”சமூகம் வேலியிட்டாலும்; அந்த வேலியின் உயரத்தைத் தாண்டி...” - பைசன் படத்துக்கு அண்ணாமலை புகழாரம்
பைசன் திரைப்படத்தைப் பாராட்டி ”திரைப்படத்தின் பல காட்சிகளில், உணர்வுப் பூர்வமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது” பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், ரஜிஷா, அனுபமா நடித்து கடந்த 17 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் `பைசன்'. இப்படம் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ’பைசன்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜின் தொடர்ச்சியான ஐந்தாவது வெற்றிப்படமாக மாறியிருக்கிறது.
திரைப்படம் வெளியான நாள் முதல் பைசன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த், விசிக தலைவர் திருமவளவன் உட்பட அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் எனப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பைசன் படத்தைப் பாராட்டி ”திரைப்படத்தின் பல காட்சிகளில், உணர்வுப் பூர்வமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது” பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்தப் பதிவில் அண்ணாமலை கூறியிருப்பதாவது, ” ஒரு கிராமத்து இளைஞன், தனது லட்சியத்தை அடைய எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சந்திக்கும் சவால்கள், சமூகம் சார்ந்த சிக்கல்கள் என, அனைத்தையும் இயக்குனர் மாரி செல்வராஜ் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார். திரைப்படத்தின் பல காட்சிகளில், உணர்வுப் பூர்வமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது.
அர்ஜுனா விருது வென்ற இந்தியக் கபடி வீரர் திரு. மணத்தி கணேசன் அவர்களது வாழ்க்கையை, மிக அற்புதமாக திரையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவரது சாதனை அத்தனை எளிதாகக் கிடைத்து விடவில்லை. சாதிக்க விரும்பும் இளைஞனுக்கு, சமூகம் பல வழிகளில் வேலியிட்டாலும், அந்த வேலியின் உயரத்தைத் தாண்டி வளர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான நம் மண்ணைச் சேர்ந்த நாயகன் திரு. மணத்தி கணேசன் அவர்கள் வரலாற்றை, மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். மேலும், சமூக ஒற்றுமை வேண்டும் என்ற தனது ஆழ்ந்த விருப்பத்தையும், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும், கதாநாயகன் திரு. துருவ், இந்தத் திரைப்படத்துக்காக தன்னையே அர்ப்பணித்திருப்பதை உணர முடிகிறது. அண்ணன் திரு. பசுபதி அவர்கள், திரு. லால் அவர்கள் ஆகியோரின் நடிப்புத் திறனைக் குறித்து நான் புதியதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அனைத்து நடிகர்களுமே தங்கள் அற்புதமான திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்” என அந்தப் பதிவில் கூறியிருக்கிறார்.