”24 மணி நேரத்தில் கூடுதல் வரி..” - தொடர்ந்து ஓபனாக மிரட்டும் ட்ரம்ப்; இந்தியாவுக்கு ஆதரவளித்த ரஷ்யா!
இந்தியாவுக்கு அதிக வரிவிதிப்பு.. மிரட்டும் அமெரிக்கா!
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவிற்கும் 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் இந்த வரிவிதிப்பு அமலுக்கு வர இருக்கிறது. ‘’அமெரிக்காவுக்கான வரி அதிகளவில் இருப்பதாலும், இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்குவதாலுமே இத்தகைய வரி விதிப்பு’’ என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்தும் அமெரிக்கா விமர்சித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, ”உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியா மறைமுகமாக நிதியுதவி அளித்து வருகிறது” எனக் காட்டமாக விமர்சித்திருந்தது.
இந்தியாவை மிரட்டுவதால் ட்ரம்புக்கு லாபம் என்ன?
மேலும், ”ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படும்” என ட்ரம்ப் கூறியிருந்தார். இந்தியா அதிக அமெரிக்க எண்ணெய் மற்றும் எல்என்ஜி வாங்கத் தொடங்கினால், அது அமெரிக்க எரிசக்தி செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு லாபத்தை அதிகரிக்கும் என்பதாலேயே ட்ரம்ப் இப்படி இந்தியாவை மிரட்டுகிறார்.
இருப்பினும், ’தேச நலனைக் கருத்தில் கொண்டே வர்த்தக விஷயங்களில் முடிவெடுக்கப்படும்’ என இந்தியா பதிலளித்திருந்தது. மேலும், ”இந்தியாவின் இறக்குமதிகள் உலகளாவிய சந்தை சூழ்நிலையால் கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு தேவை என்றாலும், அதை விமர்சிக்கும் நாடுகள் அத்தகைய வர்த்தகம் ஒரு முக்கிய கட்டாயம்கூட இல்லாதபோதும் தாங்களாகவே ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன" என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
”அடுத்த 24 மணிநேரத்தில் உயர்த்தப்படும்”!
இதற்கிடையே, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரியை அடுத்த 24 மணிநேரத்திற்குள் வெகுவாக அதிகரிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ”ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடர்வதால் வரிவிகிதத்தை மேலும் கணிசமான அளவிற்கு அடுத்த 24 மணிநேரத்தில் உயர்த்தப்படும்” என அவர் எச்சரித்துள்ளார்.
அதேபோல், உக்ரைனுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்நாடுமீதும், அதனுடன் எரிசக்தி வர்த்தகம் செய்யும் நாடுகள் மீதும் புதிய தடைகளை விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதற்கான காலக்கெடு இருந்தபோதிலும், போர் குறித்த தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எடுக்கவில்லை.
இந்தியாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய ரஷ்யா!
இதற்கிடையே, இந்தியாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கைக்கு ரஷ்யா ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது. இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ”இறையாண்மை கொண்ட நாடுகள் தங்கள் சொந்த வர்த்தக கூட்டாளர்களையும், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டாளர்களையும், ஒரு குறிப்பிட்ட நாட்டின் நலன்களுக்காக, வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் வடிவங்களைத் தாங்களாகவே தேர்வுசெய்யும் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யா உடன் வர்த்தக உறவுகளை கொண்டுள்ள நாடுகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலான அறிக்கைகள் மற்றும் அழுத்தங்களை சட்டப்பூர்வமானதாக தாங்கள் கருதவில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஏன் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குகிறது?
உக்ரைனில் அதன் போர் தொடர்பாக மேற்கத்திய நாடுகளின் தலைமையிலான தடைகளின்கீழ் உள்ள ரஷ்யாவிலிருந்து கடல்வழி கச்சா எண்ணெய்யை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, போரின் காரணமாக ஐரோப்பாவில் பாரம்பரிய வாங்குபவர்களிடமிருந்து துண்டிக்கப்பட்ட பின்னர், ரஷ்யாவிற்கு மிகவும் தேவையான ஏற்றுமதி சந்தையை வழங்குகிறது. இது எரிசக்தி உறவுகளை கடுமையாக மறுவடிவமைத்துள்ளது.
அதேநேரத்தில், இந்தியா ரஷ்யாவின் கருவூலத்தை வலுப்படுத்தும் அதேவேளையில் பில்லியன் கணக்கான டாலர்களை மிச்சப்படுத்தியுள்ளது. ஜனவரி மற்றும் ஜூன் 2025க்கு இடையில், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒருநாளைக்கு சுமார் 1.75 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளன. இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட 1 சதவீதம் அதிகம். 2023ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யா 35 சதவீதத்திற்கும் அதிகமாகப் பங்களித்தது. இந்த நடவடிக்கை புது டெல்லி பணவீக்கத்தை நிர்வகிக்கவும் இறக்குமதி பில்களைக் குறைக்கவும் உதவுகிறது.