PT EXCLUSIVE : தேர்தல்கள் கேலிக்கூத்துகளா? ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லாமல் போவது ஏன்?
'Elections ideology' எனும் இக்கட்டுரை ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் குமார் ஜா அவர்களால், Outlook (November 11, 2025) வார இதழுக்கு எழுதப்பட்டது. அவரது கூர்மையான கருத்துகள் இன்னும் 6 மாதங்களுக்குள் தேர்தலைச் சந்திக்க இருக்கும் நம் மாநிலத்திற்கும் ஏற்ற வகையில் இருந்ததால், அவரது அனுமதியுடன் இக்கட்டுரை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் மிகப்பெரிய அம்சமான தேர்தல்களை எப்படி இன்றைய அரசியல் கட்சிகள் அணுகுகின்றன என்பது குறித்து மிக ஆழமான அடர்த்தியான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் மனோஜ் குமார் ஜா. தற்காலத்தில் மிகவும் அவசியமான பகுப்பாய்வு இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இனி மனோஜ் குமார் ஜாவின் வார்த்தைகள்...
ஜனநாயகத்திற்கான ஆபத்து
தேர்தல்கள் என்பது மக்களுடைய இறையாண்மையின் தெளிவான வெளிப்பாடு. அவை ஒரு குடியரசின் இதயத் துடிப்பு போன்றவை. வாக்களிப்பதன் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மக்கள் தற்காலிகமாக அதிகாரத்தை அளிப்பதன் மூலம் குடியரசு காலந்தோறும் புதுப்பிக்கப்படுகிறது. இதனால், உயிர்ப்புடனும் இருக்கிறது. ஆனால், கொள்கைகள் அல்லது சித்தாந்தங்களில் இருந்து தேர்தல்கள் விலகி எண்கள், வாக்குறுதிகள் மற்றும் வெளிப்புறக் காட்சிகளின் இயந்திரத்தனமான சடங்குகளாக சுருங்கும்போது, ஜனநாயகம் உள்ளிருந்து சிதைவடைகிறது. வெளிப்புற பார்வையில் அது இன்னும் உயிரோட்டமாய் தெரிந்தாலும், அதன் ஆன்மா மறைந்து போயிருக்கும்.
ஜனநாயகத்திற்கு அர்த்தத்தை அளிப்பது வெறும் வாக்களிப்பது மட்டுமல்ல; அந்த வாக்குகளுக்கு உயிர்கொடுக்கும் கருத்துகள்தான். தேர்தல்கள் நீதி, சமத்துவம், ஆட்சி, சமூக ஒழுங்கிற்கான வழிகாட்டல் போன்ற மாறுபட்ட கருத்தியல்களுக்கு இடையிலான போட்டியாக இருக்க வேண்டும். மாறாக, கருத்தியல்களுக்கான அடிப்படை காணாமல்போன களத்தில் எஞ்சுவது சந்தர்ப்பவாதத்தின் கூச்சல் நிறைந்த சந்தை மட்டுமே. அங்கு கொள்கைகள் பதவிகளுக்காக பேரம் பேசப்படுகின்றன; நம்பிக்கைகள் தற்காலிக நலன்களுக்காக பலியிடப்படுகின்றன.
வெற்றியின் ஒரே அளவுகோல் அதிகாரமாக இருக்கும்போதும், அரசியலின் இலக்கணம் வெறும் எண்கணிதங்களாக சுருக்கப்படும்போதும், தேர்தல் என்பதன் பொருள் என்ன? இன்று நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்விகள் இது.
ஒவ்வொரு கட்சி மற்றும் கூட்டணி மாற்றமும், திடீர் நிலைப்பாட்டு மாற்றமும் "நடைமுறை அரசியல்" அல்லது "சாணக்கிய நீதி" என்ற போலி ஞானத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படும்போது துரோகத்திற்கு உள்ளாவது மக்கள்தான். ஜனநாயகம் என்பது யார் அதிகாரத்தை வெல்கிறார்கள் என்பது பற்றியது அல்ல; அந்த அதிகாரம் எதற்காக தேடப்படுகிறது, அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றியது.
சித்தாந்தம் என்பது என்ன?
சித்தாந்தம் என்பது நீண்ட காலமாக அரசியல் வாழ்க்கையின் தார்மீக திசைகாட்டியாக (moral compass) இருந்து வருகிறது. அது வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இடையிலும், கடந்தகால போராட்டங்களுக்கும் எதிர்கால வாக்குறுதிகளுக்கும் இடையிலும் ஒருங்கிணைப்பை வழங்குகிறது. மேலும், நீதி, சமத்துவமின்மை அல்லது சமூக நல்லிணக்கம் போன்ற கேள்விகளை எதிர்கொள்ளும்போது ஒரு கட்சி எங்கே நிற்கிறது என்பதை வாக்காளர்களுக்கு சொல்கிறது.
ஆயினும், இன்றைய அரசியலில் பெரும்பாலும், கொள்கை என்பது வசதிக்காக மாற்றப்படுகிறது. ஒரு காலத்தில் சமூகநீதியை பேசிய கட்சிகள், இன்று அதன் அடிப்படை ஆன்மாவையே எதிர்க்கும் சக்திகளுடன் மோசமான கூட்டணிகளை ஏற்படுத்துகின்றன. வகுப்புவாத அரசியலை எதிர்த்து வாழ்க்கையை கட்டியெழுப்பிய தலைவர்கள், அவை தங்களுக்கு சாதகமாக மாறும்பட்சத்தில் வகுப்புவாத கோஷங்களையே எதிரொலிக்கின்றனர். ஏற்றுக்கொண்ட கருத்தியல்களுக்கு துரோகம் செய்வதென்பது, அரசியலில் நிலைத்திருக்க எங்கும், யாருடனும், எவ்வித குற்றவுணர்வுமின்றி ஒட்டிக்கொள்ளும் அரசியல் சர்க்கஸாக மாறிவிட்டது.
ஆபத்தில் இருக்கும் மக்களின் நம்பிக்கை
அரசியலின் சந்தைமயமாக்கல் (marketisation) எழுச்சி கொள்கையின் வீழ்ச்சியையும் குறிக்கிறது. கட்சிகள் பிராண்ட்களாகவும், வேட்பாளர்கள் பொருட்களாகவும் மாறுகின்றனர். வாக்காளர்கள், கொள்கைகளை நம்பவைக்க வேண்டிய குடிமக்களாக அன்றி, வாக்குகளுக்காக ஈர்க்கப்படும் நுகர்வோராக நடத்தப்படுகின்றனர். இத்தகைய சூழலில் தேர்தல்கள் பிரதிநிதித்துவத்தின் கருவியாக செயல்படுவதில் இருந்து விலகி, மக்களை கட்டுப்படுத்துவதற்கான கருவியாக மாறுகின்றன.
தேர்தல் முடிவுகள் 'மக்களுடைய தீர்ப்பு' என அழைக்கப்படலாம். ஆனால், அவை விவாதங்கள், சித்தாந்தங்கள் போன்ற தேர்தலுக்கான உள்ளடக்கத்தில் இருந்து அல்லாமல், பெரிய பரப்புரைகள், சினிமா பாணி நிகழ்ச்சிகள், சமூக ஊடக விளம்பரங்கள் எனும் காட்சி அம்சத்தின் மூலமாக பெறப்படுகிறது. எவ்வாறாயினும், மக்களின் தீர்ப்புகள் “சுதந்திரமான மற்றும் நியாயமான” ஜனநாயகத்தின் சான்றுகளாக முன்னிறுத்தப்படுகின்றன.
அரசியலில் சித்தாந்தம் காணாமல் போனால் முதலில் அழிவது மக்களின் நம்பிக்கை. அதை தங்கள் வாழ்க்கையோடு சம்பந்தமில்லாத, அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆடும் சுயநல விளையாட்டாக கருத ஆரம்பிக்கிறார்கள். அவநம்பிக்கையான ஒரு துறை. வாக்குறுதிகள் தற்காலிகமானவையாகவும், கூட்டணிகள் கொடுக்கல் வாங்கல் அடிப்படையிலானதாகவும், ஒவ்வொரு நடவடிக்கையும் வரவு - செலவு கருத்தில்கொண்டு கணக்கிடப்பட்டதாகவும் உணரத் தொடங்குகிறார்கள்.
சிதைவை நோக்கி நகரும் ஜனநாயகம்
வாக்காளர்கள் இன்னும் வரிசையில் நின்று வாக்களிக்கலாம், ஆனால், அந்தச் செயலில் இனி நம்பிக்கையோ உறுதியோ இல்லை. நம்பிக்கையின் படிப்படியான சிதைவு மெதுவாக ஜனநாயகத்தின் அஸ்திவாரத்தையே அரிக்கக்கூடும். “யார்வந்தாலும் ஒன்றுதான்” என்று மக்கள் நம்பத் தொடங்குகிறார்கள். இது எதிர்ப்பு அல்ல.. அவநம்பிக்கை. இது ஜனநாயகத்தின் மிகப்பெரிய ஆபத்து. எதிர்ப்பு என்பது ‘இன்னும் மாற்றம் சாத்தியம்’ என்று நம்புகிறது; அவநம்பிக்கை நம்புவதில்லை. கருத்துகளும் கொள்கைகளும் அரசியலில் முக்கியம் என்ற நம்பிக்கையை குடிமக்கள் இழக்கும் தருணத்தில், ஜனநாயகம் அதன் உயிர்ப்பை இழந்து சிதைவை நோக்கி நகர்கிறது.
இந்தியாவில் சித்தாந்தங்களில் இருந்தே ஜனநாயகம் பிறந்தது. இந்திய தேசிய இயக்கம் என்பது அதிகாரத்தை அடைவதற்காக நடத்தப்பட்டது அல்ல. அது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றில் வேரூன்றிய சித்தாந்தத்தின் செயல் திட்டமாக இருந்தது. காந்தியின் அரசியல் 'அறம்'; நேருவின் அரசியல் 'தொலைநோக்கு'; அம்பேத்கரின் அரசியல் 'மாற்றத்தை உருவாக்குதல்'. அவர்களுக்கு இடையிலிருந்த கருத்து வேறுபாடுகள் சித்தாந்தங்கள் சார்ந்தவை. ஆனால், குடியரசின் தார்மீக கருத்தாக்கத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பு முழுமையானது. இன்றைய நமது அரசியலில் அந்த மதிப்புகளில் ஒரு சிறு பகுதியையாவது கண்டுபிடிக்க முடியுமா?
இன்று கொள்கையானது சுமையாகவும், விடாப்பிடித்தன்மையையோ அல்லது காலாவதியானதையோ குறிக்கும் அடையாளமாகவும் கருதப்படுகிறது. தார்மீகமும் உறுதியான நம்பிக்கையும் வெற்றிக்குத் தடைகளாக இருப்பதாக நினைத்துக்கொண்டு, அரசியல்வாதிகள் தங்களை 'நடைமுறைவாதிகள்' என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறார்கள். ஆனால், கொள்கையற்ற நடைமுறைவாதம் என்பது ஞானம் அல்லது தெளிவு என்ற முகமூடியை அணிந்த சந்தர்ப்பவாதம் மட்டுமே. அது ஜனநாயகத்தின் அடித்தளத்தையும் அதன் நிறுவனங்களின் கட்டமைப்புகளையே சிதைக்கிறது.
தேர்வுகள் இல்லாமல் திண்டாடும் வாக்காளர்கள்
முடிவில்லா பொதுக்கூட்டங்கள்; பளபளக்கும் வாக்குறுதிகள்; வாக்குப்பதிவுக்குப் பிறகு மறைந்து போகும் கோஷங்கள் என ஒவ்வொரு தேர்தல் காலமும் ஒரு திருவிழாவாக மாறுகிறது. யார் முன்னிலையில் இருக்கிறார்? யார் பின்னடைவைச் சந்திக்கிறார்?, யார், யாருடன் கூட்டணி சேர்கிறார்? என ஊடகங்கள் இதை ஒரு விளையாட்டைப்போல் சித்தரிக்கிறது. ஆனால், அந்தக் குரல்களின் அடியில் ஒரு ஆழமான வெறுமைதான் இருக்கிறது. கொள்கை இல்லாதபோது, அரசியல் நாடகமாக மாறுகிறது. ஒவ்வொரு பேச்சும் ஒரு நடிப்பு; ஒவ்வொரு கூட்டணியும் ஒரு நாடகத்தின் ஒரு காட்சி; ஒவ்வொரு வெற்றியும் நாடகம் முடிந்து இறக்கப்படும் திரைபோல் இறுதிக்காட்சியாகிறது. ஜனநாயகம் இதுபோன்ற நாடகத்தனமான நிகழ்வுகளால் மட்டுமே நிலைத்திருக்க முடியாது. ஆட்சி நிர்வாகத்திற்கு தேவையானது நெறிமுறை திசை. அந்த உணர்வை மார்க்கெட்டிங் நிறுவனங்கள், தரவு பகுப்பாய்வுகள், 'தேர்தல் ஆலோசகர்கள்' என்று அழைக்கப்படும் வெளி நபர்களால் வழங்க முடியாது.
சமூக நீதி, மதச்சார்பற்ற தன்மை, சோசலிசம் அல்லது மனித உரிமைகள் போன்ற கொள்கைகளின் மொழிதான் ஒருகாலத்தில் அரசியலுக்கு நெறிமுறைத் திசைகாட்டியாக விளங்கியது. அது புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான கடமையை அரசாங்கங்களுக்கு நினைவூட்டியது. திறமைக்காக மட்டுமல்ல, சமத்துவம் மற்றும் நியாயமான பிரதிநிதித்துவத்திற்காகவும் பொறுப்பு ஏற்கும் மனநிலையைக் கோரியது. அந்த அச்சாணி இல்லாமல், populism எனும் பொதுமக்களின் உணர்வைத் தூண்டி வாக்கு பெறும் நிலையை நோக்கி அரசியல் தள்ளப்படுகிறது. இங்கு நெறிமுறைகளுக்குப் பதிலாக கட்டுப்பாடற்ற உணர்ச்சிகளே மேலோங்குகிறது மற்றும் தேசம் தனிநபர் ஆசைகளுக்கான மேடையாக மாறுகிறது.
கொள்கையின் சிதைவு மேலும் ஆழமான ஒரு நெருக்கடியை வெளிப்படுத்துகிறது. அது ஜனநாயக சிந்தனையின் சுருக்கமே. ஒவ்வொரு கட்சியும் ஒரே மாதிரியான வளர்ச்சி மாதிரிகளையும், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும் வழங்குகின்றன. அதேபோல், அநீதியான விஷயங்களின்போது மௌனம் காக்கின்றன. அனைத்து தரப்பும் இப்படி இருக்கும்போது வாக்காளர்களுக்கு அர்த்தமுள்ள தேர்வுகள் இல்லாமல் போகின்றன. நீண்ட வரிசையில் நின்று போடப்படும் வாக்குகள் உறுதிப்பாட்டின் வெளிப்பாடாக அல்லாமல், அவநம்பிக்கையின் வெளிப்பாடாக மாறுகின்றன.
சித்தாந்த மோதல்கள்
'இந்தியா' பற்றிய வெவ்வேறு சித்தாந்தங்கள் ஒன்றுக்கொன்று போட்டியிடும் போதுதான் உண்மையான ஜனநாயகம் செழிக்கிறது. ஒரு சித்தாந்தம் “சுதந்திரமே முதலில்” என்றால், மற்றொன்று “சமத்துவமே முதலில்” என்கிறது. வேறொன்று “சகோதரத்துவமே அடித்தளம்” என வலியுறுத்துகிறது. இத்தகைய சித்தாந்த மோதல்கள்தான் ஜனநாயகத்தை உயிரோட்டமுடனும் தன்னைத்தானே சீர்திருத்திக் கொள்ளும் ஆற்றலுடனும் வைத்திருக்கின்றன. மாறாக எல்லோரும் ஒரே மாதிரியான கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தால், ஒருமித்த கருத்துக்குப் பதிலாக ஒத்திசைவையும், தேர்வுக்குப் (choice) பதிலாக கட்டுப்பாடுகளையும் (control) பெறுகிறோம்.
சித்தாந்தத்தை மீண்டும் மீட்டெடுப்பது என்பது பழைய பிடிவாதங்களுக்கோ அல்லது தன் நிலைப்பாட்டில் இருந்து மாறாத தன்மைக்கோ திரும்புவது அல்ல. அது ஒருகாலத்தில் இந்திய அரசியலை வரையறுத்த நெறிமுறைகளை மீட்டெடுப்பதைக் குறிக்கிறது. அதாவது சிரமமான கேள்விகளை எழுப்புவதைச் சொல்லலாம். உதாரணத்திற்கு., நாங்கள் எப்படிப்பட்ட சமூகத்தை விரும்புகிறோம்? பொருளாதாரம் யாரின் நலனுக்காகச் செயல்படுகிறது? நமது காலத்தில் நீதி என்றால் என்ன? புறக்கணிக்கப்பட்டவர்களின் நிலையைக் கண்டு நாம் வேதனைப்படுகிறோமா?. இத்யாதி.. கொள்கையற்ற அரசியல் இத்தகைய கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாது, ஏனெனில் அது அவற்றில் ஆர்வம் கொள்ளுவதில்லை. உண்மையில், இப்படிப்பட்ட அரசியல் இத்தகைய கேள்விகளை பொதுத்தளத்திற்கு வராதபடி பார்த்துக்கொள்கிறது.
ஜனநாயகம் என்பது எண்ணிக்கை பெரும்பான்மைக்கான ஓட்டமாக அல்லாமல் அது மனிதநேயம் சார்ந்த பெரும்பான்மைக்காகப் பாடுபட வேண்டும். வரலாற்றை மாற்றிய ஒவ்வொரு அரசியல் இயக்கமும் அதைச் செய்தது, ஏனெனில் அது தன்னை விட பெரிய ஒன்றான சுதந்திரம், சமத்துவம், மனித உரிமைகள் அல்லது மனித கண்ணியம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தது. நாம் கருத்தியல் சார்ந்த உலகக் கண்ணோட்டங்களை கைவிட்டு தந்திரங்கள் அல்லது யுத்திகளை மட்டும் கைகொண்டால், அரசியல் உயிரற்றதாகிவிடுகிறது. அது அரசாங்கங்களை உருவாக்க முடியும், ஆனால், நல்லாட்சியை உருவாக்க முடியாது.
ஆன்மா இல்லாத உடல்கள்
ஜனநாயகம் தன் அர்த்தத்தைத் தக்கவைக்க வேண்டுமானால், அரசியல்வாதிகள் மீண்டும் கொள்கை தெளிவை அடைய வேண்டும், அதனை தங்கள் ஆளுமையின் ஓர் அங்கமாக ஆக்க வேண்டும். கட்சியினர் தாங்கள் எதற்காக நிற்கிறோம் என்பதை (அது அவர்களுக்கு அசௌகரியமானதாக இருந்தாலும்கூட) வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். தலைவர்கள் கொள்கையை ஒரு மாற்று உடைபோல் கருதுவதை நிறுத்த வேண்டும். ஒரு மாநிலத்தில் அணிந்துகொண்டு, மற்றொரு மாநிலத்தில் கழற்றி வைப்பதும், ஒரு தேர்தலில் கைகளில் எடுத்து முழங்கி, அடுத்த தேர்தலிலேயே மறந்து விடும் பழக்கத்தையும் நிறுத்த வேண்டும். இந்திய மக்கள் — வெளிப்படைத்தன்மைக்கும் உண்மைக்கும் தகுதியானவர்கள்; போலி முகங்களுக்கு அல்ல.
மக்களும் அதிகம் கேட்கக் கற்றுக்கொள்ள வேண்டும்; “பரவாயில்லை” என்ற அலட்சிய மனப்பான்மையை கைவிட வேண்டும். வாக்களிப்பது என்பது கண்மூடித்தனமான விசுவாசத்தின் வெளிப்பாடாக அல்லாமல், அறிவார்ந்த தேர்வாக இருக்க வேண்டும். ஒரு கட்சி எதற்காக நிற்கிறது என்று கேட்பது அறியாமையல்ல; அவசியமானது.
அரசியல் மீண்டும் சித்தாந்தங்களுக்குத் திரும்ப வேண்டும் என்பதை வாக்காளர்கள் வலியுறுத்த வேண்டும்; ஏனெனில், சித்தாந்தங்கள் இல்லாத, ஜனநாயகம் மக்களின் பிரதிநிதிகளை உருவாக்காது; ஆட்சியாளர்களை மட்டுமே உருவாக்கும். கொள்கை இல்லாத தேர்தல்கள் ஆன்மா இல்லாத உடல்களைப் போன்றவை. அவை நகரலாம், பேசலாம், செயல்படலாம், ஆனால் அவற்றால் உணரவும் ஊக்கமளிக்க முடியாது.
ஜனநாயகம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அல்ல
பேரணிகள், பிரச்சாரங்கள், வாக்குப்பதிவு நாட்கள், கருத்துக் கணிப்புகள் போன்றவை ஜனநாயகத்தின் வெளிப்புற செயல்பாடுகள். இவை சடங்குகளாக காலவரையின்றி தொடரலாம். ஆனால் அத்தகைய ஜனநாயக சடங்குகள் நம்பிக்கை மற்றும் தார்மீக நோக்கத்துடன் நிரம்பியிருக்காவிட்டால், அவை வெற்று ஒலியாக ஒலிக்கும்.
இந்திய ஜனநாயகம் பல புயல்களை தாக்குப்பிடித்துள்ளது. ஆனால், இன்று அதன் மிகப்பெரிய அச்சுறுத்தல் வெளிப்புற எதிரிகளிடமிருந்து அல்லாமல் நமது அரசியலின் உள்ளார்ந்த வெறுமையிலிருந்துதான் வருகிறது. குடியரசு நீடிக்க வேண்டுமானால் கொள்கை இல்லாத தேர்தல்களின் கேலிக்கூத்துகள் முடிவுக்கு வர வேண்டும்.
ஜனநாயகம் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அல்ல; கொள்கைகளுக்குப் பணியாற்றுவதற்காக என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அரசியலில் கொள்கைகளை மீண்டும் நிலைநிறுத்த முடியாவிட்டால், ஜனநாயகத்தின் இயந்திரம் அப்படியே இருந்தாலும், ஜனநாயகத்திற்கான பொருள் மெளனமாக மரணித்துவிட்டது என்பதை விரைவில் கண்டுகொள்வோம்.

