பிகார்| குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை.. அள்ளித் தெளிக்கப்படும் வாக்குறுதிகள்!
பிகாரில் கூட்டணி மற்றும் தொகுதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் அக்கட்சிகளில் உள்ள தலைவர்கள் நாளுக்குநாள் போட்டிபோட்டுக் கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றனர்.
பிகாரில் அள்ளித் தெளிக்கப்படும் வாக்குறுதிகள்
தேர்தல் தொடர்பாக சமிஞ்ஞைகள் தெரியத் தொடங்கியதும் ஆட்சியமைப்பதற்காக அல்லது ஆட்சியைத் தக்கவைப்பதற்காக வாக்குறுதிகளை அரசில்வாதிகள் அள்ளித் தெளிப்பார்கள். சில நேரங்களில், செயல்படுத்த முடியுமா, முடியாதா என்று சந்தேகம் எழுவதற்குண்டான அறிவிப்புகளைக்கூட வெளியிடுவார்கள். ஆனால், அது பின்னாளில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது வேறு கதை. எனினும், தேர்தல் நேரத்தில் மட்டும் பல்வேறு கட்சியினர் வாக்குறுதிகளை வழங்குவது வாடிக்கையாக உள்ளது. அது, தற்போது ’மடாலயங்களின் பூமி’ என அழைக்கப்படும் பிகாரிலும் தொடங்கியிருக்கிறது.
ஆம், அங்கு நவம்பர் மாதத்தில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்குத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஒருபுறம் கூட்டணி மற்றும் தொகுதிகள் தொடர்பாக பேச்சுவார்தையில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் அக்கட்சிகளில் உள்ள தலைவர்கள் நாளுக்குநாள் போட்டிபோட்டுக் கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றனர்.
தேஜஸ்வி யாதவ் - ‘வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை’
பிகாரில் எதிர்க்கட்சிகளின் 'மகாகத்பந்தன்' கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், ”பீகாரில் i-n-d-i-a கூட்டணி ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சிறப்பு வேலைவாய்ப்புச் சட்டம் இயற்றப்படும்; ஆட்சிக்கு வந்த 20 நாள்களுக்குள் இச்சட்டத்தைக் கொண்டு வருவோம். மேலும் 20 மாதங்களில் இது செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்” என அவர் தெரிவித்திருப்பதுதான் பிகார் இளைஞர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இது, எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது தேர்தலின் வெற்றிக்குப் பிறகுதான் தெரியவரும் என்கிற நிலையில், இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், கடந்த சில மாதங்களாகவே இளைஞர்களின் வேலைவாய்ப்பு பற்றிய விஷயங்களில் அக்கறை கொண்டு, அதற்கான நடவடிக்கைகளிலும் செயல்பட்டு வருகிறார்.
முதல்வர் நிதிஷ்குமாரின், ‘ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை’!
கடந்த ஆகஸ்ட் மாதம் இது தொடர்பாகப் பேசிய நிதிஷ்குமார், “வரும் ஆண்டுகளில் மாநிலத்தில் ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலைகள் மற்றும் பிற வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்; பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்; அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசம்; முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் அதிகரிப்பு” என பல அறிவிப்புகளை வெளியிட்டு பிகார் மாநில வாக்காளர்களைக் கவர்ந்தார்.
அதேபோல, நிதிஷ்குமாருடன் இணைந்திருக்கும் பாஜகவோ, தேர்தலுக்கு முன்னதாகவே பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. 2025 மத்திய பட்ஜெட் அறிக்கை வெளியானபோதே, கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான நிதிபலன்களைப் பிகார் பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது. “இது இந்தியாவுக்கான பட்ஜெட்டா; பிகாருக்கான பட்ஜெட்டா” என்று பலரும் அப்போதே வியந்தது நினைவில் இருக்கலாம்.
அதற்குப் பிறகும் அடுத்தடுத்த அறிவிப்புகளால், பிகார் மக்களை திணறடித்தது மோடி அரசு. அந்த அதிரடிகளின் தொடர்ச்சியாக தர்பங்கா – மதர் இடையேயான அம்ரித் பாரத் ரயிலை அறிவித்தது இந்திய ரயில்வே. பிகார், ராஜஸ்தான் இடையேயான இந்த ரயிலுடன் சேர்த்து, பீகாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அம்ரித் பாரத் ரயில்களின் எண்ணிக்கை 11 ஆனது. இதையன்றி, புதிதாக வந்தே பாரத் ரயில்களும் பிகாருக்கு அறிவிக்கப்பட்டன. தவிர, மூன்றாவது முறை பிரதமராகப் பொறுப்பேற்ற மோடி, கடந்த 15 மாதங்களில் மட்டும் 7 முறை பிகாருக்குச் சென்றிருக்கிறார். இன்னொரு புறம், தேர்தல் வியூகவாதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஜன் சுராஜ் கட்சியின் (ஜேஎஸ்பி) நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், மற்ற இரு கூட்டணிகளுக்குப் போட்டியாக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அவர், “ஆட்சிக்கு வந்த சில மணி நேரங்களுக்குள் மதுவிலக்கு நீக்கப்படும்; (மாநிலத்தில் மது தடை செய்யப்பட்டிருந்தாலும், அது இன்னும் சட்டவிரோதமாக விநியோகிக்கப்படுகிறது). அடுத்து, ஆண்கள், பெண்கள், விதவைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு அவரது அரசாங்கம் மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும்; நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக ஒரு புதிய துறை அமைக்கப்படும், இது ஒரு வருடத்திற்குள் வேலை தேடி மாநிலத்திலிருந்து இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக செயல்படும்; வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ள விரும்புவோருக்கு, வெறும் 4 சதவீத வட்டி வழங்கப்படும்; ஒவ்வொரு கிராமத்திலும், அரசுப் பள்ளிகளின் நிலை மேம்படும் வரை, மக்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். அவர்களின் கட்டணங்களை அரசே ஏற்கும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இவற்றை தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், முதல் 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்படி மாறிமாறி அரசியல்வாதிகள் அளித்துவரும் தேர்தல் வாக்குறுதிகளால், பிகார் வாக்காளர்களுக்கு ஜாக்பாட் அடிக்கத் தொடங்கியுள்ளது.