எதிர்பார்க்காத ஆதரவு அலை.. தோல்வியே காணாத அரசியல் நாயகனாக எம்.ஜி.ஆர் வரலாறு படைத்தது எப்படி?
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் அழிக்கமுடியாத பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டியவர் எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கி முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடித்தவர். சுதந்திர இந்தியாவில் நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்து ஆட்சியைப் பிடித்த முதல் நபர் என்ற வரலாறும் எம்.ஜி.ஆரிடமே இருக்கிறது. அதன் பிறகு தான் உயிரோடு இருக்கும்வரை, சந்தித்த அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் வென்று 3 முறை முதலமைச்சர் ஆக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பெருமை எம்.ஜி.ஆரையே சேரும்.
காமராஜர் கூட இந்த சாதனையை நிகழ்த்தவில்லை. ராஜாஜிக்கு பதிலாகத்தான் 1953-ல் முதலமைச்சர் ஆனார் காமராஜர். பின்னர் 1957 மற்றும் 1962 தேர்தலை காமராஜர் வென்றார். ஆனால், எம்.ஜி.ஆர் 1977, 1980, 1984 ஆகிய மூன்று தேர்தல்களை தொடர்ச்சியாக வென்றார். 1984 தேர்தலில் மக்களையே சந்திக்காமல் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபடியே வெற்றிவாகை சூடி மக்களின் ஆதர்சன நாயகன் என்பதை மீண்டும் நிரூபித்தார்.
1967 தேர்தலில்தான் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார் எம்ஜிஆர். செயிண்ட் தாமஸ் மவுண்ட் தொகுதியில் இருந்து முதல் முறையாக அண்ணா தலைமையிலான திமுகவில் எம்.எல்.ஏ ஆனார். 1971 தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் இருந்து போட்டியிட்டு மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுகவில் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ ஆனார். பின்னர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு அதிமுக என்ற தனிக்கட்சி தொடங்கியது தனிக்கதை.
1977 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே இடைத் தேர்தல்களில் அதிமுக வென்றது, 'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்பதற்கு ஒப்பாக இருந்தது. திண்டுக்கல் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடட்டும்.. அதற்கு எம்ஜிஆர் ஆதரவளிக்க வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அதிமுகவின் பலத்தை காட்ட வேண்டுமென்றால் தேர்தலில் நின்றே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தார் எம்ஜிஆர்.
1977 தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் இருந்தும், 1980 தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் இருந்தும், 1984 தேர்தலில் மீண்டும் ஆண்டிப்பட்டி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டியிட்ட அத்தனை சட்டமன்ற தேர்தல்களிலும் தோல்வியே காணாமல் எம்.எல்.ஏ ஆனார். 1980 நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது, 1986 உள்ளாட்சி தேர்தல்களில் தோல்வியை தழுவியது சில தோல்விக்கும் சில உதாரணங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், பொதுவான சட்டமன்ற தேர்தல்களில் அவர் வெற்றி நாயகனாகவே வலம் வந்துள்ளார்.
சினிமா துறையில் எப்படி உச்ச நாயகனாக இருந்தாரோ அதேபோல் அரசியல் துறையிலும் வெற்றியின் நாயகனாக வலம்வந்தார். சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் கிடைத்த மக்கள் ஆதரவு, கூட்டணி அமைக்கும் வல்லமை, நெருக்கடிகளை எதிர்கொண்டு வெற்றிகளாக மாற்றும் ஆற்றல் என எம்.ஜி.ஆரின் தொடர் வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் இருந்திருக்கின்றன.
தமிழ்நாடு அரசியலில் மாபெரும் ஆளுமையாக திகழ்ந்த எம்.ஜி.ஆர் சந்தித்த பல்வேறு நெருக்கடிகள், சாதனைகள் குறித்து எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியும், முன்னாள் எம்.பியுமான கே.சி.பழனிசாமியிடம் சில கேள்விகளை வைத்தோம். எம்.ஜி.ஆர் ஆட்சியிலேயே காங்கேயம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ ஆனவர் கே.சி.பழனிசாமி. ஒருங்கிணைந்த அதிமுக என்ற ஒற்றைக் கோரிக்கையோடு எந்த சமரசமும் இல்லாமல் குரல் எழுப்பி வரும் கே.சி.பழனிசாமி மிகவும் உற்சாகத்துடன் எம்.ஜி.ஆர் குறித்து சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
அதிமுக தொடங்கிய காலத்தில் எம்.ஜி.ஆருக்கான ஆதரவு எப்படி இருந்தது., அதை எப்படி எம்.ஜி.ஆர் பயன்படுத்திக் கொண்டார்?
1971-ல் கலைஞர் கருணாநிதி வெற்றி பெற்றதற்கு எம்ஜிஆர் மட்டுமே காரணம். ஆனால், கலைஞர் வெற்றி பெற்ற பிறகு அவரின் மகன் மு.க முத்துவை எம்.ஜி.ஆர் போலவே திரைப்படங்களில் நடிக்க வைத்து எம்.ஜி.ஆர்-ஐ பின்னுக்குத் தள்ள முயற்சி செய்தார். அதேபோல, அண்ணா காலத்தில் இருந்தே எம்.ஜி.ஆரின் ரசிகர் மன்றங்கள் அங்கீரிக்கப்பட்ட அமைப்பாக இருந்தது. ஆனால், கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த அமைப்புகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதை நிறுத்தி வைத்துவிட்டார். அதேபோல, 1971 ஆட்சிக் காலக்கட்டத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் காரணமாக மக்களிடம் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. அந்த சமயத்தில்தான் கட்சி கணக்கு கேட்டதற்காக எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து நீக்கப்படுகிறார். அப்போது கூட எம்.ஜி.ஆர் தனிக் கட்சி தொடங்க வேண்டும் என நினைக்கவில்லை. தொண்டர்கள்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பிக்கிறார்கள் அதில், எம்.ஜி.ஆர் தன்னை இணைத்துக் கொண்டார். இவ்வாறுதான் அதிமுக தொடங்கியது.
அப்போதைய காலக்கட்டத்தில், அதிமுக குறித்து திமுக தரப்பிலிருந்து “எம்.ஜி.ஆர் ஏதோ வருமான வரி நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறார். அதைப் பயன்படுத்தி திமுகவை உடைக்கும் நோக்கில், காங்கிரசின் தூண்டுதலின்படியே அதிமுக தொடங்கப்பட்டிருக்கிறது” என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால், அதைப் பொய்யாக்கும் விதமாக மக்கள் ஆதரவு அதிமுகவிற்கு இருந்தது. அதிமுகவின் முதல் தேர்தல், திண்டுக்கல் இடைத் தேர்தல். அத்தேர்தலில் மாயத்தேவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அத்தேர்தலில் எதார்த்தமாக கிடைத்த சுயேட்சை சின்னமே இரட்டை இலை. பின்னர், அதையே அதிமுகவின் வெற்றிச் சின்னமாக மாற்றிக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
இரண்டாவதாக கோவை மேற்கு இடைத்தேர்தல். அத்தேர்தலில் அரங்கநாயகம் வெற்றி பெறுகிறார். அதனைத் தொடர்ந்தே மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அந்தத் தேர்தலில் பெரிய அளவில் அதிமுக வெற்றி பெறுகிறது. அதேபோல, அந்த காலக்கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கல்யாண சுந்தரம் எம்.ஜி.ஆர்-க்கு துணை நின்றார். இது, அதிமுகவின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தது.
1977, 1980, 1984 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆர் வெற்றி பெறுகிறார். தொடர் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்ன?
1977 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகிறார். அடுத்ததாக 1980-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக காங்கிரசுடன் கூட்டணி வைக்கிறது. அத்தேர்தலில் 2 இடங்களை மட்டுமே அதிமுக பெறுகிறது. அந்த சூழ்நிலையில்தான் அதிமுக-வின் ஆட்சி கலைக்கப்படுகிறது. அந்தக் காலக்கட்டத்தை பற்றி எம்.ஜி.ஆர் பொதுக்குழுவில் பேசும் போது, “ஆட்சிக் கலைப்பில், சட்டமன்ற உறுப்பினர் திரும்ப ஊருக்கு போக முடியாத நிலையில், தான் சத்யா ஸ்டுடியோஸின் பத்திரங்களை அடகு வைத்து 4 கோடி பெற்று, உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கு 25,000 கொடுத்து ஊருக்கு அனுப்பினேன்” எனத் தெரிவித்திருக்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் “நான் என்ன தவறு செய்தேன்; ஆட்சியை ஏன் கலைத்தார்கள்?” என்ற ஒற்றை கேள்வியை எம்.ஜி.ஆர் மக்களிடம் வைக்கிறார். மக்களுக்கு எம்.ஜி.ஆர்-ன் ஆட்சியைக் கலைத்தது பிடிக்கவில்லை. இதன் காரணமாக 1980 சட்டமன்றத் தேர்தலில் 1977-ல் பெற்ற வெற்றியை விட அதிக அளவில் வெற்றி பெறுகிறார்.
1984 தேர்தலின் போது, ராஜராஜ சோழனின் 1000-வது ஆண்டு விழா தமிழ்நாட்டில் நடக்கிறது. அதில் பங்கேற்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தமிழ்நாடு வருகிறார். அந்த விழாவில், முதலமைச்சராக எம்.ஜி.ஆர் பங்கேற்கிறார். அக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர்-க்கு ஏற்பட்ட உடல்நிலைப் பிரச்னை காரணமாக அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்படுகிறார். இந்தக் காலக்கட்டத்தில்தான் பிரதமர் இந்திரா காந்தியும் படுகொலை செய்யப்படுகிறார். அன்றைய காலத்தில் அதிமுக 4 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்திருந்தது. இந்திராகாந்தியின் மறைவுக்குப் பிறகு பிரதமரான ராஜீவ் காந்தி ஆட்சியை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்கிறார். இந்த சூழ்நிலையில், எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்தபோது தமிழ்நாட்டில் அதிமுக அமைச்சரவையும் கலைக்கப்படுகிறது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலும், பாராளுமன்றத் தேர்தலும் ஒன்றாக நடத்தப்படுகிறது. காங்கிரஸும் அதிமுகவும் இத்தேர்தலில் கூட்டணி அமைக்கிறார்கள்.
அப்போது, திமுகவினர் எம்.ஜி.ஆர் இறந்துவிட்டதாகவும் அவருக்கு போடும் ஓட்டு அவருக்கு செல்லாது எனவும் கூறி பரப்புரை மேற்கொள்கிறார்கள். இந்த சூழ்நிலையில்தான் அமெரிக்க மருத்துவமனையில் ஓரளவு உடல் நலம் பெற்று எம்.ஜி.ஆர் இருப்பதும் ஜானகி அம்மாள் அவருக்கு சாப்பாடு கொடுப்பதும் போன்ற வீடியோ வலம்புரிஜான் வர்ணனையுடன் தமிழ்நாடு முழுக்க ஒளிபரப்பப்படுகிறது. இதன் மூலம், திமுக பொய் சொல்வதை தமிழ்நாடு மக்கள் தெரிந்து கொள்கிறார்கள். இதையடுத்து, கலைஞர் ”எம்.ஜி.ஆர் திரும்ப வந்துவிட்டால் அவரிடம் ஆட்சியை கொடுத்துவிடுகிறேன்” எனத் தனது பரப்புரையை மாற்றினார். ஆனால், அது மக்களிடம் பலிக்கவில்லை. எம்.ஜி.ஆர் வெற்றி பெறுகிறார்.
அமெரிக்காவில் இருந்து எம்.ஜி.ஆர் தமிழ்நாடு திரும்பி ஆட்சி அமைக்கும் போது, துறை இல்லாத முதல்வர் என எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்கிறார்கள். எம்.ஜி.ஆர் பதவியேற்பு நிகழ்வின் போது எம்.ஜி.ஆர் மட்டுமே பதவியேற்கிறார். மற்ற எந்த அமைச்சர்களும் பதவியேற்கவில்லை. இரண்டு வார காலத்திற்கு எல்லா துறைகளுக்கும் எம்.ஜி.ஆர் மட்டுமே அமைச்சர். இவ்வாறே எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்தார் எம்.ஜி.ஆர்.
இரட்டை இலைக்கு எதிராக எம்.ஜி.ஆர் வாக்கு கேட்கும் சூழல் உருவானது பற்றி...
1977 தேர்தலில் தாராபுரத்தில் எம்.ஜி.ஆர் முதலில் ஒருவரை வேட்பாளராக நியமிக்கிறார். அவருக்கு அதிமுக அலுவலகத்தில் A form மற்றும் B form என்ற படிவங்கள் கொடுக்கப்படுகின்றன. அவரும், தேர்தலில் போட்டியிடுகிறார். ஆனால், சில காரணங்களுக்காக எம்.ஜி.ஆர் அந்த வேட்பாளரை மாற்றும்போது புது வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்படவில்லை. முதலில் அறிவித்தவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிடுகிறது. இதன்காரணமாக, எம்.ஜி.ஆர் இரட்டை இலைக்கு எதிராகவே வாக்கு கேட்கிறார். ஆனால், முடிவில் இரட்டை இலை சின்னமே வெற்றி பெறுகிறது. எம்.ஜி.ஆர் நினைத்தாலும் தோற்கடிக்க முடியாத சின்னமாக அந்தக் காலக்கட்டத்தில் இரட்டை இலை இருந்தது.
இவ்வாறு நெகிழ்ச்சியுடன் எம்.ஜி.ஆர் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் கே.சி.பழனிசாமி.
முடிவாக....
இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கும் இல்லாத பாமர மக்களின் செல்வாக்கு எம்ஜிஆருக்கு இருந்தது. அவரது ஒற்றைப் புகைப்படம் தேர்தலை தீர்மாணிக்கும் சக்தியாக மாறும். ஒற்றை வார்த்தை தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கும். அவர் ஒரு கேள்வி கேட்டால் அதை மக்கள் கேட்பார்கள். அவர் ஒரு பதில் சொன்னால் அதைத்தான் மக்களும் சொல்வார்கள்.. இந்தியாவில் நிர்வாக ரீதியில், கொள்கை ரீதியில் சிறப்பான முதலமைச்சர்களைக் காட்ட முடியும். ஒவ்வொருவரும் சில விஷயங்களில் ஆளுமையாகவும் செல்வாக்காகவும் இருப்பார்கள். ஆனால், மக்கள் செல்வாக்கு என்று வந்துவிட்டால் எம்ஜிஆர் தான் என்றும் முதலிடம்..
தங்களை ஆளும் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு இதுமட்டும்போதுமா என்றால், கண்டிப்பாக போதாது. கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டிய விஷயம் அது. மக்களை இன்னும் அரசியல்மயப்படுத்துவதற்கு தேவை இருக்கிறது என்று பொருள். அதுகுறித்தான உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டே இருந்தாலும், மக்கள் மத்தியில் எம்ஜிஆர் உருவாக்கிய செல்வாக்கு அவரால் மட்டுமே சாத்தியமானது..

