Bihar Election 2025 | தீர்மானிக்கும் சக்தியாகும் பட்டியல் சமூகம்..! அறிந்துகொள்ள வேண்டியவை என்ன?
பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக வாக்குவங்கிகளை மேலும் கூர்மைப்படுத்தியது. பட்டியல் சமூக மக்கள் 19.65% ஆக இருப்பதால், அரசியல் கட்சிகள் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றன.
ஒரு மாநிலத்திற்கான தேர்தல் தேதி நெருங்க நெருங்க புதுப்புது விவாதங்கள் உருவாக வேண்டும். தங்களது திட்டங்களை, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வாக்குறுதிகளாக அரசியல் கட்சிகள் முன்வைக்கும்போது, அவையெல்லாம் சாத்தியம்தானா? இல்லை, தேர்தலுக்கான கவர்ச்சிகரமான வாக்குறுதியா? என்பதெல்லாம் அடுத்தக்கட்ட விவாதங்களாக இருக்க வேண்டும். ஆனால், பிகாரில் இம்முறையும் சாதிய விவாதங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. கட்சிகளின் கூட்டணிகளும் அதன் கொள்கைகளும் விவாதிக்கப்படுவதற்கு பதிலாக, சாதிய கூட்டணிகளும் அதன் கணக்குகளுமே முன்னணியில் இருக்கின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தத் தேர்தல் மூன்று தரப்பினரைச் சுற்றியே இருக்கப்போகிறது. இளைஞர்கள், பட்டியல் சமூக மக்கள், இஸ்லாமியர்கள். இதில் மிகவும் முக்கியமானவர்கள்.. இக்கட்டுரையின் காரண கர்த்தர்கள் பட்டியல் சமூக மக்கள்.. என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன. விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில அரசாங்கம் அறிவித்தது. கணக்கெடுப்புகள் இரண்டு கட்டங்களாக நடந்தன. முறையே ஜனவரியில் முதல்கட்டமும், ஏப்ரலில் இரண்டாம் கட்டமும் தரவுகள் சேகரிக்கப்பட்டு, கணக்கெடுப்பு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி, மாநிலத்தில்,
மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBCs): 36.01%
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs): 27.12%
பட்டியலின மக்கள் (SCs): 19.65%
பொது வகுப்பு (General Category): 15.52%
பட்டியலின பழங்குடி மக்கள் (STs): 1.68%
இருக்கின்றனர்.
நிர்ணயிக்கும் சக்திகளாக பட்டியல் சமூக மக்கள்
சமூகங்களின் கூட்டணிகளே வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் ஒரு மாநிலத்தில், சாதிவாரி கணக்கெடுப்புகள் விவாதங்களை உண்டாக்கியது. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அத்தகைய உரையாடல்கள் மாநிலத்தில் இருந்தபோதும், இக்கணக்கெடுப்பு உரையாடல்களை மேலும் கூர்மைப்படுத்தியது. உதாரணத்திற்கு, குறிப்பிட்ட சமூகத்தின் மக்கள்தொகை சதவீதமும், சட்டமன்றத்தில் அவர்களுக்கு இருக்கும் பிரதிநிதித்துவத்தின் சதவீதமும் பேசுபொருளானது. 'நாங்கள் இத்தனை சதவீதம் இருக்கிறோம்; ஆனால், எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை' என மக்கள் நியாயமான கேள்விகளை எழுப்பினர்.
ஆனால், அரசியல் கட்சிகளிடம் இது வேறுமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது. உதாரணத்திற்கு, பட்டியலின சமூக மக்கள் (SCs) மாநிலத்தில் 19.65% இருக்கிறார்கள் என்பது உறுதியான நிலையில், அரசியல் கட்சிகள் அவர்களை நோக்கி தங்களது உரையாடல்களை நிகழ்த்த ஆரம்பித்தன. அந்த சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கவும் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவும் அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டனர். முக்கியமாக, கட்சிகளின் பொதுக்கூட்டங்களிலும், பேரணிகளிலும் அம்மக்களுக்கான விஷயங்களை அரசியல் கட்சிகள் பேச தலைப்பட்டன.
ஏன் இந்த உரையாடல்கள் மிக முக்கியமானது?
2011ல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் மிகவும் வறுமையில் இருக்கும் கடைசி 9 சமூகங்களும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவை. அதிலும் கடைசியாக இருப்பது, 'தலித்துகளுக்குள் தலித்' என கருதப்படும் முஷாஹர் சமூகம். இந்த நிலையே தற்போது வரை தொடர்கிறது. சமீபத்திய சாதிவாரி கணக்கெடுப்பில் கூட பட்டியல் சமூக மக்களில் பெரும்பாலானோர் நிலமற்று இருக்கிறார்கள் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக, அவர்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகளை பெருமளவில் எதிர்கொள்பவர்கள். அதிலும், பட்டியல் சமூகங்களுக்கு இடையில்கூட சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன என்பது வேதனையான ஒன்று.
சமூக நீதிக்கான மண் பிகார் என பேசும் கட்சிகள் இந்த விஷயத்தில் என்ன செய்தன என்பது விவாதத்திற்குறியது. ஏனெனில் சமூக நீதி எனும் சொல்லில்தான் அந்த மாநிலம் நீண்டகாலமாக வழிநடத்தப்பட்டிருக்கிறது. கர்பூரி தாக்கூர் (ஓபிசிகளுக்கான அடையாளமாகக் கருதப்படுபவர்), போலா பஸ்வான் சாஸ்திரி (எஸ்சி), bp மண்டல் (ஓபிசி), அப்துல் கஃபூர் (இஸ்லாமியர்), ராம் சுந்தர் தாஸ் (எஸ்.சி) என பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சராக இருந்தபோதும் கூட அனைத்து சமூக மக்களுக்கான சரியான அதிகார பரவலாக்கம் நிகழவில்லை என்பது மிகவும் முக்கியமான விஷயம். மேலும் ஜெயபிரகாஷ் நாராயணன், ஜக்ஜீவன் ராம் போன்று தேசிய அளவில் புகழ்பெற்ற தலைவர்கள் அங்கு பிறந்திருந்தும் அது நடக்கவில்லை.
ஆதிக்கம் செலுத்தும் 5 தரப்பினர்
கடந்த ஓரிரு தேர்தல்களில் இந்த நிலை இன்னும் மோசமானதாக மாறியது. ஏனெனில், மாநில அரசியலில் யாதவர்கள், ராஜபுத்திரர்கள், கோரி - குஷ்வாகா, இஸ்லாமியர்கள், பூமிஹார்கள் என 5 சமூகங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. சட்டமன்றத்தின் மொத்த எண்ணிக்கையான 243 இடங்களில் பாதிக்கும் மேல் இவர்களே இருக்கின்றனர். இன்னுமொரு தரவு இதை விரிவாக விளக்கும். கடந்த 3 சட்டமன்ற தேர்தல்கள் - 2010, 2015, 2020 - மொத்தமுள்ள 243 இடங்களில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள், ஒரே தொகுதியில் மீண்டும் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இன்னும் தெளிவாக உதாரணத்துடன் சொல்லவேண்டுமானால், யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட 43 தொகுதிகளில் தொடர்ச்சியாக 2 அல்லது 3 முறைகூட வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
இதற்கு சில விஷயங்களைக் காரணங்களாகச் சொல்லலாம். ஆதிக்கம் செலுத்தும் சாதிகளுக்கு இருந்த நிலம் மற்றும் பண பலம். அடுத்தது, பட்டியல் சமூக மக்கள் பெரும்பாலும் தங்களுக்குள்ளாகவே சிதறிக்கிடந்தன. 20% எனும் மொத்த மக்கள்தொகைக்குள், சாமர்கள் 31.3% , பஸ்வான்கள் 30.9%, முசாஹர்கள் 13.9%.. ஆனால், ஒவ்வொரு தரப்பும் வேறு வேறு அரசியல் தொடர்புகள் காரணமாகவும், வேறு வேறு அரசியல் நிலைப்பாடுகள் காரணமாகவும் தனித்தனியாக செயல்பட்டனர். அவர்களுக்கிடையே விரோதப்போக்கும் இருந்தது. இந்த நடைமுறை ஆதிக்கம் செலுத்தும் தரப்புக்கு ஏதுவாக செயல்பட, பட்டியல் சமூக மக்களுக்கு தடையாக அமைந்தது.
பிகாரில் ஏன் ஒருங்கிணையவில்லை?
1990களில் லாலு பிரசாத் யாதவ் அனைத்து சமூகங்களுக்கான அரசியல் பங்கேற்பை ஆதரித்ததன் மூலம் குறிப்பிடத்தகுந்த பட்டியல் சமூக மக்களின் ஆதரவை அவரால் பெற முடிந்தது. தற்போது வரையில்கூட 50%க்கும் மேற்பட்ட பட்டியல் சமூக மக்களின் வாக்குகள் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கே செல்வதாக ஒரு பார்வை இருக்கிறது. ஆனால், உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்ததுபோல பிகாரில் சித்தாந்த ஒற்றுமை நிகழவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி உத்தரபிரதேசத்தில், ஒருங்கிணைந்த அம்பேத்கரிய குடையின் கீழ் அனைத்து பட்டியல் சமூகத்தையும் ஒருங்கிணைத்தது. பிகாரிலோ, 40 மக்களவைத் தொகுதிகளில் 15 இடங்களிலும், ஏராளமான சட்டமன்ற தொகுதிகளிலும் பட்டியல் சமூக மக்கள் முடிவுகளை தீர்மானிப்பவர்களாக இருந்தபோதும்கூட, தனித்தனியாக சிதறிக்கிடந்ததன் காரணமாக அவர்களால் எவ்விதமான தாக்கத்தையும் உண்டாக்க முடியவில்லை.
முதலமைச்சராக நிதிஷ் குமார் பொறுப்பேற்றபோது, தனக்கென பிரத்யேக வாக்குவங்கியை உருவாக்குவதில் மிகத் தீவிரமாக செயல்பட்டார். ஏனெனில், மக்கள் தொகையில் 3% மட்டுமே உடைய குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர் நிதிஷ் குமார். எனவே தனக்கான வாக்கு வங்கியை உருவாக்கி ஆக வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டது. இதையொட்டித்தான், 20க்கும் மேற்பட்ட பட்டியல் சாதிகளைக் கொண்டு மகாதலித்கள் எனும் குழுவை உண்டாக்கினார். அவர்களுக்கான பிரத்யேக திட்டங்களைக் கொண்டுவந்தார். அடுத்தது ஓபிசியில் மிகப் பிற்படுத்தப்பட்டவர்கள் (இபிசி) எனும் மற்றொரு குழுவை உருவாக்கினார். அவர்களுக்கான பிரத்யேக திட்டங்களை உருவாக்கினார். இவைகள் எல்லாம் நிதிஷ்க்கும் சரி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் சரி பலமான விஷயங்களாகப் பார்க்கப்படுகிறது.
NDAவின் முக்கிய வாக்கு வங்கி
NDAவுக்கான முக்கியமான வாக்கு வங்கியாக பார்க்கப்படுபவர்கள் உயர்சாதியினர், யாதவ சமூகத்தை உள்ளடக்காத பிற்படுத்தப்பட்டவர்கள், இபிசிக்கள், மகாதலித்துகள் பஸ்வான்கள் என சொல்லலாம். இவர்கள் மட்டுமே மக்கள் தொகையில் 68% மக்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்த வாக்குகள் அப்படியே NDAவுக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்க முடியாது. கடந்த 2020 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 37% மட்டுமே சென்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே தங்களுக்கான வாக்குகளை சிதறாமல் அறுவடை செய்துவிட வேண்டுமென்றே ஒவ்வொரு கட்சியும் சிந்திக்கின்றன.
இத்தகைய சூழலில்தான் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் சக்தியாக பட்டியல் சமூக மக்கள் இருக்கின்றனர். இவர்களது வாக்குகளைப் பெற மகாகத்பந்தன் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி என இருபெரும் கூட்டணிகளும் எப்படி செயல்படுகின்றன என்பதை அலசுவதும் மிக முக்கியம்.
NDA- கூட்டணியில், பாஜக, ஜேடி(யு), லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற), ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா போன்றவை பிரதான கட்சிகளாக இருக்கின்றன. 2000 ஆம் ஆண்டுகள் முதலே ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணியில் இருக்கும் பாஜக, பட்டியலின சமூக மக்களைப் பிரநிதித்துவப்படுத்தக்கூடிய லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) போன்ற கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வந்து அனைத்து தரப்புக்கான கூட்டணியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியை மாற்றியிருக்கிறது. தொகுதிப் பங்கீட்டில் பொதுப் பிரிவைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு 85 இடங்களும், OBC-களுக்கு 67 இடங்களும், EBC-களுக்கு 46 இடங்களும், SC-களுக்கு 38 இடங்களும், ST-களுக்கு 2 இடங்களும் கூட்டணி சார்பாக ஒதுக்கப்பட்டுள்ளன.
மகாகத்பந்தன்
மகாகத்பந்தன் கூட்டணியில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD), காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் (CPI, CPI(M), CPI(ML)), விகாஸ்ஷீல் இன்சான் கட்சிகள் (VIP) போன்ற கட்சிகள் இருக்கின்றன. கூட்டணியில் 42 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 117 இடங்கள் OBC-களுக்கும், 21 இடங்கள் BC-களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இஸ்லாமியர்களுக்கும் குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. கூட்டணியில் இருந்து மொத்தமாக 29 இடங்கள் இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், RJD-யின் தரப்பில் இருந்து மட்டும் 18 இடங்கள் இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ராஷ்ட்ரிய ஜனதா தரப்பில் இருந்து 18 பேர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஒருவர் பட்டியல் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவரும் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். பட்டியலின சமூக மக்களுக்காக தொடர்ச்சியாகக் குரல் கொடுத்தாலும், கூட்டணியில் அம்மக்களைப் பிரநிதித்துவப்படுத்தும் பெரும் தலைவர்கள் இல்லாதது அக்கூட்டணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த இடத்தில் காங்கிரஸ் கட்சியின் பிகார் மாநிலத் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டிருக்கும் ராஜேஷ் ராம் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சாதிவாரி கணக்கெடுப்பு பட்டியல் சமூக மக்களை முக்கிய சக்தியாக அடையாளம் காட்டியிருக்கிறது. ஏனெனில் பிகாரில் சமூக நீதியின் கோஷங்களுக்கும், சமூக உண்மைகளுக்கும் இடையிலான வேற்றுமை இன்னும் தீர்க்கப்படவில்லை. இக்கணக்கெடுப்பு அந்த எதிர்மறைகளை வெளிப்படுத்துகிறது. அம்மக்களின் விருப்பங்கள் ஒரேமாதிரியாக இல்லாவிட்டாலும்கூட, பொதுவான சமூக பொருளாதார நிலைகளின் அடிப்படையில், அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள். அவர்கள் தங்கள் துணை சாதிக்குழுக்களுக்கு இடையில் இருக்கும் போட்டிகளை தவிர்த்து ஒற்றுமைகளை உருவாக்கி ஒன்றாக நிற்க வேண்டியது மிக அவசியமானது. இவைகள் எல்லாம் தேர்தலில் எதிரொலிக்குமா.. முடிவுகள் தான் சொல்லும்!