special story on revolutionary poet subramania bharathiyar
revolutionary poet subramania bharathiyarpt web

மகாகவியின் உண்மை அடையாளம் எது? பாரதியின் அதிகம் அறியப்படாத வரலாற்றுப் பக்கங்கள்!

மக்கள் மத்தியில் பாரதியை பெருமளவில் கொண்டு சென்றவர்கள் யார்? இப்போதைய காலக்கட்டத்தில் சிலர் பாரதியை தூக்கிப் பிடிப்பதற்கும் காரணம் இருக்கிறதா? பாரதியை உண்மை தகவல்களின் அடிப்படையில் புரிந்து கொள்வதற்கான முயற்சியே இந்தக் கட்டுரை
Published on

கடற்கரய் மத்தவிலாச அங்கதம்.. இலக்கிய ஆய்வாளர், எழுத்தாளர், பதிப்பாளர். பாரதி விஜயம், பாரதி நினைவுகள் செம்பதிப்பு, காந்தி படுகொலை: பத்திரிகைப் பதிவுகள் என்று பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கிறார்,. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், 1918 முதல் 2021 வரை வெளியான பாரதியின் விமர்சனக் கட்டுரைகளை யாமறிந்த புலவன் எனும் பெயரில் புத்தகமாகக் கொண்டு வந்தவர். 

தற்காலத்தில் பாரதியார் குறித்து இருக்கும் புரிதல், அவர் தொடர்பான விவாதம், அரசியல் கட்சிகள் திடீரென அவரை தங்கள்வசப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பாக பாரதியின் பிறந்த தினத்தை ஒட்டி, கடற்கரயிடம் பேசினோம். அவர் பேசியவை கேள்வி பதில்களாக...

writer kadarkarai
writer kadarkarai
Q

பாரதியை சிலர் வெறும் ஆன்மிகவாதியாக முன்வைக்கிறார்கள்.. இந்த உரையாடலை எப்படி புரிந்துகொள்வது?

பாரதி இறந்ததற்குப் பிற்பாடு வந்த தலைமுறையினர் பாரதியை வேறுவிதமாகப் புரிந்துகொண்டனர். அதற்குக் காரணம், பாரதி வாழ்ந்த காலக்கட்டத்தின்போது இருந்த சூழல் குறித்து பிற்பாடு வந்த தலைமுறையினருக்குத் தெரிவதில்லை. சமகாலத்தில் தங்களுக்கு இருக்கக்கூடிய அறிவைக் கொண்டு அந்த காலத்தினைப் பார்க்கிறார்கள். அதோடு அவர்களிடம் நிறைவான ஒரு வரலாற்று அறிவு இல்லை.

Q

விரிவாக சொல்ல முடியுமா?

உதாரணத்திற்கு, வ.வே. சுப்பிரமணியம் இருந்தார். இவர் பாரதிக்கு மிக உற்ற தோழர். பிற்காலத்தில் துறவு போன்ற ஓர் வாழ்க்கையை வாழ்ந்தார். ஆனால், தற்கால சமுதாயத்தினர் அவரை சாமியார் என்பதைப் போல புரிந்துகொள்கிறார்கள். அடுத்தது சுப்ரமணிய சிவா. இவர் பாரதியின் ஆத்மார்த்தமான நண்பர். வஉசியும், சிவாவும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொல்லும் அளவிற்கு வாழ்ந்தவர்கள். சிவா 1908ல் தென்னிந்தியாவில் மாபெரும் தொழிலாளர் புரட்சியை ஏற்படுத்தியவர். 1908 என்பது இந்தியாவில் தொழிலாளர்களுக்கென ஓர் இயக்கத்தைக் கம்யூனிஸ்ட்டுகள் கட்டாத காலம். அப்போது வஉசியும் சிவாவும் கோரல் மில் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்காகப் போராடுகிறார்கள். பின் அது சுதேசி ஸ்டீம் கம்பெனியின் வளர்ச்சியாக மாறுகிறது. ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கப்பல் விடுவதற்காக தயாராகிறார்கள். ஆனால், வழக்கு தண்டனை என சென்று வந்தபின் வஉசி அமைதியான அரசியல் துறவர நிலையைக் கடைபிடிக்கிறார். சிவாவிற்கு சிறையில் தொழுநோய் வந்து அவர் சிறையில் இருந்து வெளியில் வந்தபின் அவர் ஆன்மிகம், பாரதம் என்று தேசிய சிந்தனையுடன் கூடிய ஒரு ஆன்மிக நிலைக்குச் சென்றுவிடுகிறார்.

அதே காலகட்டத்தில் திருவிக இருந்தார். அப்போதைய தமிழ்நாட்டில் மிகப்பெரிய தொழிலாளர் இயக்கத்தைக் கட்டி அமைத்தவர் அவர். பின் அவரும் முருக பக்தி, கடவுள் பக்தி என்று ஆன்மீக துறவர நிலையை அடைகிறார்.

அலிகார் குண்டு வெடிப்பு வழக்கில் மிகப்பெரிய புரட்சியாளராக அறியப்பட்ட அரவிந்தர் அங்கு இருந்து தப்பி பாண்டிச்சேரிக்கு வந்தபின் தனக்கு இருந்த ஓய்வு நேரத்தில் வேதாந்த ஆராய்ச்சி செய்கிறார். முழு நேரமாக வேதமரபு போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறார். அந்த காலக்கட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் இந்த மரபு இருந்தது.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நீலகண்ட பிரம்மச்சாரி.. இவர்தான் ஆஷ் துரை வழக்கில் முதல்முறையாக கைது செய்யப்பட்ட குற்றவாளி. தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக அரசியல் படுகொலை சம்பந்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர். அவரும் ஜெயிலில் வெளிவந்ததற்கு பின் பிறள் சாட்சியாக மாறி ஆன்மிகம், ஆசிரமம் என்று வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். இது இந்தியா முழுவதுமே அன்று இருந்த பொதுவான நிலை. ஆனால், இவர்கள் சொன்ன ஆன்மிகம் வேறு. இப்போது சமகாலத்தில் சிலரால் முன்வைக்கப்படும் ஆன்மிக முன்னுதாரணங்கள் வேறு.

இவர்கள் விவேகானந்தரைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால், விவேகானந்தர் பெரியாரை விட கடுமையாக இந்து மதத்தை சாடியிருக்கிறார். தீண்டாமை, சிலை வழிபாடு போன்றவற்றை அவர் கடுமையாக எதிர்த்து இருக்கிறார். விவேகானந்தருக்குப் பின் வந்த அவரை பின்தொடர்பவர்கள் விவேகானந்தரின் உடை, அவரது தோற்றம் போன்றவற்றை வைத்து அவரை ஒரு சாமியாராகக் கட்டமைக்கிறார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை

விவேகானந்தர் பெரியாரை விட கடுமையாக இந்து மதத்தை சாடியிருக்கிறார். தீண்டாமை, சிலை வழிபாடு போன்றவற்றை அவர் கடுமையாக எதிர்த்து இருக்கிறார்.

நீங்கள் தேடிப்பார்த்தீர்கள் என்றால், புரட்சிகர இயக்கத்தில் இருந்து வெளிவந்த பின் இனிமேலும் நம்மால் இயங்க முடியாது என்று பலரும் முடிவெடுத்தார்கள். ஏனெனில் இவர்கள் எல்லாம் பிரிட்டிஷ் காலத்து ஆட்கள். பிரிட்டிஷின் ஆட்சி ஓங்கி இருந்த காலக்கட்டத்தில் இத்தகைய நிலையை எடுத்தவர்கள். ஆனால், பாரதி சாகும் வரை அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அவர் இறக்கும் தருவாயிலும் அரசியலில் ஈடுபாடு கொண்ட கவிஞராகத்தான் இருந்தார்.

அவரது இயக்கம் 1904ல் தொடங்குகிறது. அப்போது விவேகானந்தரின் சீடர் நிவேதா தேவி மூலமாக பெண் விடுதலை தொடர்பான சிறு புரிதலுடன் தொடங்கப்பட்ட அவரது வாழ்க்கை 1921ல் அவர் இறக்கும் வரை காந்திய நிலைப்பாட்டை எடுத்து அரசியல் நிலைப்பாட்டுடன்தான் இருந்தார். அவர் எங்கும் துறவரம் போகவில்லை, காவி உடை தரித்துக்கொள்ளவில்லை. எந்த கோவில் ஆசிரமத்திலும் போய் உட்காரவில்லை. எனவே இவர்கள் எதிர்பார்க்கும் சாமியார் அடையாளம் அவருக்குப் பொருந்தாது.

Q

அவரது பாடல்களில் கடவுகளர்கள் இருந்தார்கள்..  ரஷ்யப் புரட்சிக்கு மாகாளி பராசக்தி அங்கே கடைக்கண் வைத்ததுதான் என்றெல்லாம் எழுதியிருக்கிறாரே?

அவரிடம் ஆன்மிகத் தேடல் இருந்தது. ஏனென்றால், அவரது லட்சியமே இறை பக்தியோடு தேசிய உணர்ச்சியை கலத்தல் என்பதுதான். அவர் திலகர் ஆதரவாளர் என்பதால் திலகரின் சாயலில் சிறு விஷயங்களை செய்கிறார். எனவே இறை பாடல்களில் தேசிய உணர்ச்சியைக் கலக்கிறார். கடவுள் வாழ்த்து என்றாலும் தேசிய உணர்ச்சியைக் கலக்கிறார். விநாயகர் நான்மணி மாலை என்று ஒரு பாடலில் புத்தர், ஏசு, அல்லா போன்றவர்களைக் கொண்டு வருகிறார். இது எல்லாம் ஏன் என்றால் அந்தக் காலத்தில் ஒரு ஒருமைப்பாடு தேவைப்பட்டது. அந்த ஒருமைப்பாட்டைக் கொண்டு வருவதற்காக, தேசிய உணர்ச்சியில் இத்தகையப் பாடல்கள் கட்டமைக்கப்பட்டது,.

கடவுள் வாழ்த்து என்றாலும் தேசிய உணர்ச்சியைக் கலக்கிறார். விநாயகர் நான்மணி மாலை என்று ஒரு பாடலில் புத்தர், ஏசு, அல்லா போன்றவர்களைக் கொண்டு வருகிறார். இது எல்லாம் ஏன் என்றால் அந்தக் காலத்தில் ஒரு ஒருமைப்பாடு தேவைப்பட்டது.
Q

இன்றும் அரசியலில் மாநில சுயாட்சி முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது.. பாரதியும் அது தொடர்பாகப் பேசியிருக்கிறார்.. மாநில சுயாட்சிக்காக பேசும்போது பாரதியை யாரும் முன்னிலைப்படுத்துவதில்லையே?

பாரதியை தேசிய அடையாளம் கொண்ட கவிஞராக சொல்கிறார்கள். ஆனால், பாரதி அந்த காலகட்டத்திலேயே மாநில உணர்ச்சிகள் குறித்தும் பாடியிருக்கிறார். மொழிவாரி மாநிலங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு மாநிலங்களுக்கு சுயாட்சி கொடுக்க வேண்டுமென்று 1921க்கு முன்பே பாடியிருக்கிறார். அப்போது மாநில சுயாட்சி என்று ஒரு கொள்கையே கிடையாது. ஐரோப்பிய நாடுகளை அடையாளம் காட்டி இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக தனித்தனியாகப் பிரித்து அதற்கு நீங்கள் சுயராஜ்ஜியம் கொடுக்க வேண்டுமென்று 1921லேயே பேசுகிறார்.  1952-ல் அதாவது பாரதி இறந்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் கழித்துதான் மாநில சுயாட்சி என்ற குரலே ஒலிக்கிறது.

அந்தக்காலத்தில் கவிதையில் உலகளாவிய செல்வாக்கு கொண்டவராக தாகூர் இருக்கிறார். தாகூரின் கவிதைகளுக்கு 1913லேயே நோபல் பரிசு கிடைக்கிறது. அதை பாரதி தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுகிறார். ஆனால், அவர் கவிதை எழுதுகையில் சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு என்று எழுதுகிறார். நோபல் பரிசு வென்று வங்க மொழியில் தாகூர் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில், கவிதைகளுக்கு தாகூர் உலகளாவிய வெளிச்சத்தைப் பெற்றுக்கொண்டிருக்கும் காலத்தில், வங்கத்துக் கவிதைகள் இந்தியாவின் வளமிக்க கவிதைகள் என்று பேசப்படும்போது, சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம் என்று பாரதி எழுதுகிறார். மராட்டிய கவிதைகள் குறித்த அறிமுகமோ அறிவோ இல்லாமல் பாரதியால் இதை எழுதியிருக்க முடியாது. இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது மெட்ராஸ் மாகணம் என்று அவர் பொதுவாகப் பாடவில்லை. சேர நாடு, சுந்தரத் தெலுங்கு, செந்தமிழ்நாடு என்றெல்லாம் சொல்கிறார். அப்போது தமிழ்நாடு என்ற பெயர் வரலாற்றிலேயே இல்லை.

மொழிவாரி மாநிலங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு மாநிலங்களுக்கு சுயாட்சி கொடுக்க வேண்டுமென்று 1921க்கு முன்பே பாடியிருக்கிறார்.
Q

பாரதியின் அரசியல் புரிதல் எப்படிப்பட்டது?

மாநில உணர்ச்சி என்று அவர் சொன்னது., தேசிய உணர்ச்சி என்று அவர் சொன்னதும் இறை உணர்ச்சி என்று அவர் சொன்னதும் வேறு வேறு. தென் ஆசியாவிலேயே ரஷ்யப் புரட்சியை ஆதரித்துப் பாடியது பாரதிதான், இதை நான் மட்டும் சொல்லவில்லை. இது வரலாற்றுத் தகவல். அந்த நேரத்தில் தாகூர் கூட இத்தகைய நிலைப்பாட்டை எடுக்கவேயில்லை. ரஷ்யா என்பது பாரதிக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு நாடு. ஆனால் அந்நாட்டைப் போலவே நம்நாடும் பொதுவுடைமை சிந்தனையை அடைய வேண்டும் என்கிறார். பொதுவுடைமை என்ற வார்த்தையையே பாரதிதான் முதன்முதலாகப் பயன்படுத்துகிறார். அதற்கு முன் 2000 ஆம் ஆண்டுகளான தமிழ் வரலாற்றில் பொதுவுடைமை என்ற சொல் இல்லை. ஜப்பானிலும் இத்தகைய சிந்தனை வந்தபோது அதை உள்வாங்கிக்கொண்டு நம் தேசத்தையும் அதேபோல் கட்டமையுங்கள் என்கிறார்.

ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பு இயக்கம் போன்றவை வருவதற்கு முன்பாகவே ஜாதிய வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்கிறார். பாரதியை தேசிய அடையாளமாக கைகொள்வதற்கு இவர்கள் சொல்லும் காரணம், பாரதி பொட்டு வைத்திருந்தார் என்கிறார்கள். பாரதி தன் இறுதிக் காலத்தில்தான் பொட்டு வைத்துக்கொள்ளக்கூடிய பாரதியாக இருந்தார். அதாவது ஆறுமாத காலம். அப்போது எடுக்கப்பட்ட படத்தைக் கொண்டுதான் அவர் ஆன்மீகவாதி என்கின்றனர். அவர் ஆன்மிகவாதிதான்.. ஆனால், இவர்கள் சொல்லும் ஆன்மிகவாதி அல்ல.

தென் ஆசியாவிலேயே ரஷ்யப் புரட்சியை ஆதரித்துப் பாடியது பாரதிதான், இதை நான் மட்டும் சொல்லவில்லை. இது வரலாற்றுத் தகவல். அந்த நேரத்தில் தாகூர் கூட இத்தகைய நிலைப்பாட்டை எடுக்கவேயில்லை.
Q

பாரதி உடன் பயணித்தவர்கள் எல்லாம் பாரதியைப் பற்றி பேசியிருப்பார்கள். அதைப்பற்றியும் அவர்களைப் பற்றியும் சொல்லுங்கள்...

பாரதி நீண்டகாலம் உயிரோடு இருந்திருந்தால் அவர் எந்த இடத்தை நோக்கி சென்றிருப்பார் என்பதற்கு சொல்லப்போகும் விஷயங்கள் சில உதாரணம். பாரதியின் ஆத்ம சீடர் வ. ராமசாமி ஐயங்கார். பாரதியைப் பின்பற்றிய அவர், கடைசி வரை கடவுள் மறுப்பாளராக வாழ்ந்தவர். சாதியை அறுத்தவர், பூநூலை அறுத்தவர். முதலில் தேசிய இயக்கத்தில் தொடர்பு கொண்டவர். பிராமணராக இருந்து பிராமணியத்தைத் துறந்தவர். கலப்புத் திருமணம் செய்துகொண்டவர். கடைசியாக பெரியாரின் சீடராக சென்று பெரியார் தொடர்பான கட்டுரையை எழுதினார். அதனால்தான் அண்ணா அவரை அக்ரஹாரத்தின் அதிசய மனிதர் என்று சொன்னார்.

அடுத்தது பாரதியின் ஆத்ம நண்பராக இருந்தவர் சர்க்கரை செட்டியார். சர்க்கரை செட்டியார் விடலைப் பையனாக இருந்தபோது பாரதியுடன் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்றவர். பின் சென்னைக்கு மேயராக வந்தார். கம்யூனிஸ்ட் இயக்கம் 1924 - 1925 கட்டமைக்கப்படும்போது முக்கியத் தலைவராக இருந்தார். அதன்பிறகு பெரியாரிடம் சென்று சேர்ந்தார்.

அதேபோல், சுரேந்திரநாத் ஆர்யா என்பவர் பாரதியின் நெருங்கிய நண்பர். இவர் பாரதிக்கு முன்னாலேயே ஜெயிலுக்கு சென்றவர். ஜெயில் வாழ்க்கை முடிந்து வந்தபின் இந்துவாக இருந்த அவர் வெளிநாடு சென்று கிறித்தவராக மாறி கிறித்தவப் பெண்ணையே திருமணம் செய்துகொள்கிறார். பின் இந்தியா வந்தபின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்துகொள்கிறார். சுரேந்திரநாத் இறந்தபின் அவர் குறித்த இரங்கல் செய்தியை குடியரசு இதழில் வெளியிட்டு அவர் மிகப்பெரிய புரட்சியாளர் என்று குடியரசு இதழில் எழுதினார்கள்.

அடுத்தது பாரதியுடன் எம்.பி.டி ஆர்யா என்பவர் இருந்தார். அவர் பாரதியின் இந்தியா பத்திரிகையின் ஆசிரியர். 1908 - 1909ல் லண்டனுக்கு சென்றார். ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டமைக்கப்பட்டபோது அதில் இருந்த நான்கைந்து தலைவர்களில் ஒருவராக இருந்தவர் எம்.பி.டி ஆர்யா. லெனினுடன் நேரடித் தொடர்பு கொண்டவர் ஆர்யா. அவர் அங்கிருந்து இங்கு வந்து இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டமைக்கிறார். 1950கள் வரை இருந்து அதன்பின் மறைந்தார். பாரதியின் ஆத்மார்த்தமான நண்பர்களாக இருந்தவர்கள் எல்லாம் கடைசியில் போய்ச்சேர்ந்த இடம் ஆர்எஸ்எஸ் இயக்கமல்ல. பாரதியின் சிந்தனையால் வளர்க்கப்பட்டவர்கள் சுயமரியாதை இயக்கத்துக்குச் சென்றார்கள், கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குச் சென்றார்கள். துறவரம் பூண்டு அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள். சிலர் காந்தியத்திற்குச் சென்றார்கள்.

1925ல் ஆர் எஸ் எஸ் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்தோ, தமிழ்நாட்டில் இருந்து வெளியில் சென்றவர்களோ அல்லது பாரதியின் ஆத்ம சீடராக இருந்தவர்களோ யாரும் இந்து மகா சபையில் சென்று சேரவில்லையே. இந்து அமைப்புகளோடோ அல்லது தேசிய அமைப்புகளோடோ அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லையே. வங்காளத்தில் பங்கிம் சத்திர சட்டர்ஜி அவர்களுக்குத் தேவைப்படுவதுபோல் தமிழ்நாட்டில் பாரதி திருவள்ளுவர் போன்றோர் அவர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். அதில் யாருமே அவர்களது நிலைப்பாடு கொண்டவர்கள் அல்லர்.

பாரதியின் சிந்தனையால் வளர்க்கப்பட்டவர்கள் சுயமரியாதை இயக்கத்துக்குச் சென்றார்கள், கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குச் சென்றார்கள். துறவரம் பூண்டு அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள். சிலர் காந்தியத்திற்குச் சென்றார்கள்.
Q

இவர்கள் பாரதியைப் பற்றி எழுதிய குறிப்புகள் எதாவது?

பாரதி தொடர்பான பல்வேறு ஆவணங்களைத் தேடும்போது ஓரிரு தினங்களுக்கு முன் முக்கியமான ஆவணம் கிடைத்தது. சர்க்கரைச் செட்டியார் பாரதியின் கூடவே இருந்தவர். 1955ல் சர்க்கரை செட்டியார் எழுதிய ஒரு கட்டுரையைக் கண்டுபிடித்தேன். அதில், பாரதியின் கடைசி காலத்தில் நடந்த சில நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறார். பாரதியின் தமிழ்நடை சிறப்பாக இருப்பதால் அவரிடம் ஒரு நபர் வந்து பைபிளை தமிழில் மொழி பெயர்த்துக் கொடுக்கச் சொல்கிறார். பாரதியும் ஒப்புக்கொண்டார் என்ற குறிப்பு இருக்கிறது. பைபிள் இந்தியாவில் வெகுகாலத்திற்கு முன்பே வந்துவிட்டது. ஆனால், பாரதிக்கு ஏசுநாதர் மேல் மிகப்பெரிய ஈர்ப்பு இருந்ததாக சர்க்கரை செட்டியார் எழுதுகிறார்.

Q

பாரதியை குறிப்பிட்ட மதத்தின் ஆன்மிகவாதியாக முன்னிறுத்துபவர்கள் பிற மதங்கள் குறித்த பாரதியின் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்தானே?

இன்று வலதுசாரி மனநிலையில் இருப்பவர்களால் தர்காவும் கோவிலும் அருகருகே இருப்பதையே பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், பாரதி பொட்டல் புதூரில் இஸ்லாமிய கூட்டத்தில் அல்லாவுக்காக பாடல் பாடுகிறார். இன்னொரு கூட்டத்தில் ஏசுநாதரைக் குறிப்பிடுகிறார்.. புத்தரைக் குறிப்பிடுகிறார். பாரதியின் அடிப்படையான ஒருமைப்பாட்டை இவர்கள் ஏற்பார்களா? அதாவது, பன்முகத்தன்மையில் இருக்கக்கூடிய ஒருமைப்பாடு.

இந்துமதத்தில் வாழ வேண்டும் என்று சொன்னார். ஆனால், அதே இந்து மதத்தை அவர் கடுமையாக விமர்சித்தார். சாதியப்படிநிலைகளை, வர்ணாசிரமத்தை கடுமையாக விமர்சித்தார். மக்களை சமநிலைப்படுத்த வேண்டும்,. எல்லோரும் சரிநிகர் சமாணம் என பாடல்களின் வழியே வலியுறுத்தினார். பாரதி சொன்ன உலகமும் கலாச்சார அமைப்பும் வேறு. இவர்கள் எவ்வித புரிதலும் இல்லாமல் பொட்டு வைத்திருக்கிறார், டர்பன் கட்டியிருக்கிறார் என்று சொல்லி ஆன்மிகவாதி என்கின்றனர். பாரதியின் ஆன்மிகத்திற்கும் இவர்கள் முன்வைக்கும் ஆன்மிகத்துக்கும் துளியும் சம்பந்தம் இல்லை.

பாரதியின் ஆன்மிகம் என்பது தேசிய உணர்வு கொண்ட அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து செயல்படக்கூடிய, அனைத்து மதங்களையும் ஒருங்கிணைக்கக்கூடிய தேசிய நிலைப்பாடு கொண்ட ஆன்மிகம். அதில் புத்தர், அல்லா, ஏசு என எல்லோரும் வருவார்கள். ஆனால், வலதுசாரிகள் ஏசுவின் மலைபிரசங்கத்தை பேசுவார்களா? அதில் இருக்கக்கூடிய விஷயங்களைச் சொல்லுவார்களா? அதுகூட வேண்டாம்.. அருகில் இருக்கக்கூடிய தேவாலயத்திற்காவது சென்று வருவார்களா? அவர்களது நோக்கமே அவைகள் எல்லாம் இருக்கக்கூடாது என்பதுதானே. ஆனால், பாரதியின் நோக்கம் எல்லாமே இருக்க வேண்டுமென்கிறார். இந்தியாவில் வலதுசாரிகளுக்கென்று முன்னுதாரண தலைவர்கள் கிடையாது. எனவே, பலரையும் இவர்களுடையவர்களாக ஆக்கிக்கொள்கிறார்கள்.

அம்பேத்கர் என்ன வலதுசாரி அமைப்புகளுக்குச் சொந்தமா? இந்துவாக சாகமாட்டேன் என்கிறார். 1930 – 1934களில் அவர் தீண்டாமை குறித்து எழுதும்போது தான் ஏன் இந்து மதத்தை துறந்துவிட்டு பவுத்தத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பது குறித்தும் எழுதுகிறார். இன்னும் சொல்ல வேண்டுமானால், இந்து மதம் அன்று இந்தியா முழுவதிலும் வியாபித்து இருந்த மதம். பவுத்தம் என்பது சில மாநிலங்களில் மட்டும் சிறிய அளவில் இருந்த மதம். தமிழ்நாட்டில் பவுத்தம் குறித்து பெரிய உரையாடல்கள் அன்று இல்லை. அத்தகைய காலக்கட்டத்தில் அவர் பவுத்தத்திற்கு மாறுகிறார். அத்தகைய அம்பேத்கரை வலதுசாரிகள் கைகளில் எடுத்துக்கொள்கிறார்கள். இவர்களது நோக்கம் அடுத்த தலைமுறையிடம் குழப்பத்தை ஏற்படுத்துவது. வரலாற்றை குழப்புவதன் மூலமாக கிளர்ச்சியை ஏற்படுத்துவது. பொய்களைப் பரப்புவது. வரலாற்றில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன.

பொய்களைப் தொடர்ச்சியாகப் பேசி அதை உண்மையாக ஆக்குவதற்கு வரலாற்றில் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. பள்ளி தளங்கள் எல்லாம் கோயிலாக்குவோம் என்று பாரதி சொன்னது பாடசாலையை. இஸ்லாமியர்களின் பள்ளிவாசலை அல்ல. பள்ளி வாசல் என்ற வார்த்தையே பொதுவெளியில் புழக்கத்திற்கு வந்தது மிகப் பிற்பாடு. ஆனால், வலதுசாரிகள் பள்ளித்தளங்கள் என்று பாரதி சொன்னதை பள்ளிவாசல் என்கின்றனர். பாரதியின் சொல்லுக்கு புதிய அர்த்தங்களைக் கொடுத்து மக்களைக் குழப்புகிறார்கள்.

Q

வலதுசாரிகளுக்கு முன்னுதாரண தலைவர்கள் இல்லையா?

வலதுசாரிகளுக்கான முன்னுதாரண தலைவராக ஒருவரை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், கடைசிவரை இந்து மகாசபையின் மிக முக்கியமான ஆளாக இருந்தவர், காந்தியைக் கொல்லும் அளவுக்கு சதித்திட்டங்களைத் தீட்டிய கோட்சேவும், அவரது குடும்பமும் கடைசி வரை ஆர் எஸ் எஸ் பின்புலத்தில்தான் இருந்தார்கள் என்று ஆவணங்களின்படி அவர்களே சொல்கிறார்கள். சவார்க்கருக்கும் கோட்சேவுக்கும் இடையிலான ஏறக்குறைய 150 கடிதங்கள் கைப்பற்றப்பட்டன. கோட்சேவுக்கும் இந்து மகா சபைக்கும் என்ன தொடர்பு இருக்கிறதென்று அனைவருக்கும் தெரியும்., கோட்சே தனது பத்திரிகைகளில் காந்தியைப் பற்றி எவ்வளவு மோசமான கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார் என்பதும் தெரியும்,. வலதுசாரிகள் ஏன் கோட்சே படத்தை பயன்படுத்தமாட்டேன் என்கிறார்கள். உங்களுடைய கொள்கைகளைப் பேசுபவர்களை உங்களது ஆள் இல்லை என்கிறீர்கள். ஏனெனில் இந்தியாவில் அப்படிப்பட்ட பொய்யை உங்களால் சொல்ல முடியாது. மக்கள் தெளிவானவர்கள்.

Q

மக்கள் மத்தியில் பாரதியை பெருமளவில் கொண்டு சென்றவர்கள் யார்? இப்போதைய காலக்கட்டத்தில் சிலர் பாரதியை தூக்கிப் பிடிப்பதற்கும் காரணம் இருக்கிறதா?

பாரதியை அவர் இறந்ததற்குப் பிற்பாடு தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் பெருமளவுக்கு கொண்டு சேர்த்த இயக்கங்களில் முக்கியமானது இடதுசாரி அமைப்புகள். அதன்பின் பாரதியை தூக்கிப் பிடிப்பதில் இருந்து அவர்கள் விலகினார்கள். அடுத்தது திராவிட இயக்கங்கள் பாரதியை தூக்கிப்பிடித்தது. பாரதியின் பாடல்களை பெரியார் பயன்படுத்தியிருக்கிறார். அவரது குடியரசு இதழ் தொடங்கப்பட்டபோது பாரதியின் பாடல்களைப் போட்டுதான் குடியரசு இதழே தொடங்கப்பட்டது. பின் சுயமரியாதை இயக்கம் பிராமண எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை எடுத்தபிறகு அந்தப் பாடல் நீக்கப்பட்டது. அதன்பிறகு அவர் பாரதிக்கு மாற்றாக பேசத்தொடங்கினார். பாரதியை கடைக்கோடி வரை கொண்டு சென்று சேர்த்ததில் அண்ணாவிற்குப் பெரிய பங்கு இருக்கிறது. கலைஞர் கடைசி வரை பாரதியைப் பேசியிருக்கிறார். அவரது நெஞ்சுக்கு நீதி என்ற வார்த்தையே பாரதியின் பாடல் வரிகளில் இருந்து எடுக்கப்பட்டதுதான். பல்வேறு இடங்களில் பாரதியின் பாடல்களை அவர் மேற்கோள் காட்டியிருக்கிறார். இவர்கள் எல்லோருக்கும் பாரதிதான் ஐகானாக இருந்திருக்கிறார். இரட்டைமலை சீனிவாசன், அம்பேத்கர் போன்ற தலைவர்களை தங்களது ஐகானாக காட்டத்தொடங்கும்போது பாரதியை விலக்கி வைக்கிறார்கள். பாரதியை இவர்கள் எல்லாம் கைவிடும்போது பாரதி நமக்கான ஆள் என்று வலதுசாரி அமைப்புகள் உள்ளே வருகின்றன. தங்களுக்கானவர் என்று பாரதியை வலதுசாரி அமைப்புகள் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள்.

இவை எல்லாவற்றையும் தாண்டி குறிப்பாக வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள் பாரதியின் சாதிய பின்புலத்தை ஒட்டியே அவரைக் கையில் எடுக்கின்றனர். பாரதி சாகும்வரை சாதிய பின்புலத்திற்கு ஆதரவாக இருக்கவில்லை. பாரதியின் சொந்த ஊரில் அவரது சொந்த சாதியினரால் சாதிய விலக்கம் செய்யப்பட்டவர். சாகும்வரை பூனூல் போடாமல் அதற்கு எதிரான மனநிலையில் வாழ்ந்தவர். ராஜாராம் மோகன்ராய் உயிரிழந்த பின் அவரது சடலத்தில் பூனூல் மாட்டி எரித்தார்கள் என்று கேள்விப்பட்டு அதைக் கண்டித்து எழுதியவர். எல்லாவற்றிலும் அவருக்கு சாதிய வெறுப்பு இருந்தது. கவிதைகளில் சுய சாதியை விமர்சித்து எழுதியது பாரதியில் இருந்துதான் தொடங்குகிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு பாரதியை பேசிக்கொண்டு இருந்த பல்வேறு அமைப்புகளும் பிற்காலத்தில் அதைக் கைவிட்டார்கள். பாரதிதாசனை கையிலெடுத்த பிறகு பாரதியாரைக் கைவிட்டார்கள். ஆனால், திராவிடர் கழகம்தான் பாரதியாரைக் கைவிட்டதே ஒழிய பாரதிதாசன் சாகும்வரை பாரதியாரைக் கைவிடவில்லை. அவர் இறப்பதற்கு முதல்நாள் கூட பாரதியின் திரைக்கதை வசனத்தைதான் எழுதியிருக்கிறார். அவர்கள் எல்லாம் கைவிட்டதால்தான் வேறு பலரும் பாரதியை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டார்கள். இது வரலாற்றில் நடந்த மிகப்பெரும் பிழை.

பாரதி சாகும்வரை சாதிய பின்புலத்திற்கு ஆதரவாக இருக்கவில்லை. பாரதியின் சொந்த ஊரில் அவரது சொந்த சாதியினரால் சாதிய விலக்கம் செய்யப்பட்டவர். சாகும்வரை பூனூல் போடாமல் அதற்கு எதிரான மனநிலையில் வாழ்ந்தவர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com