pm modi pt web
இந்தியா

Bihar Election 2025| பாஜகவுக்கு வெற்றி மிக முக்கியம்.. ஏன்? மோடி - ஷாவின் வியூகம் என்ன?

பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில் இதில் முதல்வர் பதவியை குறிவைக்கும் பாஜகவின் வியூகமும் மறைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது.

Angeshwar G

பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில் இதில் முதல்வர் பதவியை குறிவைக்கும் பாஜகவின் வியூகமும் மறைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. பிகார் தேர்தல் வெற்றி என்பது பாஜகவுக்கு எவ்வளவு முக்கியம்? அத்தகைய வெற்றி சாத்தியம்தானா? என்னென்ன சிக்கல்கள் இருக்கிறது? விரிவாகப் பார்க்கலாம்..

பிகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், பாஜக இரு கட்சிகளும் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இவ்விரு கட்சிகளும் சம அளவு தொகுதிகளில் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும். தேர்தலுக்குபின் முதல்வர் பதவியை பெற பாஜக வகுத்த வியூகமாக இது பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி

இந்தி பேசும் 10 மாநிலங்களில் உத்தர பிரதேசத்துக்கு அடுத்து பெரிய மாநிலமான பிகாரை, தேசிய ஜனநாயக கூட்டணியின் கையிலேயே தொடர்ந்து தக்க வைத்திருக்க வேண்டுமென்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். ஏனெனில், அம்மாநிலத்தில் ஆளும் கூட்டணியின் முக்கியமான மற்றும் முதன்மையான கட்சி பாஜக. 2005 ஆம் ஆண்டு தேர்தலில் இருந்தே மாநிலத்தில் முக்கியமான சக்தியாக பாஜக இருக்கிறது. ஆனால், இதுவரை தனித்து நின்று ஆட்சி செய்ததில்லை. கூட்டணியில் பயணித்துதான் அதிகாரத்தில் இருந்திருக்கிறது. இம்முறையும் அதே தவறை செய்யக்கூடாது என்பதில் பாஜக தெளிவாக இருக்கிறது. இதனைக் கருத்தில்கொண்டே ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகளுக்கு சரிக்கு சமமாக பாஜகவும் போட்டியிடுகிறது.

பாஜகவில் இருந்து முதல்வர்

ஒருவேளை கூட்டணி வென்று, நிதிஷ் குமாரின் கட்சி கடந்தமுறை போல கணிசமான தொகுதிகளில் வெல்லாமல்போனால் தங்கள் கட்சியை சேர்ந்தவரை முதல்வராக்க பாஜக முனையும் எனக்கூறப்படுகிறது. நிதிஷ் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக பிகாரின் முதலமைச்சராக இருக்கிறார். அவரது நீண்ட கால ஆட்சி மீது இளைஞர்களுக்கு இருக்கும் அதிருப்தி, அவரது உடல்நிலை இவையெல்லாம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிதிஷ் ஒரே நேரத்தில் சுமையாகவும், பலமாகவும் இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே நிதிஷை முதலமைச்சர் வேட்பாளர் என்று அதிகமாக முன்னிறுத்தாமல் பாஜக தேர்தலைச் சந்திப்பதாக ஒரு பார்வையும் இருக்கிறது.

பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பிரதமர் மோடி

இதனைத் தாண்டி பிகார் தேர்தல் களம் முற்றிலுமாக மாற்றமடைந்திருக்கிறது. தேஜஸ்வி, பிரசாந்த் கிஷோர், அகிலேஷ் யாதவ், சிராக் பஸ்வான், ராகுல் காந்தி என இளம் தலைவர்கள் களத்தில் இருக்கிறார்கள். அவர்கள் முன்வைக்கும் விஷயங்களும் வேலைவாய்ப்பு, கல்வி, முதலீடு, உள்கட்டமைப்பு என்று எதிர்காலத்தை நோக்கிய விஷயங்களாக இருக்கிறது. அதோடு, மாநிலத்தில் இருக்கும் வாக்காளர்களில் ஏறத்தாழ 60% பேர் 40 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் என்பதால் இளம் தலைவர்களை சொல்லும் விஷயங்களைக் கருத்தில் கொண்டே வாக்களிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் பாஜக உணர்ந்திருப்பதால்தான், நிதிஷை முன்னிறுத்தாமல் கூட்டணியை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், நிதிஷ் அவசியம் என்பதையும் பாஜக உணர்ந்திருக்கிறது.

பாஜகவால் நிதிஷை தூக்கி எறிய முடியாது

முக்கியமாக 2 காரணங்களால் நிதிஷை பாஜகவால் தூக்கி எறிய முடியாது. முதலில் தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் முக்கியமான இடத்தில் இருக்கிறது. இதற்கு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்காமல், கூட்டணிகளின் துணையைக் கொண்டு ஆட்சியை அமைத்தது முக்கியக் காரணம்.

Nitish Kumar

இரண்டாவது காரணம், நிதிஷ் EBC வாக்காளர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தையும் பெண் வாக்களர்களிடையே நன்மதிப்பையும் கொண்டிருக்கிறார். EBC என்றால், மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். இவர்கள் மாநிலத்தில் மொத்தம் 36.01%  பேர் இருப்பதாக சமீபத்தில் வெளியிடப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே நிதிஷ் தொடர்ச்சியாக கூட்டணியை மாற்றிக்கொண்டே இருந்தாலும், அவர் எந்தக் கூட்டணியில் இருக்கிறாரோ அவர்களுக்கே வெற்றி உறுதி என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சிராக் பஸ்வானின் கட்சிக்கு சற்றே கூடுதலாக தொகுதிகளை ஒதுக்கியதும் பாஜகவின் யுக்தியாக பார்க்கப்படுகிறது. சிராக் பஸ்வான் ஆரம்பத்தில் 45 தொகுதிகள் வரை கேட்ட நிலையில் அவரை 29 தொகுதிக்கு சம்மதிக்க வைத்ததில் மத்திய அமைச்சரும் பிகார் பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதானுக்கு முக்கிய பங்குள்ளதாக கூறப்படுகிறது.

மத்தியில் நீடிக்க நிதிஷ் அவசியம்

முதல்வர் பதவிக்கு பாஜக குறிவைத்தாலும் நிதிஷ் குமாருடன் அது இணக்கமாகவே செல்லும் எனத் தெரிகிறது. மேலே குறிப்பிட்டதுபோல்,  மத்தியில் பாஜக ஆட்சி நீடிக்க நிதிஷின் ஆதரவு மிக அவசியம் என்பதுதான் இதற்கு காரணம்.

2024 பொதுத்தேர்தலில் பிகாரில் இருக்கும் 40 மக்களவைத் தொகுதிகளில் 30 தொகுதிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றது. ஆனால், உத்தரபிரதேசத்தில் பாஜகவால் இத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்த முடியவில்லை. உபியில் பாஜக பின்னடைவச் சந்தித்ததற்கு அகிலேஷ் கைகொண்ட PDA திட்டம் காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.  ஆனால், இம்முறை பிகாரிலும் போட்டி பலமாகி இருக்கிறது.

ராகுல்காந்தி

எதிர்முனையில், தேஜஸ்வி, ராகுல், அகிலேஷ் என இளம் தலைவர்கள் இருக்கின்றனர். இவை வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தைக் கொண்டுவந்தாலும், அவர்களது ஒற்றுமை அக்கட்சிகளின் அடிமட்ட தொண்டர்களிடமும், மக்களிடமும் பேசுபொருளாகியிருக்கிறது. அதோடு, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒரு விவகாரத்தில் ஒற்றுமையாக இருந்திருக்கிறது என்றால் அது பிகாரில் ராகுல் முன்னெடுத்த SIR விவகாரம்தான். எனவே, எதிர்க்கட்சிகளின் தொகுதிப்பங்கீட்டில் குழப்பங்கள் இருந்தாலும், கூட்டணி வலுவாகத்தான் இருக்கிறது. இற்றையெல்லாம் தாண்டித்தான் பாஜக வெல்ல வேண்டும்.

பிகாரில் கைகளில் இல்லாத கூட்டணி

மற்ற மாநிலங்களில் எல்லாம், பாஜகவின் வளர்ச்சி குறைவாக இருந்தாலும், கூட்டணியை டெல்லியில் இருந்துகொண்டு பாஜகதான் வழிநடத்தும். அதன் கை ஓங்கி இருக்கும். முக்கியமாக அம்மாநிலத்தில் பாஜகவின் முக்கிய முகங்களாக சில தலைவர்கள் இருப்பார்கள். உத்தரபிரதேசம் என்றால் யோகி ஆதித்யநாத்தைச் சொல்லலாம். மத்திய பிரதேசம் என்றால் சிவராஜ் சிங் சௌஹானைச் சொல்லலாம், ஆனால், பிகாரில் நிலைமை வேறு.

பிகார்

மாநிலத்தில், நிதிஷ்க்கு ஈடாக, பாஜகவின் முகமாக எந்த ஒரு தலைவரும் இல்லை. அதோடு நிதிஷை மீறி அங்கு செயல்படவும் முடியாது. எனவே, பிகாரில் பாஜகவுக்கு அதிகாரம் இருப்பதுபோல் இருக்கும், ஆனால், முழுமையாக இருக்காது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

வாக்குகளை ஈர்க்கும் சக்தி 

இந்த முறை வாக்குகளை ஈர்க்கும் சக்தியாக மோடி இருப்பார் என்றே பலரும் குறிப்பிடுகின்றனர். ஏனெனில், மூன்றாவது முறை பிரதமராகப் பொறுப்பேற்ற இந்த 15 மாதங்களில் மட்டும் ஏறத்தாழ 7 முறை பிகாருக்கு அவர் வந்து சென்றிருக்கிறார். ஒவ்வொரு முறை பிகார் வந்து செல்லும்போதும் பல நலத்திட்டங்கள் பிகாரை வந்தடைவதால், மோடியின் வருகையை மிகுந்த உற்சாகத்தோடு பார்க்கிறார்கள் பிகாரிகள்! பிகாருக்கு இதுவரை 50 முறை மோடி வந்திருப்பது அவர் பிகார் மீது கொண்டுள்ள அக்கறைக்கான வெளிப்பாடு என்று பிகார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சாம்ராட் சௌத்ரி சமீபத்தில் கூறியிருந்தார்.

பிகார் மாநிலத்தில் பாஜகவுக்கு மக்கள் சக்தி கொண்ட தலைவர்கள் இல்லையென்றாலும், குறிப்பிடத்தகுந்த விஷயம் ஒன்று இருக்கிறது. 2005 முதல் பாஜக ஒவ்வொரு கூட்டணியிலும் முக்கியமான சக்தியாக இருக்கிறது. 55, 91, 53 என இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றி பெற்று தன்னை முக்கியசக்தியாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இவற்றிற்கு சுஷில் மோடி ஒரு காரணம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிகார் பாஜகவின் முகமாக அவர் இருந்திருக்கிறார். கூட்டணிப் பேச்சுவார்த்தை முதல் தலைமை சொல்லுவதை நடத்துவது வரை அவரே முன்னின்று நடத்தியிருக்கிறார். 2024 மே மாதத்தில் இவர் மரணமடைந்த நிலையில், பாஜகவின் செயல்பாடுகள் சுருங்கிப் போனதாக ஒரு பார்வையும் இருக்கிறது.

பிராந்திய பிரச்னைகளே முன்னுரிமை

இதனைத்தாண்டி மிக முக்கியமான விஷயம் பிகாரில், வாக்காளர்கள் பிராந்திய தலைமை மற்றும் மாநில பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க முனைகிறார்கள். மகாகத்பந்தன் பிரமாண்ட வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது. ஆர்ஜேடி தனிப்பெரும் கட்சியாக மாறியிருக்கிறது. இவை அனைத்தையும் பாஜக மனதில் கொண்டே தனது திட்டங்களை செயல்படுத்துகிறது ஏனெனில் பாஜகவின் வெற்றி அதன் கூட்டாணியான ஐக்கிய ஜனதா தளத்தை மட்டுமே பாதித்திருக்கிறது. எதிர்க்கட்சியான ஆர் ஜே டி இன்னும் வலிமையாக மாறிக்கொண்டு இருக்கிறது. எனவே, சிராக் பாஸ்வான், உபேந்திர குஷ்வாஹா, ஜிதன் ராம் மஞ்சி போன்ற சிறிய ஆனால் அந்தந்த பகுதிகளில் செல்வாக்கு மிக்கவர்களை கூட்டணியில் வைத்திருக்கிறது பாஜக.

சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி, உபேந்திர குஷ்வாஹா

மகாராஷ்டிர தேர்தலுக்குப் பிறகு பிகார் மாநிலத்தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமானது. மக்களவை தேர்தலில் பெரும்பான்மையை இழந்த நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற்று தேசிய அளவில் தன்னை பலப்படுத்திக்கொள்ள பாஜக முனைகிறது. இது அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவுக்கான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. இவை எல்லாம் சேர்ந்துதான் பாஜகவிற்கு வெற்றி பெற்றே ஆகவேண்டிய அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நிதிஷ் மேல் அதிருப்தி இல்லை

பிகாரின் அரசியல் அமைப்பை புதிய கட்சிகளின் எழுச்சி பெரிதாக மாற்றவில்லை. மாறாக கூட்டணி கட்சிகளின் இடமாற்றமே வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கிறது. இந்த இடத்தில்தான் நிதிஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் கிங்மேக்கர் என்ற பாத்திரத்தினை ஏற்றிருக்கிறது. இதனை மனதில் கொண்டே காங்கிரஸ் கட்சியினர் நிதிஷை அதிகமாக விமர்சிப்பதில்லை. ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால் நிதிஷ் தங்கள் பக்கம் வரலாம் என காங்கிரஸ் நினைப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. எனவே தங்களது விமர்சனங்களை எல்லாம் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எனும் பெயரிலேயே காங்கிரஸ் முன்வைக்கிறது. அதேபோல் காங்கிரஸ் மேற்கொண்ட கள ஆய்வில் நிதிஷ் மேல் பெண் வாக்காளர்களுக்கும் மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வாக்காளர்களுக்கும் மிகப்பெரிய அளவில் அதிருப்தி இல்லை என்றே தெரிய வந்திருக்கிறது.

பிரதமர் மோடி, நிதிஷ்குமார்

பாஜகவும் இந்த தேர்தலை இரட்டை என்ஜின் சர்க்கார் என்று தங்களது வழக்கமான முழக்கங்களைக் கொண்டே எதிர்கொள்கிறது. தேர்தலை ஒட்டி ஏகப்பட்ட நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சமீபத்திய வாரங்களில், பிரதமர் மோடி பீகாரில் பெண்களுக்காக மட்டும் பிரத்யேக நலத்திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார். பிகாரில் உள்ள 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் என ரூ.7,500 கோடியை டெபாசிட் செய்தது. இளைஞர்களை மையமாகக் கொண்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.

இதுவரை இருமுனைப் போட்டியாக இருந்த நிலையில், தற்போது பிகார் தேர்தல் மும்முனைப் போட்டியாக மாறியிருக்கிறது. கடந்த தேர்தலிலேயே பல தொகுதிகளில் வெற்றி தோல்வி என்பது சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் நிர்ணயமானது. இம்முறை அத்தகைய தொகுதிகள் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தனை சுலபமாக வெற்றி பெறுபவர்களை கூறமுடியவில்லை. என்ன நடக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம்.