பிஹார் தேர்தல் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? விரிவான பார்வை!
பிஹார் சட்டமன்றத் தேர்தல் ஏன் முக்கியவத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது என்பதை இத்தொகுப்பில் காணலாம்.
மக்கள்தொகை அளவில் இந்தியாவின் 3ஆவது பெரிய மாநிலமாக இருக்கும் பிஹார்தான் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. வரலாற்று ரீதியாக அரசியல் போக்கின் முன்னத்தி ஏராக கருதப்படும் பிஹார், அசோகர் காலத்திலிருந்தே அரசியல் சூட்டுக்கு பெயர்போன பிராந்தியமாக இருக்கிறது.
கடந்த அரை நூற்றாண்டு காலத்தை கருத்தில் கொண்டால், 1970களில் இந்திராவின் அடக்குமுறைக்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயணன் தொடங்கிய முழுமையான புரட்சி பிஹாரில் தான் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கம் தான் நெருக்கடி நிலையில் கிளர்ந்தெழுந்து, இந்திராவின் ஆட்சிக்கு முடிவு கட்டியது.
பிஹார் தேர்தல் ஏன் முக்கியம்..?
தொடர்ந்து 1980களில் மாணவர் இயக்கங்களின் வழியே புதிய அரசியலை முன்னெடுத்து, லாலு, நிதிஷ் உள்ளிட்ட தலைவர்கள் தலையெடுக்கவும், காங்கிரஸுக்கு மாற்றான இயக்கங்கள் வளரவும் வழிவகுத்தது.
1990களில் மண்டல் அரசியலின்மையமாகவும் பிஹாரே இருந்தது. சமூகரீதியாக பிற்படுத்தப்பட்டோரும், இஸ்லாமியர்களும், பட்டியலினத்தவர்களும் இணைந்து புதிய அரசியல் சக்தியாக எழுந்ததும் பிஹாரில் தான்.
2000 தொட்டு, அரசியலில் நிர்வாகமும், வளர்ச்சியும் முக்கியமான அம்சமாக எழுந்ததும் பிஹாரில்தான். அடுத்து, 2010களில், கூட்டணி அரசியல் சோதனை மையமாகத் திகழ்ந்ததும் பிஹார்தான். 2020களில் இந்திய அரசியலில் முக்கியமான சக்தியாக உருவெடுத்த இந்தியா கூட்டணியின் உருவாக்கத்திலும் சரி, மோடி தலைமையிலான பாஜக மூன்றாம் முறையாக ஆட்சிக்கு வந்ததிலும் சரி,புதிதாக உருவெடுத்திருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு அரசியலிலும் சரி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் முக்கியமான சூத்திரதாரியாக இருந்தார்.
இந்தப் பின்னணியில்தான் வட இந்திய அரசியலில் குறிப்பாக இந்தி மாநிலங்களில் பிஹார் எப்போதும் முக்கியமான மாநிலமாகக் கருதப்படுகிறது.