பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகம்| ஐபிஎஸ் to அட்வகேட் ஜெனரல்.. மிரட்டும் வேட்பாளர் பட்டியல்!
பிஹார் தேர்தலில் களமிறங்கும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தங்களுடைய முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்திருப்பது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல் தலைவராக மாறியுள்ள பிரசாந்த் கிஷோர், தனது ஜன் சுராஜ் கட்சியின் முதற் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பிஹார் அரசியலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.
வழக்கமான அரசியல் கட்சிகளைப் போலல்லாமல், ஜன் சுராஜ் வெளியிட்டுள்ள 51 பேர் கொண்ட இந்த முதல் பட்டியலில், தொழில்முறை வல்லுநர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இது பிஹார் அரசியலில் திறமை மற்றும் தூய்மையான ஆளுமை என்ற புதிய அத்தியாயத்தை எழுத கிஷோர் முயல்வதைச் சுட்டிக்காட்டுகிறது.
கவனம் ஈர்த்த வேட்பாளர் பட்டியல்..
தலைசிறந்த கல்வியாளரும், பாட்னா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான KC சின்ஹா, குமஹரார் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
பாட்னா உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், பிஹாரின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஒய்.பி கிரி, மாஞ்சி தொகுதியில் போட்டியிடுகிறார்.
கிராமப்புற சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர் ஒருவர், முசாஃபர்பூர் தொகுதியில் களம் காண்கிறார்.
இதுமட்டுமின்றி, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளான RK மிஸ்ரா மற்றும் ஜெய் பிரகாஷ் சிங், முன்னாள் முதல்வர் பாரத ரத்னா கர்பூரி தாக்கூரின் பேத்தி ஐகிருதி தாக்கூர், மற்றும் திருநங்கை வேட்பாளர் ப்ரீத்தி கின்னார் ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த வேட்பாளர் பட்டியலில், மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு (EBC) 17 இடங்களும், இஸ்லாமியர்களுக்கு 7 இடங்களும் வழங்கப்பட்டுள்ளன. பிரசாந்த் கிஷோர், தான் போட்டியிட விரும்பிய கர்கஹர் தொகுதியில், போஜ்புரி பாடகர் ரிதேஷ் ரஞ்சன் பாண்டேயை களமிறக்கியுள்ளார். இதன் மூலம், அவர் தேஜஸ்வி யாதவின் கோட்டையான ராகோபூர் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு மேலும் வலுத்துள்ளது.
இத்தகைய எதிர்பாராத தேர்தல் வியூகங்கள் மூலம், பிஹார் அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர விரும்பும் பிரசாந்த் கிஷோர் தனது அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.