OPINION | ”விஜய்க்கு காலம் சில வாய்ப்புகளைக் கொடுக்கிறது..” எல்லாம் தானாக அமைகிறதா?
மானிமுன்அரசியலில் அரை நூற்றாண்டு அனுபவம் கொண்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், விஜய் தலைமையை ஏற்று தவெகவில் இணைந்திருக்கிறார். அண்மையில் ஒன்றுபட்ட அதிமுக வேண்டுமென போர்க்கொடி உயர்த்திய செங்கோட்டையன், அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளின் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது ஐம்பதாண்டு கால அரசியல் வாழ்வில் புதிய திசையை நோக்கி பயணிக்க இருக்கிறார்.
தவெகவில் செங்கோட்டையன் இணைப்பையொட்டி எழுந்த உரையாடல்கள் நமக்கு சில கேள்விகளை எழுப்பின. இது தொடர்பாக பத்திரிகையாளர் சுவாமிநாதனை தொடர்பு கொண்டோம்.
செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருக்கிறார். தனக்கு இருக்கும் வாக்கு வங்கியும், விஜயின் வாக்குகளும் சேர்ந்தால் எம்.எல்.ஏ ஆகிவிடலாம் என்று செங்கோட்டையன் கணக்குபோடுவதாக ஒரு பார்வை இருக்கிறது. ஈரோடு என்பது செங்கோட்டையன் என்ற தனிப்பட்ட மனிதரது கோட்டையா இல்லை அதிமுகவின் கோட்டையா? இத்தகைய எளிமையான கணக்குகளின் மூலமாக மட்டுமே அரசியலை தீர்மானித்துவிட முடியுமா? தனிநபர்கள்தான் அரசியலை தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்களா?
அதிமுகவின் இரட்டை இலைக்கு ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. அது மிக வலிமையான ஒன்று., ஆனால், அந்த இரட்டை இலைக்கான வாக்கு வங்கியில் குறிப்பிட்ட சதவீதம் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் காலக்கட்டத்தில் உருவானவை. எடப்பாடி பழனிசாமி அதை தக்கவைத்திருக்கிறார்.
வெற்றி தோல்விகளை நிர்மாணிக்கும் தேர்தலில், கட்சிகளின் வாக்குவங்கிக்கு இணையானது தனிநபர் (வேட்பாளர்) செல்வாக்கு. சிலர் இரட்டை இலைக்கும், சிலர் உதய சூரியனுக்கும் வாக்களித்தே பழக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், சில நேரங்களில் வேட்பாளர் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்திவிடுவார். உதாரணத்திற்கு கோவில்பட்டியில் போட்டியிட்ட டிடிவி தினகரனை எடுத்துக்கொள்ளலாம். அங்கு அவர் அமமுக சார்பில் போட்டியிட்டு இரண்டாம் இடத்திற்கு வந்தார். அங்கு இரட்டை இலை சின்னத்தில் நின்ற கடம்பூர் ராஜூ வெற்றி பெறுகிறார். அப்போது திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரும், கடம்பூர் ராஜூவும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர். டிடிவி மட்டும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். டிடிவியால் அவருடைய சமூகத்தின் வாக்குகளை வாங்க முடிந்தது. ஆனால், பரந்துபட்ட அளவில் பொதுமக்களின் வாக்குகளை அவரால் வாங்க முடியவில்லை. அந்த இடத்தில்தான் ஒரு கட்சியின் சின்னம் தேவைப்படுகிறது. வேட்பாளரின் சமூகம் அவரது பின்னணி, அவரது தனிப்பட்ட குணநலன்கள் எல்லாமும் தேர்தலில் எதிரொலிக்கும். இதைப் பார்த்து வாக்களிக்கும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் இன்றும் இருக்கிறது.
செங்கோட்டையனின் தனித்த செல்வாக்கு நிச்சயமாக அவருக்கு வெற்றியைத் தந்துவிடாது. அதேநேரத்தில் அது பலமான செல்வாக்காகத்தான் இருக்கும். அதற்கு உதாரணம், கடந்த மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு பெற்ற வாக்குகள். இந்தியாவிலேயே சுயேச்சையாக அதிகமான வாக்குகளைப் பெற்றார். ஆனால், வெற்றி பெற முடியவில்லை. அதேபோல் செங்கோட்டையன் பலமுறை முறை கோபிசெட்டிபாளையத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அவர் மறுபடியும் களம் கண்டால் வெற்றியின் விளிம்பு வரை செல்லலாம். அவர் வெற்றிபெற வேண்டுமென்றால் அதிமுக அல்லது திமுகவின் சின்னம் வேண்டும். இரண்டும் இல்லை என்றால் விஜய் வேண்டும். விஜயின் பிரபலத்தன்மையும், விஜய் புதிய சக்தி என்ற பார்வையும் இருக்கிறது. இளைஞர்களின் பெருங்கூட்டம் விஜய் பின் இருக்கிறது. இது செங்கோட்டையனுக்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமையும். இது தவெகவிற்கும் பலம்தான்.
ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. அங்கு திமுகவிற்கு 3 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் சந்திரகுமார் தேமுதிகவில் இருந்து வந்தவர். இன்னொருவர் அமைச்சராக இருக்கும் முத்துசாமி. அவர் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்றவர். திமுக மாவட்ட செயலாளராக இருக்கும் தோப்பு வெங்கடாசலமும் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்றவர்.
அதிமுகவின் பலம் செங்கோட்டையனையும் சேர்த்து நான்காக இருந்தது. இன்னொரு தொகுதியில் பாஜக வென்றிருக்கிறது. மொத்தமுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 5ல் அதிமுக கூட்டணிதான் வெற்றி பெற்றிருந்தது.
இதில் திமுக தரப்பில் இருக்கும் இருவர் அதிமுகவில் இருந்து சென்றவர்கள்தான். மொத்தமாகப் பார்க்கும்போது ஈரோடு மண் என்பதே அதிமுக மண். இங்கு செங்கோட்டையன் வேல்யூவும் விஜய் வேல்யூவும் சேரும்போது இது அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும். விஜய்க்கு பலத்தை சேர்க்கும்.
ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, செங்கோட்டையன், மருது அழகுராஜ், வைத்திலிங்கம் என ஒவ்வொருவரும் விலகுகையில் தனிநபர் விவகாரம் என்றே அதிமுக தரப்பு கடந்துபோகும். ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒரு ஆதரவுக் கூட்டம் இருக்கும். அந்தந்த பகுதிகளில் அவர்களின் செல்வாக்கும் இருக்கிறது. இப்படிப்பார்த்தால் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அதிமுக பெரும் ஆதரவுக் கூட்டத்தை இழந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அதை உணராமல் இருப்பாரா?
எடப்பாடி பழனிசாமி தன் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியையே உயர்வாகக் கருதுகிறார். பொதுச்செயலாளராக தான் எடுக்கும் முடிவுக்கு குறுக்கீடாக யாரும் இருக்கக்கூடாது எனக் கருதுகிறார். ஆனால், கட்சியை ஒருங்கிணைத்து கொண்டு செல்வதன் தேவையும் இருக்கிறதுதானே. இப்படி தொடர்ச்சியான வெளியேற்றத்தை எடப்பாடி பழனிசாமிதான் உணர வேண்டும். ஏனெனில் அவர்தான் பொதுச்செயலாளர், முதல்வர் வேட்பாளராக அவர்தான் முன்னிறுத்தப்படுகிறார். முதலில் அவருக்குள்தான் மாற்றம் வரவேண்டும்.
ஓபிஎஸ், டிடிவி போன்றோர் வெளியேறினார்கள். இவர்கள் வெளியேறியபோது பெரிதாக அதிமுகவிற்கு பிரச்னை வரவில்லை. வெளியில் இருந்து குரல்மட்டும்தான் கொடுத்தார்கள். அந்த சத்தம் என்பது ஒருகை சத்தம்தான். ஆனால், செங்கோட்டையன் இன்று நேரடியாக திமுகவிற்கு எதிராக இருக்கக்கூடிய தவெகவில் சேர்ந்துகொண்டார். இது கவனம் பெற்ற நிலையில் இது அடுத்த போக்கைக் காட்டும். இவ்வளவு நாள் அதிருப்தியாளர்கள் பெரும்பாலும் திமுக பக்கம் சென்றார்கள். இனி தவெக பக்கமும் செல்வார்கள் என்பது புதிய யதார்த்தமாகலாம்.
அதிமுகவில் இருந்து திமுகவிற்கு செல்லும்போது தனிப்பட்ட முறையில் அதிக அளவில் சமரசம் செய்துகொள்ள வேண்டும். ஏனெனில்; திமுகவை இத்தனை நாள் விமர்சித்திருப்பார்கள். தவெகவிற்கு செல்வது அப்படியல்ல. விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லை, ஜெயலலிதாவையோ எம்ஜிஆரையோ எவ்விதமான விமர்சனமும் செய்யவில்லை. அண்ணாவைப் பற்றி பேச வேண்டிய இடத்தில்கூட எம்ஜிஆர் பாடல்களின் வழியே அண்ணாவை எடுத்துக்கொண்டு வருகிறார்.
இந்த இடத்தில் செங்கோட்டையனை எடுத்துக்கொள்வோம். தன் வாழ்நாள் எல்லாம் திமுக எதிர்ப்பு அரசியலைத்தான் செங்கோட்டையன் செய்திருப்பார். இனி தவெக சென்றும் அதைத்தான் செய்யப்போகிறார்.
இது எல்லாம் எதாவது செய்தியை எடப்பாடி பழனிசாமிக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது. நிச்சயமாக, அதிமுக இணைப்பை சாத்தியமாக்க முடியவில்லை என்று செங்கோட்டையன் அந்தப்பக்கம் சென்று அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைப்பதற்கான சாத்தியம் இருக்கிறது. நான் சொல்வது கூட்டணியாக. இதையெல்லாம் எடப்பாடி பழனிசாமி உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஆட்சி அமைப்பதற்கு முன் இரண்டாம் இடத்திற்குதான் குறிவைப்பார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இரண்டாம் இடத்தில் இருந்ததை காலி செய்ததன் மூலமாக மட்டுமே திமுக அதிமுக போன்ற கட்சிகள் முன்னிலைக்கு வந்தன. அதிமுகவின் இரண்டாம் இடத்திற்கு பாஜக குறிவைக்கிறது என்ற பார்வை இருக்கிறது. தவெக அந்த இடத்தை நோக்கி சென்று கொண்டு இருப்பதாக பார்க்கப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழலில் இரண்டாம் இடத்தில் யார் இருக்கிறார்கள்? இனி வரக்கூடிய காலங்களில் யாருக்கு வாய்ப்பு இருக்கிறது.
இரண்டாம் இடத்தில் இந்த நொடிவரை அதிமுகதான் இருக்கிறது. இனியும் இந்த ஆட்டத்தைக் குலைப்பதாக இருந்தால் அது எடப்பாடி பழனிசாமியால் மட்டும்தான் முடியும். செங்கோட்டையன் போன்றவர்கள் அங்கு இணைந்திருக்கக்கூடிய இந்த தருணத்திலாவது அவர் விழித்துக்கொள்ள வேண்டும்.
ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் அவர் கொடநாட்டில் இருந்தாலும் சரி, போயஸ் கார்டனில் இருந்தாலும் சரி.. தமிழ்நாடு முழுவதும் ஏதாவதொரு பிரச்னையை முன்னிறுத்தி தினமும் ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டத்தை நடத்திக்கொண்டே இருப்பார்கள். ஆனால், கடந்த மூன்றரை ஆண்டுகளாக அதிமுகவினர் ஓபிஎஸ், டிடிவி போன்றோருக்கு பதில் சொல்வதிலேயே செலவழித்திருக்கிறார்கள். திமுக எதிர்ப்பு அரசியலை மழுங்கடித்திருக்கிறார்கள்.
மறுமுனையில் திமுக கூட்டணிக் கட்சிகளே பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், இந்த அரசியலை செய்திருக்க வேண்டிய அதிமுக சொந்தக் கட்சிக்குள்ளேயே கலகம் செய்து கொண்டு நீண்ட காலத்தை விரயம் செய்திருக்கிறார்கள். இனிமேலாவது விழித்துக்கொண்டு அவர்கள் கள அரசியலை உணர வேண்டும்.
இந்த நொடி வரை அதிமுகதான் இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்பது என் அபிப்ராயம். ஒரு கட்சியின் வெற்றி தோல்விகளை நிர்மாணிப்பதில் உள்ளூர் வேட்பாளர்களின் பங்கு முக்கியமானது. 234 தொகுதிகளிலும் சீட் வேண்டுமென்ற போட்டி திமுகவிலும் அதிமுகவிலும் மட்டும்தான் இருக்கிறது. சிறும்பான்மையின மக்கள் இருக்கும் தொகுதிகளில் வேண்டுமானால் அதிமுக பலவீனமாக இருக்கலாம். மற்றபடி பெரிய கட்சி என்றால் அது திமுகவும் அதிமுகவும்தான். இதில் அதிமுக கொஞ்சம் சுணக்கம் காட்டினால் அந்த இடத்திற்கு தவெக நெருங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இனி தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமில்லை என்பதையும் இத்தகைய சம்பவங்கள் உணர்த்துகின்றன. மைத்ரேயன் போன்றோரெல்லாம் பாஜகவில் இருந்தவர்கள். ஆனால், அதிமுகவில் இருந்து விலகி செல்பவர்கள் பெரிதாக பாஜகவிற்கு செல்வதில்லை. திமுகவில் இணைகிறார்கள். புதிதாக தவெகவில் இணைவதும் நடக்கிறது. அதிமுகவை அழித்து அந்த இடத்திற்கு வரவேண்டும் என நினைத்தது பாஜக. அந்த இடத்தில் திமுக மற்றும் பாஜகவுக்கு மாற்று என்று சொல்லக்கூடிய விஜய் நிற்கிறார்.
ஓபிஎஸ், டிடிவி, சசிகலா போன்றோர் அதிமுக ஒன்றிணைய வேண்டுமென தனித்தனியாக குரல் கொடுத்தார்கள். மூவரும் ஒன்றிணைந்து செயல்படவில்லையே. இவை எல்லாம் இபிஎஸ்க்கு எதிரான் அரசியலாக மட்டும்தானே பார்க்கப்பட்டது. தன்னை எதிர்ப்பவர்களை எப்படி கட்சிக்குள் கொண்டு வரமுடியும் என இபிஎஸ் நினைப்பது சரிதானே..
எடப்பாடி பழனிசாமியின் கோணத்தில் இருந்து பார்க்கும்போது அவரது அணுகுமுறை சரிதான். ஆனால், பொதுச்செயலாளர் எனும் இருக்கை தனிநபர் நலன் சார்ந்து பார்க்கும் விஷயம் கிடையாதே. ஒன்றரைக் கோடி தொண்டர்களின் மனசாட்சியாக ஒலிக்கக்கூடியதுதான் பொதுச்செயலாளரின் குரல். அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆவதும், அவர் முதலமைச்சர் ஆவதும் எடப்பாடி பழனிசாமிக்கு பலன் தரக்கூடிய ஒன்றுதான். ஆனால், அவர் முதலமைச்சர் ஆனால்தான் கடைக்கோடி தொண்டர்கள் பயன்பெறுவார்கள். அவரை முதலமைச்சர் ஆக்க வேண்டுமென்றால் அதற்கான சில சமரங்களை செய்ய வேண்டும். அந்த சமரங்களுக்கு உட்பட்டால்தான் கட்சி காப்பாற்றப்படும். கட்சியின் நலன் என்பதுதான் பொதுச்செயலாளரின் நலனாகவும் இருக்க முடியும்.
விஜய்க்கு தற்கால அரசியல் சூழல்கள் எல்லாம் தானாக அமைகிறதா? அவர் அரசியல் களத்திற்கு வந்தபோது வெற்றிடம் இருந்ததாக ஒரு பார்வை பொதுவெளியில் இருந்தது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் எல்லாம் தனித்தனியாக இருக்கின்றன. சில கட்சிகளில் உட்கட்சிப் பூசல்கள் இருக்கின்றன. அதேபோல் அதிமுகவில் உட்கட்சி பூசல் நடக்கிறது. அதனால் ஒருவர் தவெகவிற்கு செல்கிறார். ஏற்கனவே தவெகவில் மூத்த, அனுபவமிக்க தலைவர்கள் இல்லையென்ற பிரச்னை இருந்தது. தற்போதோ செங்கோட்டையன் போன்ற ஒருவர் தன்னிச்சையாக தவெகவில் இணைகிறார். விஜய்க்கான களமாக தனிச்சையாக மாறுகிறதா தமிழ்நாடு அரசியல்..
ஒரு மனிதன் வாழ்நாளெல்லாம் அரசியலில் உழைத்து என்ன வாக்குத்திரளை உருவாக்க முடியுமோ அதை மிக எளிதாக முதல் தேர்தலிலேயே விஜய் கடந்து போகிறார். இயல்பாகவே அமைகிறது. ஜெயலலிதா கருணாநிதி போன்றோர் இருந்தபோது அவர் கட்சியை ஆரம்பித்துவிடவில்லை. அவர் அதிகபட்சமாக செய்தது பொறுமையாக காத்திருந்தார் என்பதுதான். இரு பெரும் தலைவர்களின் மரணத்திற்கு பிறகு ஒரு அரசியல் வெற்றிடம் இருக்கிறது.. அதை முதலமைச்சர் ஸ்டாலின் ஓரளவு பூர்த்தி செய்கிறார். ஆனால், திமுகவிற்கு மாற்று எனும் இடத்தில் அரசியல் வெற்றிடம் இருக்கிறது. இதை காலம் இயல்பாகவே விஜய்க்குக் கொடுக்கிறது.
சீமான் 8% வாக்குகளை வாங்குவதற்கு தமிழ்நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக எவ்வளவு ஓட்டம் ஓடியிருக்கிறார். ஏறத்தாழ 10 ஆண்டுகள் அவர் மக்களுடன் களத்தில் நிற்கிறார். கரூர் போன்ற துன்பியல் சம்பவம் நிகழ்ந்தபோதும் கூட விஜய்க்கு ஆதரவாகத்தான் மக்கள் இருக்கிறார்கள். இவை எல்லாம் தன்னியல்பாக நடக்கிறது. அதிமுக உட்கட்சி பூசலில் செங்கோட்டையன் விலகியதெல்லாம் காலம்தான் அவரை இயக்குகிறதா என்று பார்க்க வேண்டியிருக்கிறது. இளைஞர்களின் கூட்டம், மக்கள் அவர்மேல் அன்பு செலுத்துவது, வாக்காளர்களாக இயல்பாகவே மாறியிருப்பது எல்லாம் விஜய்க்கு அதிகமான பொறுப்புகள் இருப்பதையும் உணர்த்துகிறது.
விஜயகாந்த் கூட கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும்போது அரசியலுக்கு வந்தார். எதிர் அரசியலைத்தான் விஜயகாந்த் செய்தார். விஜய்க்கு அந்த வேலையும் இல்லை. காலம் கனிந்து அவருக்கு சில வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறது. அந்தப் பொறுப்பை தாங்கக்கூடிய ஆற்றலையும் தர வேண்டுமென்பதுதான் காலம் தர வேண்டிய பாடம்.

