சு.வெங்கடேசன் எம்பியின் புகார்களால் அதிரும் மதுரை அரசியல்.. நிர்வாகிகளுக்கு மாவட்ட திமுக கடிவாளம்!
செய்தியாளர் மணிகண்டபிரபு
திமுக கூட்டணியில் மதுரை மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக வாகை சூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன், மத்திய, மாநில உரிமைகளைப் பேசுவதோடு நின்றுவிடாமல் அவ்வப்போது உள்ளூர் பிரச்சினைகளுக்கும் தீவிரமாக குரல் எழுப்பி வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபரில் மதுரையில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டபோது அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அமைச்சர் மூர்த்தியை குறைசொல்லும் வகையில் இருந்ததாக பேச்சு எழுந்தது. தொடர்ந்து இலவச வீட்டு மனைப்பட்டா கோரி நடத்திய பேரணியும் மூர்த்திக்கு எதிரான போராட்டமாகவே பார்க்கப்பட்டது. அண்மையில் மதுரை மாநகராட்சியில் நடந்த 150 கோடி ரூபாய் முறைகேட்டில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் கூறியிருந்தார் சு.வெ. அதன் ஒரு பகுதியாக திமுகவைச் சேர்ந்த மண்டல குழு தலைவர்கள் கூண்டோடு நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சு.வெங்கடேசனின் மற்றொரு அறிக்கை மதுரை அரசியலில் பரபரப்பை பற்றவைத்துள்ளது. மதுரை மாநகராட்சியின் செயல்பாடுகள் நிர்வாக சீர்கேட்டின் உச்சம் என கடுமையாக சாடியுள்ள சு.வெ., முதல்வர் ஸ்டாலினே நேரடியாக தலையிட்டு மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கையும் விடுத்திருக்கிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் 6 ஆணையர்கள் மாற்றம், நிர்வாக குறைபாடுகள், அரசியல் சொந்தலாப நோக்கம் போன்றவை மதுரையை பின்னுக்கு தள்ளியுள்ளதாகவும் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற மதுரை மாமன்ற கூட்டத்தில் இதுதொடர்பான விவாதம் எழுந்தபோது,திமுக கவுன்சிலர் ஜெயராமன் சு.வெங்கடேசனை வெளிப்படையாக கண்டித்து பேசியிருந்தார். அப்போது மார்க்சிஸ்ட் - திமுக உறுப்பினர்களிடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சூழலில்தான், சு.வெங்கடேசனுக்கு எதிராக பேசக்கூடாது என திமுகவினருக்கு மாவட்டச் செயலாளர் தளபதி உத்தரவிட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், சு.வெங்கடேசன் தொடர்பாக சமூக ஊடகங்களில் எதிர்மறையாக எதுவும் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தளபதி எச்சரித்துள்ளார். இது குறித்து தலைமையிடம் புகார்கள் சென்றுள்ளதாகவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
மதுரையில் திமுகவிற்கும், மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசனுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படும் சூழலில், தளபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த உரசல்கள் களத்தில் எப்படி எதிரொலிக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.