Bihar Election 2025 | நிதிஷ்க்கு மிகப்பெரும் அச்சுறுத்தலா பாஜக? JD(U) வாக்கு வங்கி அரிக்கப்படுகிறதா?
முதலமைச்சர் நிதிஷ் குமார், கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் களத்தில் முக்கியமானவர். ஆனால், சமீபத்திய தேர்தல்களில் அவரது செல்வாக்கு குறைந்துள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில்மயமாக்கலில் குறைபாடுகள், கூட்டணி மாற்றங்கள் ஆகியவை அவரின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளன. இளம் வாக்காளர்கள் அவரை ஆதரிக்காததால், 2025 தேர்தலில் அவருக்கு சவால்கள் அதிகமாக இருக்கின்றன.
பிகார் அரசியல் களம் அடுத்த பரிமாணத்திற்கு தயாராகி நிற்கிறது. "அதிகார பரவலாக்கத்திற்கு சமூக நீதி அரசியல் தேவைதான்.. அதில் ஓரளவு ஏற்றம் கண்டிருக்கிறோம், மிகப்பெரிய வெற்றிகள் கிடைத்திருக்கின்றன. ஆனால், தற்போது மிக முக்கியமானது, வரும் தலைமுறைக்கு ஏற்ற வளமான, தொழில்மயமான, வேலை வாய்ப்பு மிகுந்த பிகாரை உருவாக்க வேண்டும். அதற்கு ஒருவர் தேவை.. நிதிஷ்க்கு போதுமான வாய்ப்புகள் கொடுத்தும் அவர் அதை சரிவரச்செய்யவில்லை. வேறு ஒருவரை யோசிக்க வேண்டிய நேரமிது(?)" இதுவே பிகார் மக்களின் எண்ணமாக இருப்பதாக பல்வேறு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிகாருக்கு நிதிஷ் ஒன்றுமே செய்யவில்லையா? கடந்த காலங்களில் அவரது செயல்பாடுகள் எப்படி இருந்தது? 2025 தேர்தலில் அவருக்கு இருக்கும் சிக்கல்கள் என்ன? ராஜாதி ராஜனா அல்லது பாஜகவின் பகடைக்காயா?
தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறும் பிகார்
தேசிய அரசியலை நிர்ணயம் செய்ததில், அதன் போக்கை தீர்மானித்ததில் பிகாருக்கு தனிப்பங்கு உண்டு. கர்ப்பூரித் தாக்கூர், ஜெயப்பிரகாஷ் நாராயணன் எனப் பலரும் தேசத்தின் அரசியலைத் தீர்மானித்திருக்கிறார்கள். இடைப்பட்ட காலங்களில்தான் பிகாரின் பொருளாதாரமும் சரி, சட்டம் ஒழுங்கும் சரி அதளபாதாளத்துக்குச் சென்றது. இனி பிகார் மீளவே மீளாது என்று எல்லோரும் கருதிய நிலையில்தான் ஆட்சிக்கு வருகிறார் நிதிஷ் குமார். நிலையான, அமைதியான ஆட்சி என்பதே அவரது முழக்கமாக இருந்தது. சட்டம் ஒழுங்கு மெல்ல மெல்ல சீரானது, கிராமங்கள் வரையில் சாலைகளும், தெருவிளக்குகளும், அடிப்படை வசதிகளும் கொஞ்சம் மேம்பட்டன. நிதிஷ் பிகாரின் நிகரற்ற தலைவராக இருந்தார். கடந்த 20 ஆண்டுகளாக பேசுபொருளாகவே இருந்தவர் இந்தத் தேர்தலிலும் பேசுபொருளாகத்தான் இருக்கிறார். ஆனால், நிகரற்ற தலைவராக நிதிஷ் இருக்கிறாரா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி.
2017ஆம் ஆண்டு வரை தொடர்ந்த அவரது ராஜாங்கம் அதன் பின் மெல்ல மெல்ல சரிய ஆரம்பிக்கிறது. தொடர்ச்சியாக கூட்டணி மாறியது அவர் மீது மக்களுக்கு இருந்த நம்பகத்தன்மையைக் குறைத்தது. ஆனாலும், ஆச்சரியப்படும் விதமாக நிதிஷ் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறாரோ அந்தக் கூட்டணிதான் வெற்றி பெற்றிருக்கிறது. இது எதேச்சையாக நடந்தது அல்ல. பிகாரில் நிதிஷின் வெற்றி என்பது மிகவும் திட்டமிட்டு வார்க்கப்பட்ட வெற்றி. அதாவது, சரியான கணக்கீட்டோடு சமூகங்களின் ஒருங்கிணைப்புகளை நிகழ்த்தி அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தினார். உதாரணத்திற்கு, அவரது வாக்கு வங்கி என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் (EBCs), மகாதலித்கள் மற்றும் குர்மி-கோரி சமூக மக்களின் வாக்குகள். இதைத்தாண்டி அவரது, அரசு மற்றும் வாக்கு வங்கி முழுக்க முழுக்க நலத்திட்டங்களைச் சார்ந்தது. மிக முக்கியமாக பெண்களுக்கான நலத்திட்டங்கள்.
பெண் சக்தி
அரசு வேலைகளில் பெண்களுக்காக 35% இட ஒதுக்கீடு வழங்கியது, மேல்நிலை பள்ளிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கியது என பல்வேறு விஷயங்களை பெண்களுக்காக செயல்படுத்தியிருக்கிறார் நிதிஷ்.
இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் பெண்களுக்கு அதிகாரமளிப்புக்கு வழிவகுத்ததா? அல்லது வெறும் குறியீட்டு அரசியல்தானா என்ற விவாதங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இதன்மூலம் நிதிஷ் பெற்ற அரசியல் லாபம் அளப்பறியது. ஏனெனில், பிகாரில் 2015 முதலே ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக இருக்கின்றனர். தற்போது கூட மொத்தமுள்ள 243 சட்டமன்ற தொகுதிகளில் 167 இடங்களில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகளவில் இருக்கின்றனர். அதில் ஏறத்தாழ 90 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே வெற்றி சாத்தியம் என சர்வேக்கள் சொல்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் நிதிஷ். இந்த வாக்கு வங்கியை இன்னும் வலுப்படுத்தும் நோக்கில்தான் 75 லட்சம் பெண்களுக்கு மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் வழங்கியதும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
சமீபத்தில் inkinsight கருத்துக்கணிப்பு வெளியானது., அதில், 60.4% பெண்கள் நிதிஷ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது என்பது தெரியவந்தது. இன்னும் குறிப்பாக, 45% பெண்கள் நிதிஷ் மீண்டும் முதல்வராக வேண்டுமெனத் தெரிவித்திருக்கின்றனர்.
நாடு முழுவதிலும் நாம் ஒன்றை கவனிக்கலாம். பெண்களுக்கு பண உதவிகளை வழங்கும் திட்டம் அரசியல் கட்சிகளுக்கு பெருமளவில் கை கொடுத்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், 2023ல் மத்திய பிரதேசம், 2024ல் மகாராஷ்டிரா என இரு மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் கைகொடுத்தது. பிகாரிலும் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கைகொடுக்கலாம்.. ஆனால், நிதிஷ்க்கு கைகொடுக்குமா என்பது கேள்விக்குறி.
நிதிஷின் சரிவு - காலத்தின் மாற்றம்
சமீபத்திய தேர்தல்களில் அவரது சரிவுக்கு மிக முக்கியக் காரணம் காலத்தின் மாற்றமும், இயற்கையாக நிகழும் அதிருப்தியும்தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்தியாவிலேயே இளைஞர்களை அதிகம் கொண்ட மாநிலம் என்றால் அது பிகார்தான். இதில், சுவாரஸ்யமான விஷயம் என்ன என்றால், மாநிலத்தில் இருக்கும் 42% மக்கள், விபரம் தெரிந்த காலக்கட்டத்தில் இருந்து நிதிஷை மட்டும்தான் முதலமைச்சராக பார்த்திருக்கிறார்கள். ஏனெனில், இளம் தலைமுறையினரில் பெரும்பாலானோர் 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள். இன்னும் குறிப்பாக, மாநிலத்தில் இருக்கும் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே லாலு பிரசாத்துக்கு முன்பிருந்த காலத்தை பார்த்தவர்கள், அக்காலத்தில் வாழ்ந்தவர்கள். எனவே, அவர்களுக்கு 'ஜங்கிள் ராஜ்' என விமர்சிக்கப்படும் காலக்கட்டம் குறித்தோ, அதற்கு முந்தைய ஆட்சியைக் குறித்தோ பெரிய அபிப்ராயங்கள் ஏதுமில்லை. மிக முக்கியமாக 1990களில் பிகார் இருந்த நிலையை பெருமளவில் மாற்றியவர். (லாலுவின் எழுச்சி பிகாரில் முக்கியமான காலக்கட்டம்.. அதை தேஜஸ்வி தொடர்பான கட்டுரையில் பார்க்கலாம். இப்போது முழுக்க முழுக்க நிதிஷ் மட்டுமே)
நல்லாட்சி என்பது அடைய முடியாத கனவாக இருந்த நிலையில், அதை சாத்தியப்படுத்திக் காட்டியவர் நிதிஷ். ஆனால், தற்கால இளைஞர்களுக்கு முக்கியத் தேவையாகப்படுவது வேலைவாய்ப்பு, தொழில், கல்லூரிகள், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவையே.
நிதிஷ் மேல் இருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு பிகாரை தொழில்மயமாக ஆக்கவில்லை என்பது. அதிகளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்காமல், அம்மாநில இளைஞர்கள் வேலைதேடி வேறு மாநிலங்களுக்கு இடம்பெயரும் நிலையை உருவாக்கியது நிதிஷ் ஆட்சியின் கரும்புள்ளி. வயதான வாக்காளர்கள் மத்தியில் நிதிஷ்க்கு ஆதரவு இருந்தாலும், இளம் வாக்காளர்கள் அவர் பக்கம் செல்லாததற்கு வேலைவாய்ப்புகளும் ஒரு காரணம்.
நான் நிர்வாகி மட்டுமே
இதைத்தாண்டி மிக முக்கியமான விஷயம் நிதிஷ் எப்போதும் தன்னை அசாதரணமான தலைவர் என்றோ, நிகரற்ற பேச்சாளர் என்றோ காட்ட முயற்சித்தது கிடையாது. நிலையான மற்றும் அமைதியான ஆட்சியைக் கொடுக்க வேண்டும்; அதற்கு கொள்கைகளில் கொஞ்சம் சமரசம் செய்துகொண்டாலும் பரவாயில்லை என்பதுதான் அவரது நிலைப்பாடாக இருந்தது. பிகாரின் அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் யோகி ஆதித்யநாத், மம்தா போன்றோர் தங்களை மிகபப்பெரும் ஆளுமைகளாக முன்னிறுத்திய வேளையில், நிதிஷ் தன்னை எப்போதும் சிறப்பான நிர்வாகியாக மட்டுமே முன்நிறுத்தியவர். அவரது அரசியலே அமைதியான, நடைமுறை சாத்தியமான, நிர்வாக ரீதியானது. தொடர்ச்சியான அரசியல் மாற்றங்கள், சமூக ஊடக பெருக்கம், தனிமனித கவர்ச்சி பிம்பத்துக்கு கிடைத்த வரவேற்பு போன்றவையெல்லாம் நிதிஷ்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
2020 தேர்தலில் நிதிஷ் வெற்றி பெற்ற இடங்கள் மிகக்குறைவுதான்.. 46 இடங்களை மட்டும்தான் அவரது கட்சியால் வெல்ல முடிந்தது. உடனே நிதிஷின் அரசியல் முடிவுக்கு வரப்போவதாக எல்லோரும் எழுதினர். ஆனால், 2020ல் சிராக் பஸ்வான் நிதிஷ் போட்டியிட்ட இடங்களில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தி நிதிஷின் வெற்றியை திட்டமிட்டு பறித்தார். இல்லையெனில் 70 இடங்களுக்கும் மேல் நிதிஷ் வெற்றி பெற்றிருப்பார். அதேபோல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் வாக்குப்பரிமாற்றம் சரியாக நடைபெறாததும் நிதிஷ் தோல்விக்கு மிக முக்கியக் காரணம்.
சரிவராத வாக்குப் பறிமாற்றம்
2020ல் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவாளர்கள் 75% பேர் பாஜக வேட்பாளர்களை ஆதரித்திருக்கின்றனர். ஆனால், பாஜக ஆதரவாளர்கள் 55% மட்டும்தான் நிதிஷ் கட்சியினரை ஆதரித்திருக்கின்றனர். எஞ்சிய 20% வாக்குகள் சிராக் பஸ்வானுக்கு சென்றிருக்கிறது. இவையும் நிதிஷின் சரிவிற்குக் காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஆனால், 2024 மக்களவைத் தேர்தலில் நிலைமை மாறியது. பாஜக மாநிலத்தில் 17 இடங்களில் போட்டியிட்டு 12 இடங்களில் வெற்றி பெற்று இருந்தால், ஐக்கிய ஜனதா தளம் 16ல் போட்டியிட்டு 12 இடங்களில் வெற்றி பெற்றது. அதோடு உத்தரபிரதேசத்தில் கடும் பின்னடைவைச் சந்தித்த பாஜக, பிகாரில் நிலையான வெற்றியைப் பதிவு செய்தது. இதற்குக் காரணம் நிதிஷ். அவர் கடைசி நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு செல்லாமல் இருந்திருந்தால் மத்தியில் இந்தியா கூட்டணி கூட ஆட்சியைப் பிடித்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஆகவே, நிதிஷின் கிராப் சற்று இறங்கியிருக்கிறது. முழுமையாக வீழ்ந்துவிடவில்லை. மிக முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்,. பிகாரில் பாஜகவின் வளர்ச்சி ஐக்கிய ஜனதா தளத்தை அரித்துக்கொண்டு நிகழ்ந்தது.. எப்படி மகாராஷ்டிராவில் சிவசேனைக்கு நிகழ்ந்ததோ அப்படி, பிகாரில் நிதிஷ்க்கு நடந்ததாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அங்கு ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேக்கு எதிராக இருந்தார். இங்கு சிராஜ் பஸ்வான் அந்த பாத்திரத்தை ஏற்றார். மகாராஷ்டிராவில் மண்ணின் மகனாக ஏக்நாத் ஷிண்டேவை பாஜக முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது. ஆனால், தேர்தலுக்கு பின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் பொறுப்பேற்றார். பிகாரிலும் கிட்டத்தட்ட அதே போன்ற நிகழ்வுகள்தான் நடக்க ஆரம்பித்திருக்கின்றன. கூட்டணிக்கு தலைமையாக நிதிஷ் இருப்பார் என பாஜக தெரிவித்தாலும், தேர்தல் முடிவுகளின் அடிப்படையிலேயே முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அமித்ஷா தெரிவிக்கிறார்.
குறையும் நிதிஷின் வாக்குவங்கி
அதேபோல் நிதிஷின் ஆதாரமான வாக்குவங்கியை குறைப்பதில் பாஜக கடந்த காலங்களில் சில செயல்களை மேற்கொண்டதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு ஆதாரமாக இருப்பது நிதிஷ் மேற்கொண்ட சாதிவாரி கணக்கெடுப்பு. பிகார் அமைச்சரவை 36 பேரைக் கொண்டது. சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் பாஜகவுக்கு 21 பேரும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 14 பேரும் அமைச்சர்களாக இருக்கின்றனர். இதில் பாஜகவின் அமைச்சர்களில் 7 பேர் EBC சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் குர்மி சமூகத்தை சேர்ந்தவர். இவை நிதிஷின் வாக்கு வங்கியை பாஜகவை நோக்கி நகர்த்தும் உத்தியாக பார்க்கப்படுகிறது. அதேபோல், கூட்டணியில் இருக்கும் மற்றொரு கட்சித் தலைவரான உபேந்திர குஷ்வாகாவும் குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர். இவரை முன்னிலைப்படுத்துவதன் மூலமும் நிதிஷின் தேவையை அந்த சமூக மக்களிடையே குறைக்க பாஜக முயற்சிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே நிதிஷ்க்கு இஸ்லாமிய மக்களிடையே இருந்த ஆதரவும் பெருமளவில் குறைந்திருக்கிறது. வக்ஃப் தொடர்பான சர்ச்சையை தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து இஸ்லாமிய தலைவர்கள் பலர் வெளியேறினர். பாஜகவின் அழுத்தத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் பணிந்துவிட்டதாகவும் விமர்சித்தனர். இவையும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஒருகாலத்தில் நிதிஷின் பலமாக இருந்த சமூக கூட்டணி கணக்கீடுகள் தற்போது அவரது பலவீனமாக மாறியிருக்கிறது. இதைத்தாண்டி நிதிஷ்க்கு இருக்கும் மற்றுமொரு சிக்கல் இளைஞர்களின் வாக்குகளை தன்பக்கம் இழுப்பது. 28 வயதுக்கு கீழ் இருக்கும் இளைஞர்கள் மட்டும் மாநிலத்தில் 58% பேர் இருப்பதாக சர்வேக்கள் தெரிவிக்கின்றன. நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், ஜங்கிள் ராஜ் குறித்தெல்லாம் அவர்களுக்கு பெரும்பான்மையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இது தேஜஸ்விக்கு பலமாகவும், நிதிஷ்க்கு பலவீனமாகவும் பார்க்கப்படுகிறது.
முக்கியமாக நிதிஷ் கூட்டணிக் கட்சியான பாஜகவை சமாளிக்க வேண்டும். 2025 பிகார் தேர்தல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு என அல்லாமல், பாஜகவுக்கு மிக முக்கியமான தேர்தல். 2024க்கு முன்புவரை பாஜகவின் பலம் என்பது டெல்லியில் இருந்துதான் வெளிப்பட்டது. மோடி எனும் பிம்பம், இந்துத்துவ சித்தாந்தம் போன்றவையெல்லாம் இணைந்து மிகப்பெரும் கட்சியாகவும் பணக்கார கட்சியாகவும், பெரும்பான்மை கொண்ட கட்சியாகவும் பாஜவை மாற்றியது. எனவே ஓரிரு மாநிலங்களில் அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகள், மத்தியில் பாஜகவின் இருப்புக்கு பெரிய அச்சுறுத்தல்களைக் கொடுக்கவில்லை.
ஆனால், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி ஆட்சியை நடத்தவே கூட்டணி வேண்டுமென்ற நிலையை ஏற்படுத்தியது. எனவே, ஒவ்வொரு மாநில தேர்தலிலும் பாஜகவின் வெற்றி அத்தியாவசியமாக மாறியிருக்கிறது. மேலும், அடுத்த வருடம் நடக்கும் தேர்தல் பாஜகவிற்கு மிக சவாலானதாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம் என எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் தேர்தல் நடக்க இருப்பதால் 2025 பிகார் தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியம்.
இத்தகைய கணக்குகளில் இருந்து நிதிஷ் தப்புவாரா? தேர்தலில் என்ன நடக்கப்போகிறது. பொருத்திருந்து பார்க்கலாம்.