பீகார் தேர்தல் | முதல்வர் பதவிக்கான போட்டி.. குறி வைக்கப்படும் நிதிஷ்குமார்?
பீகாரில் இப்போது நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக - ஜேடியு கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அக்கூட்டணி, தேர்தலுக்குப் பிறகு வென்றாலும் நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் தொடர்வாரா என்பதுதான் பலருடைய விவாதப் பொருளாக இருக்கிறது.
243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்திற்கு நவம்பா் 6, 11 தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும், அங்கு பலமுனைப் போட்டி நிலவுகிறது. மறுபுறம், பீகாரில் இப்போது நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக - ஜேடியு கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அக்கூட்டணி, தேர்தலுக்குப் பிறகு வென்றாலும் நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் தொடர்வாரா என்பதுதான் பலருடைய விவாதப் பொருளாக இருக்கிறது. ஏனெனில், அவர் மாநிலத்தின் அடுத்த முதல்வராக மீண்டும் பதவியேற்பது குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.
74 வயதான அவர், தனது உடல்நிலை காரணமாக அதிக கவனத்தை ஈர்த்துள்ளார். ஜன் சுராஜ் நிறுவனரும், பிரபல தேர்தல் வியூகவாதியுமான பிரசாந்த் கிஷோர், ”நிதிஷ் குமார் மாநிலத்தின் அடுத்த முதல்வராக மீண்டும் வரமாட்டார் என்றும் பீகாரில் உள்ள 243 சட்டமன்ற இடங்களில் 25 இடங்களைகூட அவரது கட்சி வெல்வது கடினம் என்றும், ஜே.டி.(யு)வுக்கு பெரும் சரிவு ஏற்படும்” என்றும் கணித்துள்ளார். மேலும், ”இந்த கணிப்பு காலப்போக்கில் மோசமடைந்துள்ளது” என்றும் அவர் குறிப்பிடுகிறார். தவிர, பீகாரில் நீண்டகாலமாக முதல்வர் பதவி வகித்துவரும் அவரை, ”உடல்ரீதியாகச் சோர்வடைந்தவர், மன ரீதியாக ஓய்வுபெற்றவர் என்றும் மாநிலத்தைத் திறம்பட வழிநடத்தும் திறன் அவரிடம் இல்லை” என்றும் குற்றம்சாட்டி வருகிறார்.
பிரசாந்த் கிஷோரின் தாக்குதல் இப்படியிருக்க, இன்னொரு புறம் இந்தத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால், அடுத்த பீகார் முதல்வர் யார் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துகள் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. “பீகாரைப் பொறுத்தவரைத் தேர்தல் முடிந்தபின்னரே முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்வோம். நிதிஷ் குமார் முதல்வராக இருக்க வேண்டுமா, இல்லையா என்பதை என்னால் முடிவுசெய்ய முடியாது. இப்போதைக்கு நிதிஷ் குமார் தலைமையில்தான் நாங்கள் போட்டியிடுகிறோம். தேர்தலுக்குப் பிறகு, அனைத்து கூட்டணிக் கட்சிகளும் ஒன்றிணைந்து தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், அமித் ஷாவின் இந்தப் பேச்சை எதிர்க்கட்சிகள் வேறு விதமாகத் திரித்துக் கூறி வருகின்றன. “பாஜக, அடுத்த முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமாரைப் பார்க்கவில்லை” என அவை கூறி இணையத்தையும் பீகாரையும் பரபரப்படையச் செய்தன. ஆனால், இதுதொடர்பாக, அமித் ஷாவின் முழு வீடியோவையும் பகிர்ந்த பாஜக, எதிர்க்கட்சிகளுக்கு உண்மையான பதிலடி கொடுத்தது.
எனினும், பாஜகவின் முக்கிய கூட்டாளியான மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான், அமித் ஷாவின் கருத்தை ஆதரித்ததாகத் தெரிகிறது. அதேபோல், அமித் ஷாவின் கருத்துகளை எதிரொலிக்கும் HAM(S) புரவலரும் மத்திய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சி, ”கூட்டணிக்குள் தெளிவு மற்றும் ஒற்றுமையை உறுதி செய்வதற்காக, தேர்தலுக்கு முன்னதாகவே NDA, தனது முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். ஆனால், ”வரவிருக்கும் 2025 சட்டமன்றத் தேர்தலில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார்” என்பதை ராஷ்ட்ரிய லோக்மஞ்ச் (RLM) தேசியத் தலைவர் உபேந்திர குஷ்வாஹா உறுதிப்படுத்தியுள்ளார். ஆயினும், பீகார் அரசியலில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக மையப் புள்ளியாக இருந்துவரும் நிதிஷ் குமாருக்கு, இந்தத் தேர்தல் ஒரு கடினமான சவாலாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.