MR.FIT, MR.ANGRY, MR.BELIEVE: தேடினாலும் கிடைக்காத தங்கம் சிராஜ்
இந்தியா தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 6 ரன்கள் எனும் மிகக்குறுகிய வித்தியாசத்தில் த்ரில்லான வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி 339/6 என முடித்திருந்தது. இங்கிலாந்து வெற்றிபெற 35 ரன்களும், இந்தியா வெற்றிபெற 4 விக்கெட்டுகளும் தேவை.. மறுநாள் போட்டி விறுவிறுப்பாக தொடங்கியது. ஐந்தாம் நாள் ஆட்டத்தின் முதல் இருபந்துகளை ஓவர்டன் அசத்தலாக பவுண்டரிக்கு விளாசினார். ஆனால் சிராஜ் விட்டுவிடவில்லை. 78 ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஜேமி ஸ்மித்தை வெளியேற்றினார் சிராஜ்.
ஜேமி ஸ்மித் இருக்கும் வரை இங்கிலாந்து வென்றுவிடுமோ என்ற அச்சம் இந்திய ரசிகர்களுக்கு இருந்திருக்கும். ஏனெனில், ஒரு டெஸ்ட் சீரிஸில் இங்கிலாந்துக்காக அதிக ரன்களை அடித்த இரண்டாவது வீரராக மாறியிருக்கிறார் ஜேமி ஸ்மித். அதாவது, நடப்பு தொடரில் மொத்தம் 434 ரன்களைக் குவித்திருக்கிறார். ஆனால், அந்த அச்சத்தைப் போக்கினார் சிராஜ்.
முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை வீழ்த்திய சிராஜ் இரண்டாவது இன்னின்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது விக்கெட் எடுக்கும் திறமையைப் பற்றி வியந்து கூறும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், “பேட்ஸ்மேன்களை LBW முறையில் வெளியேற்றுவதற்காக wobble seam பந்துவீச்சு முறையை பயன்படுத்தும் ஹிட்-தி-டெக் பந்து வீச்சாளராக இருந்து, ஷுப்மான் கில் இரண்டாவதாக புதிய பந்தை எடுக்க ஆர்வம் காட்டாத அளவுக்கு அவுட்ஸ்விங் பந்துவீச்சாளராக சிராஜ் மாறிவிட்டார்” எனத் தெரிவிக்கிறார். மேலும், சிராஜ் குறித்து மிக முக்கியமான ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார் நாசர் ஹுசைன். இங்கிலாந்து வீரர்கள் சிராஜை மிஸ்டர் ஆங்கிரி என்றுதான் அழைப்பார்களாம். அவர் கூறுகையில், “சிராஜ் மிகவும் கோபமானவர், அவரை இங்கிலாந்து வீரர்கள் 'மிஸ்டர் ஆங்கிரி' (Mr. Angry) என்று அழைப்பார்கள். He’s a born entertainer. மிக முக்கியமாக, உயரிய நிலைகளில் வெற்றி பெற தேவையான எல்லா பண்புகளும் அவரிடம் உள்ளன” எனத் தெரிவித்திருக்கிறார்.
நடப்பு தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளராக சிராஜ் இருக்கிறார். மொத்தம் 23 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார் சிராஜ். நாம் பெரும்பாலும் மிகச்சிறந்த வீரருக்கான அடையாளமாக சில விஷயங்களை வைத்திருப்போம். எத்தனை விக்கெட்கள்? economy என்ன? என்று புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே வீரருக்கான ரசிகர் பட்டாளம் இருக்கும். ஆனால், மிக முக்கியமான ஒன்று உள்ளது — எப்போதும் அணிக்காக தயாராக இருக்கிற மனப்பாங்கு. எத்தகைய கடினமான சூழலிலும் பந்து வீசத் தயார் என்பது. அதுதான் சிராஜை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்துகிறது. குறிப்பாக 1113 பந்துகளை இந்தத் தொடரில் சிராஜ் வீசியிருக்கிறார். ஆனால், அந்த 1113 ஆவது பந்தும் அதற்கான Intentஐக் கொண்டிருந்தது.
வி.வி.கிரி சிராஜ் தொடர்பாக தமிழ்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒரு வார்த்தையை அடிக்கடி குறிப்பிடுவார். “வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயம் ஏற்படுவது இயல்பு. சில பந்துவீச்சாளர்கள் Injury-prone ஆகக் கூட இருப்பார்கள். ஆனால், எப்போதாவது சிராஜ் காயம் காரணமாக ஒரு போட்டியைத் தவறவிட்டு பார்த்திருக்கிறீர்களா? மிஸ்டர் FIT என்றால் அது சிராஜ் தான்”.
உடற்தகுதி தொடர்பாக நேற்று பேசியிருக்கும் சிராஜ், “என் உடல் நலமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 187 ஓவர்கள் பந்துவீசியிருக்கிறேன். அணிக்காக என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொடுக்க விரும்புகிறேன். நான் என்னை நம்புகிறேன். உண்மை என்னவென்றால் உங்கள் நாட்டிற்காகவே நீங்கள் ஒவ்வொரு பந்தையும் வீசுகிறீர்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.
சிராஜ் எப்போதும் முடிவுகளை விட அதன் செயல்முறையில் அதிகம் நம்பிக்கையோடு இருப்பவர். BELIEVE. நேற்று போட்டி முடிந்து பேசிய சிராஜ், "நான் வழக்கமாக காலை 8 மணிக்குதான் எழுவேன். ஆனால் இன்று காலை 6 மணிக்கே எழுந்தேன். ‘இன்று என்னால் முடியும்’ என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். பின்னர் கூகுளில் சென்று இந்த படத்தை தேடினேன்," என்று போட்டிக்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
அப்போது அவர் தனது தொலைபேசியை உயர்த்திக்காட்டி, அதில் 'BELIEVE' (நம்பிக்கை) என எழுதியிருந்த ரொனால்டோவின் புகைப்படத்தை காண்பித்தார். "அந்த படத்தை பதிவிறக்கம் செய்து, வால்பேப்பராக வைத்தேன். அதனால் தான் சொல்லுகிறேன், நம்பிக்கையென்பது மிகவும் முக்கியமானது".
இந்திய கிரிக்கெட்டில் சிராஜ் என்கிற வேகப்பந்து வீச்சாளர் உருவாக்கியிருக்கும் தாக்கம் வெறும் புள்ளிவிவரங்களைக் கொண்டு மட்டுமே அளவிடக் கூடியது அல்ல. அவர் ஒரு போராளி. புள்ளி விபரங்களைக் கொண்டு நீங்கள் அளவிட்டாலும் அதுதான் நிஜம். ஒவ்வொரு பந்தையும், ஒவ்வொரு ஓவரையும் வீசும்போது அதைத் தனது நாட்டிற்காக செய்யும் பாக்கியமாகவே கருதுகிறார். அவர் பார்வையில் வெற்றி என்பதே செயல்முறைதான். அதன்பிறகு தான் விக்கெட்டுகளும் புள்ளி விபரங்களும். அவர் எப்போதும் தேவையில்லாமல் ரன்களை விட்டுக்கொடுத்து, தனக்குப் பின்னால் பந்துவீசுபவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கியதில்லை.
நம்பிக்கை, உழைப்பு, மற்றும் சிரமங்களை தாண்டும் மன உறுதி ஆகியவற்றின் முழுமையான உருவமே சிராஜ். அவர் போட்டிக்குப் பிறகு கூறிய "Believe" என்பது, வெறும் வால்பேப்பர் மட்டுமல்ல...