விஜய் பேச்சில் வியந்து சொன்ன கதை.. யார் இந்த காலிங்கராயன்? அணை கட்டிய வரலாறு என்ன.?
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள காலிங்கராயன் அணை பவானி ஆற்றில் கட்டப்பட்டுள்ள பழமையான அணைகளில் ஒன்று. 13 ஆம் நூற்றாண்டில் பவானி ஆறும், நொய்யல் ஆறும் சந்திக்கும் கூடுதுறை என்ற என்ற இடத்தில் கட்டப்பட்ட இந்த அணை 750 ஆண்டுகளைக் கடந்து இன்றும் ஈரோடு மாவட்டத்தை செழிப்பாக்கிக் கொண்டிருக்கிறது.
உலகம் செழிக்க நீர் அடிப்படையானது என்பதை பழந்தமிழர் அறிந்திருந்தனர். எனவே, நீரை சரியான முறையில் பயன்படுத்த அணைக் கட்டுக்கள் உள்ளிட்ட நீர்பாசன வசதிகள் செய்து வந்திருக்கின்றன. அதன்படி, 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகால சோழனால் கட்டப்பட்ட கல்லணை இன்றும் தமிழர்களின் கட்டடக் கலைக்கும், நீர் பாசன முறைகளுக்கும் ஆதரமாக இருந்து வருகிறது. அது மட்டுமின்றி, கரிகாலச் சோழன் காலக்கட்டத்துக்கு 200 ஆண்டுகள் முன்னதாகவே கச்சாமங்கலம் அணை கட்டப்பட்டிருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இதன்மூலம் பழந்தமிழர் நீரை எவ்வளவு முக்கியமானதாக கருதி நீர் மேலாண்மை திட்டங்களை மேற்கொண்டுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
“நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே’
என்ற புறநானூற்றுப் பாடல் மூலம் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடுகின்றார்.
உணவு கொடுத்தவர்கள் உயிரையே கொடுத்தவர்கள் ஆகிறார்கள். உணவு நிலத்தோடு நீர் சேர்வதால் உண்டாவது. எனவே நிலத்தொடு நீர் சென்றடையும் பணியை யார் செய்கிறார்களோ அவர்கள் உடம்பையும் உயிரையும் காப்பவர்கள் ஆகின்றார்கள் அவர்கள் புகழே உலகில் நிலைத்து நிற்கும் என்பது இப்பாடலின் கருத்து.
அந்த வகையில், 13 ஆம் நூற்றாண்டில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காலிங்கராயன் அணை மற்றும் 92 கிலோ மீட்டர் நீளத்தில் பரந்து விரிந்துள்ள காலிங்கராயன் கால்வாய் என இரண்டும் ஈரோடு மாவட்டத்தின் உயிர் நாடியாக இருந்து, ஈரோடு வேளாண் உற்பத்தியில் சிறந்து விளங்குவதற்கு முக்கியப் பங்காற்றி வருகிறது. இவ்வாறு, காலிங்கராயன் என்ற பெயரையும் ஈரோடு மாவட்டத்தையும் பிரிக்க முடியாது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நீர்பாசன வசதிகளை மேற்கொண்ட காலிங்கராயன் யார்? இந்த அணை கட்டப்பட்டது எப்படி?
காலிங்கராயன் யார்?
13 ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் வாழ்ந்த லிங்கையன் எனும் இயற்பெயர் கொண்ட காலிங்கராயன். பாண்டிய மன்னன் சடையவர்மன் வீரபாண்டியனின் அரசவையில் தளபதியாக இருந்தவர். அவரின் போர்திறன் காரணமாகவே அவருக்கு காலிங்கராயன் என்ற சிறப்புப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, பாண்டிய ஆட்சியின் கீழ் கொங்கு நாட்டின் சிற்றரசராக நியமிக்கப்பட்டார். இவரே, மஞ்சள் நகரமான ஈரோட்டை செழுமைப்படுத்திக் கொண்டிருக்கும் காலிங்கராயன் அணையையும், காலிங்கராயன் கால்வாயையும் கட்டியவர்.
காலிங்கராயன் கால்வாயை வெட்டியது குறித்து ‘ஊற்றுக்குழி பாளையக்காரன் காலிங்கராயன் வமிசாவளி’ இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, காலிங்கராயன் ஆட்சி செய்து வந்த கொங்கு நாட்டில் உள்ள பூந்துறை நாடு ( பாளையம்) வறட்சி மிகுந்த நாடு. இந்த நிலையில், காலிங்கராயன் தன் மகனுக்கு பெண் பார்க்க சென்ற இடத்தில், மன்னருக்கு என்ன அரிசி சமைக்கலாம் என பேச்சு எழ, மன்னர் கம்புகள் மட்டுமே சீமையை சார்ந்தவர் எனவே அவருக்கு நெல் வகைகளைப் பற்றி தெரியாது என ஒருவர் கூற அது காலிங்கராயன் காது எட்டுகிறது. இதையடுத்து, தன்னாட்டில் நெல் விளைய வைப்பேன் என உறுதி பூண்டு அங்கிருந்து கிளம்பி வருகிறார்.
இந்நிலையில், கால்வாய் வெட்டுவது குறித்த யோசனையில் காலிங்கராயன் மூழ்கி கொண்டிருந்த சமயத்தில், ஒரு நாள் அவர் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு கனவில் வருகிறது. அந்த பாம்பு பல இடங்களை கடந்து பவானி ஆற்றை அடைந்து பவானி ஆற்றின் குறுக்கே படுத்து விடுகிறது. இதையடுத்து தங்களின் குலதெய்வம் கனவில் வந்து தனக்கு வழிகாட்டியதாக நினைத்த காலிங்கராயன், பாம்பு போன வழியில் கால்வாயை வெட்டுவதாகவும், பாம்பு பவானி ஆற்றின் குறுக்கே படுத்த இடத்தில் அணை கட்டியதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும், மற்றொரு தரப்பினர் காலிங்கராயன் நாட்டில் நிலவும் வறட்சியைத் தடுக்க தானாக முயன்றே நீர்பாசனங்களை மேற்கொண்டதாகவும் கூறுகிறார்கள். கூற்றுகள் என்னவாக இருந்தாலும், 1270 ஆண்டு வாக்கில் காலிங்கராயன் கட்டிய காலிங்கராயன் அணையும், கால்வாயும் ஈரோட்டை செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. மேலும், ஈரோடு இருக்கும் வரை காலிங்கராயன் புகழ் மறையாது.
காலிங்கராயன் கால்வாய் மற்றும் காலிங்கராயன் அணை:
காலிங்காராயன் பவானி அணைக்கட்டிலிருந்து கால்வாய் முடியும் நொய்யல் ஆறு வரை 52 கிலோமீட்டர் தூரம் தான். ஆனால், கால்வாய் அனைத்து இடங்களுக்கும் சென்று முழுமையாக பயனளிக்கும் வகையில் 92 கிலோ மீட்டருக்கு நீளமாக வளைந்து நெளிந்து வெட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கால்வாயின் மூலம் 15 ஆயிரம் ஏக்கர்களுக்கு மேற்பட்ட வேளாண் நிலங்கள் பயனடைகின்றன. மேலும், கல்வராயன் அணைக்கட்டும் பவானி நதியிலிருந்து தண்ணீரைத் திருப்பி கால்வாய்க்குப் பயன்படுத்தும் நோக்கிலேயே கட்டப்பட்டுள்ளது. காலிங்கராயன் மன்னர் எடுத்த முயற்சிகள் 700 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்களுக்கு பயனளித்து வருகிறது. மேலும், இப்போது பேசப்பட்டு வரும் நதி இணைப்பு திட்டங்களுக்கும் முன்னோடியாக காலிங்கராயன் கால்வாய் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஈரோட்டின் செழுமைக்கு காலிங்கராயன் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க காலிங்கராயன் குறித்தும் அவர் கட்டிய அணை குறித்தும்தான் இன்றைய ஈரோடு மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் வியந்து பேசினார். யார் ஈரோட்டிற்கு வந்தாலும் நிச்சயம் காலிங்கராயன் குறித்து பேசாமல் இருக்க முடியாது. அதுதான் அவர் செய்துகாட்டிய செயலின் வரலாறு.

