1974ல் கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தபிறகும் கூட, 1983ல் இனக்கலவரம் ஆரம்பிக்கும் வரை நாங்கள் எவ்வித பிரச்னையும் இல்லாமல், நெடுந்தீவு, கச்சத்தீவு, எருமைத்தீவு போன்ற இடங்களில் தங்கித்தான் மீன்பிடித்தோம். அதேபோல், இலங்கை மீனவர்களும் ராமேஸ்வரம், மண்டபம், தொண்டி போன்ற இடங்களில் தங்கி அவர்கள் பிடிக்கும் மீன்களை இங்கு கரைகளில் காயவைத்து கொண்டு செல்வார்கள். அங்கு இனக்கலவரம் ஆரம்பித்தபின், மீனவர்கள் யார்? LTTE யார்? என்று தெரியாமல் நடத்தப்பட்ட தாக்குதலில், பல நேரங்களில் நிறைய உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளோம்.
1974 ஒப்பந்தத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்ததற்குப் பின்பும் கூட, அதன் ஆறாவது சரத்தில் இருநாட்டு மீனவர்களும் மீன்பிடிக்கலாம் என்று உள்ளது. அதேபோல், கச்சத்தீவில் தங்கலாம், திருவிழாக் காலங்களில் பாஸ்போர்ட் இல்லாமல் கச்சத்தீவிற்குச் செல்லலாம் என்றெல்லாம் உள்ளது” எனத் தெரிவித்தார்.
ஆரம்ப காலங்களில் சுமூகமாக இருந்த நிகழ்வு பின்பு இருநாட்டு மீனவர்களின் உயிர்களுக்கே ஆபத்து விளைவிக்கும், வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஒன்றாக மாறியது எப்படி என்பது குறித்தும் கேள்விகள் எழாமல் இல்லை. எமரால்டு கூறுகையில், “மத்தியில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் மீனவப் பிரச்னையில் மெத்தனப் போக்குடன் இருந்த காரணத்தினால் கச்சத்தீவை முழுவதுமாக அவர்களே எடுத்துக்கொண்டனர். இராணுவத் தளவாடங்களையும் அமைத்துக் கொண்டனர். இது மீனவர்களுக்கும் ஏன் இந்தியாவுக்குமே கடுமையான அச்சுறுத்தலாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
குறைவான எல்லைப் பரப்பு
இந்திய கடற்பரப்பு மிகக் குறைவாக இருப்பது பிரதான பிரச்னையாக பார்க்கப்படுகிறது. மீன்கள் எப்போதும் ஒரே இடத்திலே இருக்காதுதானே, அதற்காக, மீன்களைத் தேடிச் செல்கையில் எல்லை தாண்டியதாக எங்களைக் கைது செய்கிறார்கள் என்கின்றனர் மீனவர்கள்.
எமரால்ட் கூறுகையில், “கச்சத்தீவுதான் மீன்கள் உற்பத்தியாகும் இடம். அது இலங்கைக்கு சென்றுவிட்டதால், தமிழக மீனவர்களது மீன்பிடிக்கும் பரப்பு மிகவுக் குறைந்துவிட்டது. எனவே எல்லையைத் தாண்டும் சூழல்தான் உள்ளது. அது தவிர்க்க முடியாத ஒன்று” என்கிறார். ஷேஷு இருதயம் கடல் தொலைவு மிகக்குறைவாக இருப்பதே மிக முக்கியமான காரணம் என்கிறார். “எந்த ஒரு நாட்டுக்கும் இவ்வளவு குறைவான தொலைவிற்கு ஒரு எல்லை கிடையாது. அதிலும் ராமநாதபுரத்தில் கடல் தொழில்தான் அதிகம். இந்த 12 நாட்டிக்கல் மைல் தொலைவிற்குள்ளேயே எத்தனை ஜனங்கள் பிழைக்க முடியும். நாளொன்றுக்கு எவ்வளவு மீன்கள்தான் உற்பத்தியாகும். அது பருவமடைய எவ்வளவு காலம் ஆகும்” எனக் கேள்வி எழுப்புகிறார்.
“கச்சத்தீவுதான் மீன்கள் உற்பத்தியாகும் இடம். அது இலங்கைக்கு சென்றுவிட்டதால், தமிழக மீனவர்களது மீன்பிடிக்கும் பரப்பு மிகவுக் குறைந்துவிட்டது. எனவே எல்லையைத் தாண்டும் சூழல்தான் உள்ளது. அது தவிர்க்க முடியாத ஒன்று”
ஒருமுறை கடலுக்குள் செல்ல ரூ. 1 லட்சம் முதலீடு தேவை
2016 ஆம் ஆண்டு சமர்பிக்கப்பட்ட ஆய்வு ஒன்று (An economic analysis of loss in fishing days due to fishermen strike: A case study in Rameswaram fish landing centre B. Johnson and R. Narayanakumar) ராமநாதபுரத்தில் மட்டும் மொத்த மக்கள் தொகையில் 22% பேர் மீனவர்களாக இருக்கின்றனர் எனத் தெரிவிக்கிறது. தற்போது ராமநாதபுரத்தில் மட்டும் ஏறத்தாழ 1500 விசைப்படகுகள் இருக்கிறது. ஒரு படகு கடலுக்கு சென்று வருகிறதென்றால், 25 குடும்பம் அதில் சம்பந்தப்பட்டிருக்கும் என்கிறார் இருதயம். அதாவது, ஐஸ் கட்டிகளை தயாரிப்பவர், படகினை சரிபார்ப்பவர், படகுகளுக்குத் தேவையான பொருட்களை விற்பவர் இப்படி ஒவ்வொரு துறை சார்ந்தும் இயங்குபவர்களது குடும்பங்கள் படகுகள் கடலுக்குள் சென்று மீன்படித்து வருவதை மட்டுமே நம்பியுள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சம் மக்களது வாழ்வு அந்த கடலினை நம்பித்தான் இருக்கிறது.
மேலே குறிப்பிட்டுள்ள ஆய்வு, 2014 ஆம் ஆண்டில் கடலுக்கு செல்ல வேண்டும் என்றால் இழுவை மீன்பிடிப் படகுகளுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.26,744 ரூபாய் வேண்டும் என்கிறது. ஆனால், தற்போது ஒருமுறை கடலுக்கு சென்றுவர கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்படும் என்கிறார் இருதயம். “முதலில் நாட்டுப் படகுகளில்தான் மீன்பிடித்தோம். இப்போது விசைப்படகுகள் வந்தபின், நாளுக்கு நாள் விரைவுத் தொழிலாக மாறிவிட்டது. குதிரைத்திறன் அதிகம் கொண்ட போட்டுகள்தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே அப்போது உள்ள செலவுக்கும், இப்போது உள்ள செலவுகளுக்கும் அதிகம் வித்தியாசம் இருக்கிறது. இன்றைய நிலையில் ஒரு போட் கடலுக்கு செல்ல வேண்டும் என்றால் 600 லிட்டர் டீசல் வேண்டும். 8 பேர் வேலைக்கு வேண்டும். அவர்களுக்கு ஊதியம், பேட்டா, உணவு முதலியவை ஏற்பாடு செய்ய வேண்டும். ஐஸ்கட்டிகள் வேண்டும். மொத்தமாக, குறைந்தது ரூ. 1 லட்சம் வரை வேண்டும்” என்கிறார்.
2014 ஆம் ஆண்டில் கடலுக்கு செல்ல வேண்டும் என்றால் இழுவை மீன்பிடிப் படகுகளுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.26,744 ரூபாய் வேண்டும் என்கிறது. ஆனால், தற்போது ஒருமுறை கடலுக்கு சென்றுவர கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்படும்
1 லட்சம்பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க முடியுமா?
அதேபோல மீனவர்கள் மீன்பிடிக்கும் நாட்களும் கடந்த காலங்களை விட தற்போது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை கடற்படை மீனவர்களை விடுவிக்க வேண்டும். நடத்தப்படும் ஸ்ட்ரைக்குகள், மானியம் தொடர்பாக நடத்தப்படும் ஸ்ட்ரைக்குகள், புயல் மழை போன்ற காலங்களில் மீன்பிடிக்க தடைவிதிப்பது போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
மீனவர்களுக்கு அரசு சார்பில் கிடைக்கும் மானியமோ, உதவிகளோ போதுமானதாக இல்லை என்கின்றனர் பேசியவர்கள். இதுதொடர்பாக மீன்பிடித் தொழிற்சங்கத் தலைவர் கருணாமூர்த்தியிடம் பேசினோம். “1 லட்சம் பேருக்கு அரசால் வேலை வாய்ப்பை உருவாக்க முடியுமா? இதில் 50% மானியத்தில் டீசல் கொடுத்தார்கள் என்றால் லட்சம் பேரின் வேலை வாய்ப்பு தங்கு தடையின்றி இருக்கும்தானே?” என்கிறார். அரசு மானியமாக அளிக்கும் டீசல் மூன்று முறை கடலுக்குள் சென்று வர மட்டுமே போதுமானதாக இருக்கிறது என்கின்றனர்.
மீன் வளம் குறைவதற்குக் காரணம் என்ன?
கடந்த காலங்களை ஒப்பிடுகையில், மீன் கிடைப்பது குறைந்து கொண்டே வருகிறது என்பது மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியது. இந்தியக் கடற்பரப்பில் மீன்கள் வளம் குறைவதற்கான காரணம் குறித்து பேராசிரியர் ஒருவர் கூறியதாவது, “மீன்வளம் குறைவதற்கு காலநிலை மாற்றம் மிக முக்கியக் காரணம். ஒருகாலத்தில் பவளப்பாறைகள் அதிகமாக இருந்தது. இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. இதற்கு இரு காரணங்கள். முதலில் மனிதவள தவறுகள். இயந்திரப் படகுகள், கப்பல்கள் வெளியேற்றும் கழிவுகள் பவளப் பாறைகள் குறைவதற்கு முக்கியக் காரணம். பவளப் பாறைகள் அதிகமாக இருந்தால்தான் மீன்களும் அதிகளவில் இருக்கும். உலக வெப்பமயமாதல் மற்றொரு காரணம். தனக்கு ஏற்ற தட்பவெப்பம் உள்ள இடங்களுக்குத்தான் மீன்கள் செல்லும்.
மழைநீர் கடலில் கலப்பது அதிகமாக இருந்தால்தான் இடம்பெயரும் மீன்கள் கடலுக்கு வரும். இடம்பெயரும் மீன்கள் இனப்பெருக்கத்தை முடித்துக்கொண்டு மீண்டும் தனது சொந்தப்பகுதிகளுக்கு சென்றுவிடும். அணைகள் மற்றும் பிற தடைகளின்மூலம் அனைத்தையும் அடைத்துவிட்டோம்.
அடுத்தது, மக்கள் தொகை பெருக பெருக, கடலில் கலக்கும் கழிவுகள் அதிகமாகிவிட்டது. இதனால் மீன்களுக்கு ஏற்ற சூழல் இருக்காது. இதனால், மீன்களின் இனப்பெருக்கமே முற்றிலும் தடைபடுகிறது. மீன்வளம் குறைவதற்கு இவைகள் எல்லாம் காரணங்களாக இருக்கிறது” என்றார்.
குறைதீர் கூட்டங்கள் நடப்பதில்லை...
மீனவர்களுக்காக அரசு கொண்டு வந்த திட்டங்கள் குறித்தும் மீனவர்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. . இதுதொடர்பாக கருணாமூர்த்தி கூறுகையில், “மீன்பிடி ஒழுங்கு முறைச் சட்டங்களும், அதில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களும் முன் யோசனையற்ற சட்டங்கள். மின்பிடித் தொழில் மிகப்பெரிய பாதிப்பினை சந்தித்ததற்கு இந்த சட்டங்களும் ஒரு காரணம். புயல் காலங்களில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் மீனவர்கள் எப்படி வாழ்வார்கள். அதற்கு நிவாரணங்களாக எதாவது கொடுங்கள். தற்போது நாட்டுப்படகு மீனவர்கள் கூட அரபுபகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். இதில் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.
மீனவர்கள் குறைதீர் கூட்டங்களே நடப்பதில்லை. இந்த திட்டம் வந்து 10 வருடங்களுக்கும் மேல் ஆளாகிறது. ஆனால், கன்னியாகுமரியில் மட்டும்தான் முறையாக நடத்தப்படுகிறது. தற்போது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தினால் போதும் என தமிழக அரசே உத்தரவு போடுகிறது. நடக்காத கூட்டத்தினை முறையாக நடத்தாமல், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்தலாம் என்பது தவறுதானே” என்றார்.
புயல் காலங்களில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் மீனவர்கள் எப்படி வாழ்வார்கள். அதற்கு நிவாரணங்களாக எதாவது கொடுங்கள்.
முன்னோடியான கேரளா
கடற்கரையோர பிரச்னைகளாக மட்டுமே பல விஷயங்களைப் பட்டியலிடுகிறார் கருணாமூர்த்தி. “கடற்கரையோரம் கட்டுமானங்களைக் கட்டுவதோ, இறால் பண்ணைகளை அமைப்பதோ கரையில் இருந்து 200 மீட்டர் தள்ளித்தான் இருக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது. ஆனால், தற்போது கடலும் இறால் பண்ணைகளும் இரண்டற கலந்துவிட்டது. இதனால் நிலப்பகுதி கடல் அரிப்புக்கு உள்ளாகிவிட்டது. தற்போது புதிதாக கொண்டு வந்துள்ள சட்டமோ கரையில் இருந்து இறால் பண்ணைகள் 50 மீட்டர் தள்ளி இருந்தால் போதுமென்கிறது. சட்டவிரோதமாக செய்த தவறுகளை அங்கீகரிக்கும் வகையில் ஒன்றிய அரசு சட்டங்களைக் கொண்டு வருகிறது.
இதைத்தாண்டி கடலுக்குள் காற்றாலை கொண்டு வரும் திட்டங்கள் இருக்கிறது. அதானி ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்டால் எல்லாமே சரியாகிவிடுமா? கடற்கரைகள் கேலிக்கை விடுதிகளுக்கும், இறால் பண்ணைகளுக்கும், காற்றாலைகளுக்கும் தாரைவார்க்கப்படுகிறது. மீனவர்களிடம் இருக்கும் தொழில் வாய்ப்புகளை எல்லாம் பறித்துவிட்டு அவரகளுக்கு நிவாரணம் கொடுப்பது, மீனவர்களை சாகாமல் மட்டும் வைத்திருப்பதற்குச் சமானம்” என வேதனையுடன் தெரிவிக்கிறார்.
இதைத்தாண்டி கடலுக்குள் காற்றாலை கொண்டு வரும் திட்டங்கள் இருக்கிறது. அதானி ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்டால் எல்லாமே சரியாகிவிடுமா?
தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், கேரள அரசாங்கம் மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக ஒரு பார்வை உண்டு. கருணா மூர்த்தி அதுதொடர்பாகவும் பேசினார், “கேரள அரசு இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கிறது. மீனவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. பல முன்மாதிரியான திட்டங்களைக் கொண்டு வருகிறது. சர்வதேச சந்தை நிலவரங்கள் கேரள அரசுக்கு மட்டும் தெரிகிறதே எப்படி? கடல் உணவுப் பொருட்கள் கேரளாவில் விற்பனை ஆவதையும், தமிழ்நாட்டில் விற்பனை ஆவதையும் ஒப்பிடுப் பாருங்கள். தமிழ்நாட்டில் சிண்டிகேட் அமைத்துக் கொள்ளை அடிக்கிறார்கள். அரசு இவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. விலை குறைவு தொடர்பாக சிண்டிகேட் சொல்லும் காரணங்களை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. அந்த காரணங்கள் சரியா தவறா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டாமா?” எனத் தெரிவித்தார்.
சர்வதேச சந்தை நிலவரங்கள் கேரள அரசுக்கு மட்டும் தெரிகிறதே எப்படி? கடல் உணவுப் பொருட்கள் கேரளாவில் விற்பனை ஆவதையும், தமிழ்நாட்டில் விற்பனை ஆவதையும் ஒப்பிடுப் பாருங்கள். தமிழ்நாட்டில் சிண்டிகேட் அமைத்துக் கொள்ளை அடிக்கிறார்கள்.
முடிவாக.....
முடிவாக, மேலே கூறிய ஒன்றுதான். மீனவர்களது வாழ்க்கை இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாகவே இருக்கிறது. எல்லைப் பிரச்னை, அரசுத் திட்டங்கள் அதிகாரிகளால் முறையாக செயல்படுத்தப்படாதது, திட்டங்களில் இருக்கும் தவறுகள், அரசு கொண்டு வந்த சட்டங்களில் இருக்கும் சிக்கல்கள், காலநிலை இப்படி ஏகப்பட்ட விஷயங்களைத் தாண்டித்தான் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டியதுள்ளது. அவர்களுக்கு தேவையான வசதிகளை முறையாக செய்துகொடுப்பதே மிக முக்கியமாக உள்ளது.
மீனவர்களின் பிரதான கோரிக்கையாக இருப்பது, “நீங்கள் மீனவர்களுக்கான நலத்திட்டங்களோ, கடல்சார்ந்தோ அல்லது கடற்கரையிலோ ஏதேனும் திட்டங்களைக் கொண்டுவந்தால் தயவு செய்தி எங்களுடன் ஆலோசனை செய்யுங்கள்” என்பது. பயனற்ற திட்டங்கள் எங்களுக்கு எதற்கு என கேள்வி கேட்கின்றனர். வாழ்வே கடற்சார்ந்து இருக்கும்பொழுது, சிக்கல்களும் எங்களுக்கு மட்டும்தான் தெரியும் எனத் தெரிவிக்கின்றனர் வேதனையுடன்.