முதலமைச்சர் ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

OPINION : திமுக தீய சக்தியா? யாருக்கு? - சூர்யா கிருஷ்ணமூர்த்தி

ஆர்.எஸ்.எஸ்., பாஜக, ஆரியக்கூட்டம் போன்றோருக்கு திமுக தீயசக்திதான். தமிழ்நாட்டை ஒடுக்க வேண்டும்; மக்களை சாதியால் பிளவுபடுத்த வேண்டும்; பட்டியல், பழங்குடியின மக்களை அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுக்க வேண்டுமென நினைப்பவர்களுக்கு திமுக தீயசக்திதான்.

PT digital Desk

சூர்யா கிருஷ்ணமூர்த்தி

செய்தித் தொடர்புக்குழு துணைச்செயலாளர்

திமுக

திமுக தீய சக்திதான். ஆர்.எஸ்.எஸ்., பாஜக, ஆரியக்கூட்டம் போன்றோருக்கு திமுக தீயசக்திதான். தமிழ்நாட்டை ஒடுக்க வேண்டும்; மக்களை சாதியால் பிளவுபடுத்த வேண்டும்; பட்டியல், பழங்குடியின மக்களை அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுக்க வேண்டுமென நினைப்பவர்களுக்கு திமுக தீயசக்திதான். அரசியல் ரீதியாக அவர்களுடைய எண்ணங்களுக்கு திமுக தீயசக்தியாக இருந்திருக்கிறது.. இனிமேலும் இருக்கும்.. அப்படிப்பட்டவர்களைக் காப்பாற்ற வேண்டுமென நினைப்பவர்களுக்கும், அவர்களது பணியாட்களுக்கும் திமுக தீயசக்தியாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை.

சூர்யா கிருஷ்ணமூர்த்தி

இன்றைய காலக்கட்டம் என்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் செயல் திட்டங்களை தமிழ்நாட்டில் தீவிரமாக செயல்படுத்த வேண்டுமென நினைப்பவர்கள் அதிகமிருக்கும் காலக்கட்டம். அப்படியிருக்கும்போது, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு எதிரான திமுகவின் அரசியல் ரீதியிலான விமர்சனங்கள், மக்கள் மத்தியில் பரவலாக்கப்படுவதை தடுக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுகிறார்கள். அனைத்திற்கும் திமுகவே காரணம் என கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களில் முன்களப் பணியாளராக விஜய் இருக்கிறார். எனவே, விஜய்க்கும் திமுக தீயசக்தியாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை. விஜய்க்கு வேண்டுமானால் திமுக தீயசக்தியாக இருக்கலாம். தமிழ்நாட்டு மக்களுக்கு எப்போதும் தீய சக்தியாக இருந்ததில்லை.

முக்கிய பிரச்னைகளில் விஜயின் நிலைப்பாடு என்ன?

தற்காலத்தில் தமிழக மக்களை அச்சுறுத்தக்கூடிய கடைசி 10 விஷயங்களை உதாரணங்களாக எடுத்துக்கொள்வோமே. திருப்பரங்குன்றம் விவகாரம், தமிழ்நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்ட வேண்டுமென்ற நோக்கம், மெட்ரோ திட்டத்திற்கு நிதி கொடுப்பதில் சிக்கல், நெல் ஈரப்பதம் பிரச்னை, ஒன்றிய அரசு கொண்டு வரக்கூடிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட பெயர் மாற்றம் மற்றும் அத்திட்டத்தை சிதைக்கக்கூடிய முயற்சி, ஈரோடு, திருப்பூர் மக்களை அதிகளவில் பாதிக்கும் அமெரிக்க வரி விவகாரம் போன்றவை இன்றைய தமிழ்நாட்டில் மிக முக்கிய பிரச்னைகள். இப்பிரச்னைகளில் விஜய் என்ன நிலைப்பாடு எடுத்தார். அப்படியே எடுத்தாலும் அப்போதும் திமுகவைத்தான் திட்டுவேன்., பாஜகவை ஒன்றுமே சொல்லமாட்டேன் எனும் போக்கில்தான் விஜய் இருக்கிறார்.

தவெக தலைவர் விஜய்

பாசிச பாஜக என்று அவர் ஆரம்பத்தில் சொன்னார். கரூர் நிகழ்வுக்குப் பிறகு அவர் ஏன் அந்த வார்த்தையை உச்சரிக்கவில்லை. கரூர் நிகழ்வுக்குப் பின் பாஜக குறித்து விஜய் கூர்மையாக எங்காவது விமர்சனத்தை முன்வைத்தாரா? ஆனால், பாஜக கொண்டு வரக்கூடிய அனைத்து விசயங்களுக்கும் அவர் திமுகவை குற்றம் சாட்டுகிறார். இதைத்தான் அதிமுகவும் செய்தது. அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. கூட்டணி தர்மத்தை காப்பதற்காக அதிமுக பொதுக்குழுவில் திமுகவை மட்டும் விமர்சிக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். இதிலும் நுட்பமான விஷயம் இருக்கிறது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டதற்கும், மீண்டும் கூட்டணி அமைத்துக்கொண்டதற்கும் இடைப்பட்ட காலம் என்று ஒன்று இருந்தது. அப்போது அவர்களும் பாஜகவின் தவறுகளுக்கு திமுகவைத்தான் குறை சொன்னார்கள். இப்படித்தான் விஜயும் அரசியல் செய்கிறார்.

கல்வி நிலை குறித்து விஜய் பேசுகிறார்.  2014 – 2024 வரையிலான 10 ஆண்டுகளில் பாஜக ஆளக்கூடிய உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொத்துக்கொத்தாக பள்ளிகள் மூடப்பட்டன. மத்திய பிரதேசத்தில் 29,410 பள்ளிகளும், உத்தர பிரதேசத்தில் 25,126 பள்ளிகளும் மூடப்பட்டன. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக உயர்ந்தன. ஆனால், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்காலத்தில் மூடப்பட்ட முந்நூற்று சொச்சம் பள்ளிகளில் 89 பள்ளிக்கூடங்களைத் திறந்தது திமுக அரசு. ஆனால், தமிழ்நாட்டின் கல்வி நிலை குறித்து திமுகமேல் விமர்சனத்தை வைக்கிறார்.

மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி

யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏழ்மையில் இருப்பதாக தவெகவினர் சொல்கின்றனர். இது அடிப்படையிலேயே தவறான கூற்று. வறுமை ஒழிப்பை பற்றி மட்டுமே இதில் பேசுவோமே.. இந்திய அளவில் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம். இதனை ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அறிக்கை சொல்கிறது. இந்திய அளவில் வறுமையில் மிகக் குறைவானவர்கள் இருக்கும் மாநிலமும் தமிழ்நாடுதான். இவர்களும் மேலேற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இன்று இருக்கும் நிலைகூட 1967ல் இல்லை. திமுக ஆட்சி அமைப்பதற்கு முன் தமிழ்நாட்டின் கிராமப்புற வறுமையையும், பீகாரின் கிராமப் புற வறுமையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பீகார் நம்மைவிட மேம்பட்டு இருந்தது. இன்று அந்த நிலை தலைகீழாக மாறியிருக்கிறது. இதற்கு மிக முக்கியக் காரணம் திமுகவின் தொடர்ச்சியான தலையீடுகளும் அதன் திட்டங்களும்.

வறுமை ஒழிப்பும் தமிழ்நாடும்

வறுமையைப் பல்வேறு பரிமாணங்களில் பார்க்கும்போக்கே இப்போதுதான் இருக்கிறது. 30 35 வருடங்களுக்கு முன், மக்களின் மாத சராசரி அளவுகோளின்படிதான் வறுமையை அளவிட்டார்கள். உலகளவில் இதுதான் நிலை. வறுமையை வருமானத்தைக் கொண்டு மட்டுமே அளவிடக்கூடாது; அதை அளவிட பல்வேறு கோணங்கள் இருக்கின்றன எனும் புரிதலே 90களில்தான் வருகிறது. 2010ல் ஐக்கிய நாடுகள் சபை பலபரிமாண வறுமை குறியீட்டை (Multidimensional Poverty Index) அறிமுகப்படுத்துகிறார்கள். 2020ல்தான் ஒன்றிய அரசு நிதி ஆயோக் மூலமாக அதை ஒரு குறியீடாக ஏற்றுக்கொள்கிறார்கள். வறுமைக்கான காரணங்களாக MPIல் பட்டியலிடப்பட்டு இருக்கும் விஷயங்களை தீர்ப்பதற்கு 40 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே வேலைபார்த்த கட்சி திமுக.

வறுமை ஒழிப்பில் உடல்நலம் மிக முக்கியக் கூறு. முக்கியமாக ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய வேண்டும்; குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும். இவை இரண்டுக்குமான தலையீடு கலைஞரின் ஆட்சிக்காலத்தில் நடந்தது. சத்துணவு திட்டத்தில் முட்டையைக் கொண்டு வந்தது ஊட்டச்சத்து குறைபாடை போக்குவதற்கான முக்கியமான நடவடிக்கை. கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி கொடுத்தது பேறுகால ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்வதற்கான முக்கிய நடவடிக்கை. இதை 1989களில் கலைஞர் கொண்டு வருகிறார்.

அதற்கடுத்தது குழந்தை இறப்பு விகிதம்.. இதில் தமிழ்நாடு எடுத்த மிக முக்கிய முயற்சி என்பது கர்ப்பிணிகள் அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டுவந்து, மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் பிரசவம் நடைபெற வைத்தது. இதை எப்படி செயல்படுத்துவது என்றால் பேறுகால உதவித்தொகை எனும் திட்டத்தை கலைஞர் கொண்டு வருகிறார். அனைத்து பிரசவங்களும் மருத்துவனையில் நடைபெற தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன்மூலம் அவை பதிவு செய்யப்படுகின்றன. அதை அரசு தொடர்ச்சியாக கவனிக்கிறது. இதன் விளைவுதான் குழந்தை இறப்பு விகிதத்தை தமிழ்நாடு குறைத்தது.

கல்வியில் தமிழ்நாடு

அடுத்தது கல்வி வறுமை ஒழிப்பில் முக்கியக்கூறு. ஒரு குழந்தை எத்தனை வருடம் பள்ளியில் படிக்கிறது என்பதும் பள்ளிக்கு வரும் குழந்தையின் வருகைப்பதிவு ஒழுங்குபடுத்தப்பட்டு முறையாக இருக்கிறதா என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. அதை திமுக அரசாங்கம் செய்தது. குழந்தைகள் கல்வி பயிலும் சூழலை நீட்டிப்பதற்கு முதல் தலைமுறை பட்டதாரி சலுகை வழங்கியதை சொல்லலாம்.. உள் இடஒதுக்கீடு வழங்கியதை சொல்லலாம்.. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் முக்கியமான இடஒதுக்கீடு மாற்றங்களைக் கொண்டு வந்து அனைத்து தரப்பு மாணவர்களையும் கல்லூரிக்குக் கொண்டுவர கலைஞர் முயற்சிகளை எடுத்திருக்கிறார்,.

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்களின் வருகையை மேம்படுத்த இன்றும் திமுக அரசு முயற்சிக்கிறது. உதாரணத்திற்கு, காலை உணவுத்திட்டம். தேர்தல் அறிக்கையில் காலை உணவுத்திட்டம் இல்லை. அந்தத் திட்டத்தால் பல லட்சம் மாணவர்கள் இன்று பயன் பெறுகிறார்கள். காலை உணவுத்திட்டம் கொண்டு வந்தபின் 10ல் இருந்து 23% வரை ஒவ்வொரு பகுதிகளிலும் மாணவர்களின் வருகைப்பதிவு மேம்படுகிறது. மாணவர்களின் வருகை சீரமைக்கப்படுகிறது. கலந்தாய்வுக் கூட்டங்கள் மூலமாக அனைத்து மாணவர்களையும் ஒரே இடத்திற்கு கொண்டு வந்து கல்விக்கான சூழலை மாற்றியதில் கலைஞருக்கும் திமுகவிற்கும் பெரும் பங்கு இருக்கிறது. புதுமைப்பெண் திட்டம். இத்திட்டத்தின் வெற்றி என்பது கல்லூரிக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதை உறுதி செய்கிறது.

அடுத்தது, சுகாதாரமான சமையல் எரிவாயு கிடைக்கிறதா? என்பது வறுமை ஒழிப்பில் முக்கியக்குறியீடு. நாட்டிலேயே கலைஞர்தான் 2006 – 2011 அரசில் கேஸ் அடுப்பு கொடுத்தார். சுகாதாரமான குடிநீர் மக்களுக்குக் கிடைக்கிறதா என்பதும் வறுமை ஒழிப்பு குறியீட்டில் முக்கியம். 1970களில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை உருவாக்கியவர் கலைஞர். ஆனால், பலபரிமாண வறுமை குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது 1990களில்.. அதை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது 2020களில்தான்., 50 ஆண்டுகளுக்கு முன்பே அந்த புரிதல் திமுகவிற்கு இருந்தது.

குடிசை மாற்று வாரியத்தை நாட்டிலேயே முன்னோடியாக உருவாக்கியவர் கலைஞர். பண்ணையார்களிடம் இருந்த சொத்துகளை மீட்க நில உச்ச வரம்பு சட்டத்தை முழுமையாக செயல்படுத்தி ஏழை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்தது திமுகதான். பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு என்பதும் திமுகதான். வறுமையை ஒழிப்பதில் இவையெல்லாம் முக்கியமான விஷயங்கள். இவற்றை 1970களில் இருந்தே திமுக சிந்தித்துக்கொண்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் இன்றைய திமுக அரசு.

தமிழ்நாட்டின் வளர்ச்சி

அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பூஜ்ஜியம். அப்படியிருந்த சூழலில் இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது 11.19%. RBI கூற்றுப்படி, Nominal Growth 16%. இந்தியாவில் 16% வளர்ச்சியை அடைந்த எந்த மாநிலமும் இல்லை. டபுள் இன்ஜின், ட்ரிப்பிள் என்ஜின் சர்க்கார் என்று சொல்லக்கூடிய மாநிலங்கள் எல்லாம் நமக்கு அருகில்கூட இல்லை. ஒன்றிய அரசாங்கத்தின் பட்ஜெட்டில் கணிசமான அளவை பெற்றுக்கொள்ளக்கூடிய மாநிலங்கள் கூட இந்த வளர்ச்சியை அடையமுடியவில்லை. ஒன்றிய அரசாங்கத்தின் அனைத்து விதமான துரோகங்களுக்குப் பிறகும், ஒன்றிய அரசாங்கத்தின் சூழ்ச்சிகளுக்குப் பிறகும் யாரும் தொட முடியாத உயரத்தில் இருப்பது தமிழ்நாடுதான். இதை அதிமுக விட்டுச்சென்ற பூஜ்ஜியத்தில் இருந்துதான் அடைந்திருக்கிறோம். 

முதல்வர் மு.க.ஸ்டாலின்

யாரும் தொடமுடியாத வளர்ச்சியை நாம் அடைந்துவிட்டோம். சரி.. அடுத்தது அந்த வளர்ச்சியால் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும். அதாவது பொருளாதாரத்தை பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். அந்த வகையிலும் இந்த அரசாங்கம், ஈட்டிய வளத்தை மக்களிடம் பங்கிட்டுக் கொடுக்கக்கூடிய அரசாகத்தான் இருந்திருக்கிறது.

உதாரணத்திற்கு மகளிர் உரிமைத்தொகை. இதை ஓசி., தியாகம் செய்ய வேண்டும் என்று பேசியவர்கள் தவெகவினர். நேற்று கூச்சமே இல்லாமல் விஜய் திமுகவினர் ஓசி என்று சொல்வதாகச் சொல்கிறார். கடந்த காலங்களில் சமூக நலத்திட்டங்களை மட்டப்படுத்தி மலினப்படுத்தி பேசியது விஜயும் அவரது கூட்டமும்தான்.  விடியல் பயணம் திட்டத்தின் மூலமாக மாதந்தோறும் 900 ரூபாயை பெண்கள் சேமிக்கின்றனர்.

அடுத்தது மக்களைத் தேடி மருத்துவம். பல உலக நாடுகளில் அவசர காலம் இல்லாத மருத்துவத் தேவைகளுக்கு மருத்துவர்களை அணுக வேண்டுமென்றால் நாட்கணக்கில் காத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் மருத்துவ வசதியை வீட்டு வாசலுக்கு கொண்டு வந்து நிறுத்திய அரசு திமுக. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், இன்னுயிர் காப்போம், உங்களுடன் ஸ்டாலின், பயிர்க்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி என அனைத்து தரப்பு மக்களுக்கும் வேண்டிய தேவைகளை செய்திருக்கிறது திமுக அரசு. ஒருபக்கம் வளர்ச்சியை உறுதி செய்துள்ளோம். மறுபக்கம் அந்த வளர்ச்சியை மக்களிடமும் கொண்டு சேர்த்திருக்கிறோம்.

ஸ்டாலின், விஜய்

இவையெல்லாம் ஒன்றிய பாஜக அரசு தரும் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் செய்யப்பட்டு வருகின்றன என்பதுதான் முக்கியமானது. கடைசி ஒரு மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டுக்கு பாஜக எவ்வளவு நெருக்கடிகளைக் கொடுத்தது. முதலில் திருப்பரங்குன்றம். ஆனால், விஜய் பாஜகவை ஒன்றும் சொல்லாமல் திமுகவை தீயசக்தி என்கிறார். அப்படியானால், யார் உண்மையான தீயசக்தி. கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ கொடுக்காதது பாஜக. ஆனால், திமுகவை தீயசக்தி என்கிறார். 100 நாள் வேலைத் திட்டத்தை செயலிழக்க வைப்பதுபோன்ற சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தது பாஜக. திமுகவை தீய சக்தி என்கிறார் விஜய். SIR மூலம் தமிழ்நாட்டு மக்களது வாக்குரிமையைப் பறிக்க நினைக்கிறது பாஜக. திமுகவை தீய சக்தி என்கிறார் விஜய். நெல் ஈரப்பத அளவை உயர்த்துங்கள் என்கிறோம். உயர்த்த முடியாது என்று பாஜக சொல்கிறது. விஜய் திமுகவை தீய சக்தி என்கிறார். பாஜகவின் தவறான வெளியுறவுக் கொள்கைகளின் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட அமெரிக்க வரி விதிப்பில் கடுமையாக பாதிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு. குறிப்பாக ஈரோடு, திருப்பூர் போன்ற ஜவுளி வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்டி றனர். விஜய் ஈரோட்டிற்கு சென்று அதுகுறித்து வாயே திறக்கவில்லை.

தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு என்ற கூர்மையை மட்டுப்படுத்த வேண்டும்; பாஜகவின் துரோகங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வதைத் தடுக்க வேண்டும்; அதற்கு தங்களை பலியிட்டுக்கொள்ளக்கூடியவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். பாஜகவின் ஏஜெண்டுகளாக பணியாற்றுகிறார்கள். பாஜக குறித்து நான் பேசமாட்டேன் என்பதைத்தான் களத்தில் இல்லாதவர்களைப் பற்றிப் பேசமாட்டோம் என்கிறார். அப்படி பேசினால், அமித்ஷா மோடி போன்றவர்கள் கோபித்துக் கொள்வார்கள். அப்படி பாஜக ஆதரவானவர்களுக்கு பாஜக தீயசக்தியாகத்தான் தெரியும். தமிழ்நாட்டு மக்களுக்கு காவல் சக்தியாக திமுக இருப்பதால்தான் தொடர் வெற்றிகளைக் கொடுக்கிறார்கள்.