தமிழ்நாட்டு மக்களும் அரசியல் மயமும்.. எப்படி நிகழ்ந்தது?
இந்திய அளவில் சுதந்திரத்திற்கு பிறகும் ஒரு மாநிலத்தில் தொடர்ச்சியாக அரசியல் போராட்டங்கள் நடந்துகொண்டே இருந்தது என்றால், அது தமிழ்நாடுதான். ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருக்க, வலுவான எதிர்க்கட்சிகளாக கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் இருந்தது. குலக்கல்வி திட்டம் கொண்டு வந்த போதும், மாநிலங்கள் பிரிவினையின் போதும், இந்தி திணிப்பு முயற்சியின் போதும் அரசியல் போராட்டங்களால் கொளுந்துவிட்டு எரிந்தது தமிழ்நாடு.
அரசியல் போராட்டங்களோடு நின்றுவிடாமல் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அரசியல்மயப்படுத்தும் பணியை கம்யூனிஸ்ட்டுகளும், திராவிட இயக்கங்களை சேர்ந்தவர்களும் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். எல்லாவற்றிலும் உச்சமாக திராவிட நாடு கோரிக்கையை கையில் வைத்திருந்த வரை அண்ணா உள்ளிட்ட திமுகவினரின் கருத்துரையாடல்கள் மிகத் தீவிரமாக இருந்தது. அதனால்தான், திமுகவின் பக்கம் மின்னல் வேகத்தில் மக்கள் வந்துசேர்ந்தார்கள்.
திமுகவின் தேர்தல் வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததுதான். 1949-ல் திமுக தொடங்கப்பட்டது. 1952 தேர்தலில் பங்கேற்கவில்லை. 1957 தேர்தலில் 15 இடங்களை வென்ற திமுக, 1962 தேர்தலில் 50 இடங்களை பிடித்தது. மூன்றாவது தேர்தலில் அதாவது 1967 தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. குறுகிய காலத்தில் திமுகவால் ஆட்சியை பிடிக்க முடிந்தது என்று சொல்வார்கள். ஆனால் அது அப்படியில்லை. சுதந்திரத்திற்கு முன்பு இருந்தே பெரியாருடன் இணைந்து அண்ணா உள்ளிட்டோர் சமுதாய மாற்ற பணிகளில் ஈடுபட்டு வந்தனர். சுதந்திரத்திற்கு பிறகும் கூட ஆட்சியை இவ்வளவு சீக்கிரம் பிடிப்போம் என்று அவர்கள் நினைத்திருக்கவில்லை. களத்தில் மக்களுடன் அவர்கள் தொடர்ச்சியாக உரையாடிக் கொண்டே இருந்தார்கள்.
அண்ணாவின் தெருமுனை கூட்டங்கள், அரசியல் பொதுக் கூட்டங்கள், நாடகங்கள் என பல வழிகளில் மக்களை அரசியல்படுத்தும் வேலையை திமுக செய்து கொண்டே இருந்தது. அதன் விளைவுதான் 1967 தேர்தலில் திமுகவிற்கு கிடைத்த அபார வெற்றி. திமுக எப்படி மக்களை அரசியல் படுத்தியது என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பேராசிரியர் அருணனை அணுகினோம். அண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு உள்ளிட்ட முக்கியமான நூல்களை எழுதியவர் என்பதால் அதுகுறித்து ஆழமாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
இனி அவர் கூறியவை
1950களிலிருந்து 1967 வரையிலான காலக்கட்டத்தில் அரசியல் மயம் என்பது சுதந்திர போராட்டத்தின் தொடர்ச்சியாகவே அமைந்தது. சுதந்திர போராட்ட காலக்கட்டத்திலேயே முப்பெரும் இயக்கங்களான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட இயக்கங்கள் மக்களை அரசியல்படுத்தும் பணியை தொடங்கிவிட்டன. இந்த மூன்று இயக்கங்களுமே தங்களது கொள்கையை மக்களிடையே முன்வைத்தார்கள். அப்போதைய அரசியல் தலைவர்களிடையே தனி மனித தாக்குதல்கள் நடக்காமல் இல்லை. ஆனால், அது பெரும்பாலும் தர்க்கரீதியான அரசியலாகவே இருந்தன.
தகவல் தொடர்புகள்
அப்போதைய தகவல் தொடர்புகளை (பத்திரிகைகள், இதழ்கள், நாடகம், சினிமா போன்றவை) அரசியல் கட்சிகள் தங்களது கொள்கைகளைப் பரப்பப் பயன்படுத்திக் கொண்டன. சுதந்திரத்திற்கு முன் தகவல் தொடர்பு சாதனங்களை காங்கிரஸ் சரியாக பயன்படுத்திக் கொண்டது. ஆனால், சுதந்திரத்திற்குப் பின் அக்கட்சி தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பிலேயே இருந்ததால் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், திராவிட இயக்கச் சிந்தனை கொண்ட தலைவர்கள் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். குறிப்பாக, திமுகவை தோற்றுவித்தவரான அண்ணா முதல் அக்கட்சியின் இதர தலைவர்கள், தொண்டர்கள் வரை ஒவ்வொருவரும் சிறுசிறு பத்திரிக்கைகள் நடத்தி இருக்கின்றனர். அதன்மூலம் தங்களது திராவிட இயக்க சிந்தனைக் கருத்துக்களை மக்களிடையே கொண்டு போய் சேர்த்திருக்கின்றனர்.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் பெரும்பாண்மையான மக்கள் படிப்பறிவில்லாதவர்களாக இருந்த நிலையில், சினிமா மற்றும் நாடகங்கள் மக்களிடையே கோலோச்சி இருந்தன. அவற்றையும் தங்களது கொள்கை பிரச்சாரத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் சரியாக பயன்படுத்திக் கொண்டது. உதராணமாக, சிவாஜி கண்ட இந்திர ராஜ்ஜியம் என்பது ஒரு வரலாற்று நாடகம். ஆனால், அந்த வரலாற்று நாடகத்தில் அந்த காலக்கட்ட அரசியல் பேசப்பட்டிருக்கும். மேலும், “காகிதப்பூ எப்படி மனக்காதோ; அதேபோல, காங்கிரஸ் சோசலிஸம் இனிக்காது” என்று காங்கிரஸ் கொள்கையை எதிர்த்து பேசிய இப்படியான வசனங்கள் மக்களின் மனதில் பதியும் படி, நாடகங்களில் திரும்ப திரும்ப பேசப்பட்டன. தொடர்ந்து “காகிதப்பூ” என்ற பெயரிலேயே ஒரு அரசியல் நாடகமும் தமிழ்நாடு முழுதும் நடத்தப்பட்டது.
பிறகு, அவர்கள் சினிமாவைக் கையாண்ட விதம் 1950களுக்கு முன்பு வரை சினிமாவில் புராணக்கதைகள் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், 1950-களின் திராவிடத் தலைவர்கள் சினிமாவை தங்கள் சித்தாந்தத்தைப் பரப்புவதற்கும், மக்கள் பிரச்சனைகளைப் பேசுவதற்கும் மிக முக்கியமான அரசியல் களமாக மாற்றிக் கொண்டன. அண்ணா திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதினார், கலைஞர் எழுதினார் இந்தக் கருத்துக்களை தாங்கிப் பிடிக்கும் கதாப்பாத்திரமாக எம்.ஜி.ஆர் நடித்தார்.
இப்போதைய, காலக்கட்டத்தில் சினிமாவில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வந்து வாக்களிக்க வேண்டி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆர்-ஐ பொறுத்தவரை அவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே திமுக-காரர். அவரின் படங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது சூழலுக்கு ஏற்ற வகையிலோ அரசியல் பேசப்பட்டிருக்கும். முக்கியமாக, அவரது பாடல்களில் இடம்பெறும் பகுத்தறிவு கருத்துகள் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. எம்.ஜி.ஆர்- ன் படங்களுக்கு பொதுவுடமைவாதியான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் பாடல்கள் எழுதியிருப்பார். இப்போது, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் பாடல்கள் எம்.ஜி.ஆர்-ன் பாடல்களாகவே மாறிவிட்டன.
மேலும், 1958-ஆம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆர்-ன் நாடோடி மன்னன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும், “நான் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வீடு தரப்படும்” என எம்.ஜி.ஆர் கூறுவார். உடனே நம்பியார் கேட்பார் “அனைவருக்கும் வீடு தந்தால் குடிசைகள் என்னவாகும்” என்று, அதற்கு எம்.ஜி.ஆர்-ன் பதில் குடிசைகள் தேவையில்லை என்பதால் குடிசைகள் கொழுத்தப்படும். இந்த திரைப்பட வசனங்கள் தற்போது, குடிசை மாற்று வாரியங்கள் என சட்டமாக மாறியிருக்கிறது.
அதேபோல, தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் இருந்தன. ஆனால், விதவை திருமணங்கள் என்பது கிடையாது. "ராஜா ராணி" என்ற திரைப்படத்தில் விதவை திருமணத்திற்கு ஆதரவான கருத்துகள் அழுத்தமாக பேசப்பட்டன. இதன்மூலம், ஒரு மாற்று அரசியலை திராவிட இயக்கத்தினர் சினிமா, நாடகம், எழுத்து, பேச்சு என அனைத்து வழிகளிலும் கொண்டு சென்றனர். இவை, மக்கள் எல்லோருக்கும் ஆழ்ந்த அரசியல் சிந்தனையை ஏற்படுத்தவில்லை என்றாலும், அரசியலில் என்ன நடக்கிறது. என்ன உரிமைகள் இருக்கிறது என்பதை மக்கள் கவனிக்க ஆரம்பித்தார்கள்.
இவ்வாறு, சினிமா, பேச்சு, நாடகம், எழுத்து என மக்களை தொடர்பு கொள்ளும் அனைத்து வகைகளிலும் திராவிட இயக்கத்தினர் தங்களது சித்தாந்தம் மற்றும் தங்களது அரசியல் நிலைப்பாட்டை மக்களிடையே கொண்டு போய் சேர்த்துக் கொண்டே இருந்தார்கள். இதுவே, மக்களை அரசியல்மயப்படுத்தவும், தங்களை மக்களிடையே கொண்டு போய் சேர்க்கவும் காரணமாக அமைந்தது. பின்னர், உணர்ச்சிகளை கிளர்ந்து விட்ட இந்தி திணிப்புப் போராட்டம் இவையணைத்தும், இந்திய சுதந்திரத்திற்குப் போராடிய மாபெரும் இயக்கமான காங்கிரஸை ஒரு மாநிலக் கட்சி 1967-ல் வீழ்த்தக் காரணமாக இருந்தது" என்றார்.
முடிவாக,
1967-ல் நிகழ்ந்த ஆட்சிமாற்றம் ஒரு தேர்தல் வெற்றி மட்டும் அல்ல; அது நீண்ட கால அரசியல் பயிற்சியின், சமூக மறுஉருவாக்கத்தின் இயல்பான விளைவு. அந்த மாற்றம் திமுக தொடங்கப்பட்ட 1949-ல் இருந்து உருவாக ஆரம்பித்தது என்று மட்டுமே பார்க்க முடியாது. கிட்டதட்ட 40-50 வருட கால வரலாற்று மாற்றம் அது. மேடைப் பேச்சு, தெருமுனைக் கூட்டம், நாடகம், சினிமா, எழுத்து என மக்கள் வாழ்வின் அன்றாட மொழிகளில் அரசியலைக் கலந்து கொடுத்துக் கொண்டே இருந்ததுதான் அண்ணாவும் திராவிட இயக்கமும் செய்த மிகப் பெரிய அரசியல் யுக்தி. ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பே சமுதாய மாற்றத்தின் அர்த்தங்களை, தேவையை மக்களுக்கு விளக்கிய இயக்கமாக திமுக தன்னை வடிவமைத்தது.
அண்ணாவின் அரசியல் போக்கும் திமுகவை வழிநடத்திய விதமும், படிப்பறிவில்லாதவனும் அரசியல் விவாதத்தில் பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது. சினிமா வசனங்களில் இருந்து நாடக மேடைகள் வரை பேசப்பட்ட கேள்விகள், அதிகாரம் யாருக்காக, சமூகம் யாருக்காக என்ற அடிப்படை சிந்தனையை மக்களிடையே விதைத்தன. அந்த விதைதான் 1967-ல் ஆட்சியாக மலர்ந்தது. எனவே, தமிழ்நாட்டின் அரசியல் மையம் என்பது சட்டமன்றத்தில் மட்டும் உருவானதல்ல; அது தெருக்களிலும், திரையரங்குகளிலும், நாடக மேடைகளிலும், பொதுக் கூட்டங்களிலும் கட்டமைக்கப்பட்டது. மக்களை அரசியலின் பார்வையாளர்களாக அல்ல, பங்கேற்பாளர்களாக மாற்றிய அந்தப் பண்பாட்டுத் அரசியலே தமிழ்நாட்டை இந்திய அரசியல் வரலாற்றில் தனித்துவமான மாநிலமாக மாற்றியது. அந்த மரபின் மையத்தில், மக்களுடன் இடைவிடாது உரையாடிய அண்ணாவின் அரசியல் நின்றுகொண்டே இருக்கிறது.

