ஷபீர் அகமது, அதானி pt web
சிறப்புக் களம்

“அதானி விவகாரத்தை காங். போல் திமுக கையிலெடுக்கவில்லை..” குளிர்கால கூட்டத்தொடர் குறித்து ஷபீர் அகமது!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், நடப்பு விஷயங்களைத் தாண்டி, நேரு, அம்பேத்கர், இந்திராகாந்தி என கடந்த கால ஆளுமைகள் குறித்த விவாதங்களும் அதிகளவில் நடந்தது.

அங்கேஷ்வர்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டதொடரின் இறுதி நாளான இன்று மக்களவை கூடிய சில நொடிகளில் தேதி குறிப்பிடாமல் நாட்டுப்பண் இசைக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் உள்ளிட்டவைகள் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கைகள் வைத்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டு, அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக அவை பல நாட்கள் ஒத்திவைக்கப்பட்டது. நடப்பு விஷயங்களைத் தாண்டி, முன்னாள் பிரதமர் நேரு, டாக்டர் அம்பேத்கர், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி என கடந்த கால ஆளுமைகள் குறித்த விவாதங்கள்தான் அதிகளவில் நடந்தது.

இத்தகைய சூழலில்தான், நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து பேச பத்திரிகையாளர் ஷபீர் அகமதுவைத் தொடர்புகொண்டோம்.,

ஷபீர் அகமது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து உங்கள் பார்வை என்ன? கடந்த கால ஆளுமைகள் அதிகளவில் பேசப்பட்டனரே?

இந்த குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள் என்றால், மணிப்பூர் விவகாரம், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, விவசாயிகள் போராட்டம், அதானி குழும விவகாரம், தொடர் ரயில் விபத்துகள் இம்மாதிரி பிரச்னைகள்தான் விவாதத்தின் மையமாக இருந்திருக்க வேண்டும். இந்த விஷயங்கள்தான் பிரதானமாக பேச வேண்டிய விஷயங்களாக இருக்கிறது. ஆனால், அதிலிருந்து மக்களது கவனத்தை திசை திருப்பத்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கொண்டு வந்தது. பெரும்பான்மை இல்லை என்பது அவர்களுக்கே தெரியும். ஆனாலும், அந்த மசோதாவை கொண்டு வந்து விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த மசோதா தற்போது அவசர தேவையா?

இரண்டாவது, அம்பேத்கர் விவகாரத்தில் அமித்ஷா பதிவு செய்தது தவறான கருத்து. அதை எதிர்க்கட்சிகள் நிச்சயமாக பிரச்னை செய்வார்கள் என்பது தெரியும். தற்போது அதை திசை திருப்புவதற்காக, 'எங்கள் எம்பியைத் தள்ளிவிட்டார்கள்; அவர் கீழே விழுந்து தற்போது ஐசியுவில் இருக்கிறார்' எனச் சொல்கிறார்கள். முழுக்க முழுக்க இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்கள் சார்ந்த பிரச்னைகள், மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ள பிரச்னைகள், மக்களுக்கு தேவையான பிரச்னைகள் விவாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அரசாங்கம் செய்யும் உத்திகள் இது.

பெரும்பாலான நாட்கள் அவைகள் முடங்கிப் போய்தானே இருந்தது?

நாடாளுமன்றம்

கடந்த காலங்களில் பாஜக பெரும்பான்மையாக இருக்கும்போது நாடாளுமன்றத்தை அவர்களே முடக்குவார்கள். எதிர்க்கட்சிகள் முடக்குவதை விட ஆளும் அரசே முடக்கும். இம்முறை பெரும்பான்மை இல்லை எனத் தெரிந்தபின், வெவ்வேறு விஷயங்களைக் கொண்டு வந்து, மக்கள் பிரச்னைகளை திசை திருப்பும் நடவடிக்கைகளைத்தான் ஆளும் அரசு மேற்கொள்கிறது. எதிர்க்கட்சிகளும் சில கோரிக்கைகளை முன்வைக்கிறது; எதிர்க்கட்சியினர் அதை விவாதத்திற்கு உள்ளாக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், எந்த விவாதத்தினையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையில் அரசாங்கம் இல்லை..

இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதுமே, எவ்விதமான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளும் இல்லாமல் முடிந்துவிட வேண்டும் என்பதுதான் ஆளும் தரப்பின் எண்ணமாகவும் இருக்கிறது. அப்படித்தான் இந்த கூட்டத்தொடரும் முடிந்துள்ளது.

திசை திருப்பும் நடவடிக்கைகள் மட்டும்தான் இந்தக் கூட்டத்தொடரில் நடந்ததா?

எதிர்க்கட்சிகளின் கவனத்தை திசைதிருப்புவது, மக்களது கவனத்தை திசை திருப்புவது, பேசப்பட வேண்டிய விஷயங்கள் பேசப்படாமல் இருப்பது இதுதான் அவர்களது உத்தி. இதை அவர்கள் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்றம்

சென்ற முறையெல்லாம், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதாவது ஒரு விஷயத்தினைப் பேசினால், உடனே, 'பெண்களைப் பற்றி அவதூறு செய்துவிட்டார்' அப்படி இப்படி என பெரிய பிரச்சாரத்தையே அவர்கள் செய்வார்கள். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இப்போது, அதிகமாக இருக்கிறது. இப்போது ஆளும் தரப்பு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதன்காரணமாக ஆளும் கூட்டணியினரால் எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்த முடியவில்லை. எனவே, மீண்டும் மீண்டும் சொல்கிறேன், வெவ்வேறு விஷயங்களை கொண்டு திசை திருப்பும் நடவடிக்கைகளைத்தான் அவர்கள் மேற்கொள்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் எப்படி இருந்தது?

எதிர்க்கட்சிகள் ஒரு சில அஜெண்டாக்களுடன்தான் எப்போதும் இயங்குவார்கள். இம்முறை எதிர்க்கட்சிகளிடம் கூட ஒற்றுமை இல்லை. உதாரணத்திற்கு, அதானி விவகாரத்தில், திமுக எதிர்ப்பதுபோல் எதிர்க்கிறார்கள். ஆனால், பெரிய அளவில் அவர்களது செயல்பாடுகள் இல்லை. உதாரணத்திற்கு, கடந்த காலங்களில் திமுக மணிப்பூர் விவகாரத்தில் செயல்பட்டதுபோல இம்முறை அதானி விவகாரத்தில் செயல்படவில்லை. மேலும், ஒத்திவைப்பு தீர்மானம் அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கூட திமுக சார்பில் கொடுக்கப்படவில்லை. அவர்கள் மணிப்பூர் பிரச்னையில்தானே கவனத்தை செலுத்தினார்கள்.

சமாஜ்வாதி சம்பல் விவகாரத்தை பேசுகிறது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் அதானி குறித்து வெளிப்படையாக பேசவில்லை. அதானி குறித்தே பெரிய போராட்டங்கள் ஏதும் நடக்கவில்லை. சமீபத்தில், டாக்டர் அம்பேத்கர் பிரச்னையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக போராடியதுபோல் அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக போராடவில்லையே.

அதேபோல், ரயில் விபத்துகள் தொடர்பாக எந்த போராட்டங்களும் நடக்கவில்லை. முக்கியமாக ரயில் விபத்துகள் தொடர்பாக, ரயில்வே துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றுகூட கோரிக்கைகள் வைக்கவில்லையே. எதிர்க்கட்சிகளது கவனமும் ஒவ்வொரு விஷயத்திலும் வேறுபட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளிடம் 2024 தேர்தலுக்கு முன்பிருந்த ஒற்றுமை பல்வேறு விஷயங்களில் இல்லை. எதிர்க்கட்சிகளிடையே ஒற்றைக் கருத்து இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. உதாரணமாக, காங்கிரஸ் அதானி விவகாரத்தை மட்டுமே பேசுகிறது. மாநில கட்சிகளின் பிரச்னைகளை பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு மாநில கட்சிகளிடையே உள்ளது.

ராகுல்காந்தி 2015ல் இருந்து முதலாளிகளுக்கான அரசு பாஜக... கோட்சூட் அரசு என்றெல்லாம் சொல்லி வருகிறார்? தற்போது வரை அந்த குற்றச்சாட்டு தொடர்கிறது. காங்கிரஸ் இன்னும் அதில் தீவிரம் காட்ட வேண்டுமா? இல்லை இது பழைய குற்றச்சாட்டு ஆகிவிட்டதா?

அதானி பழைய குற்றச்சாட்டு என்பதாலேயே அதை புறந்தள்ளிவிட முடியாது. அதில் உண்மை இருக்கிறதா? இல்லையா? என்பதுதான் முக்கியம். அதானி எந்த அளவிற்கு இந்த அரசாங்கத்தால் பயனடைந்துள்ளார், ஒப்பந்தங்கள் எந்த அளவிற்கு அவருக்கு சென்றுள்ளது என்பதெல்லாம் மிக முக்கியமான விஷயம். அதானிக்கு ஆதரவாக பாஜக இருக்கிறது என்பது குற்றச்சாட்டு. அது பாஜகவாலேயே மறுக்க முடியாத குற்றச்சாட்டாக உள்ளது. அதானிக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்பதை பாஜக எந்த இடத்திலும் சொல்லவில்லையே. 'நான் அதானிக்கு உதவில்லை; அதானி விவகாரத்தை நாங்கள் விசாரிப்போம்' என்று சொல்லும் இடத்திற்குக் கூட பாஜக வரவில்லை. எனவே, இந்த பிரச்னையை பேசாமல் விடமுடியாது. அதை காங்கிரஸ் கட்டாயம் பேசும். ஆனால், காங்கிரஸ் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் கூட்டணிக் கட்சிகளும் செயல்பட வேண்டும்.

அதானி குழுமம்

அதேவேளையில் இந்த பிரச்னையை மட்டுமே பேசுவதும் சரியானது இல்லை. மற்ற விஷயங்களையும் காங்கிரஸ் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மாநில ரீதியாகவே பல்வேறு பிரச்னைகள் இருக்கிறது. அது எல்லாவற்றையும் சேர்த்துதான் காங்கிரஸ் பேச வேண்டும்.

மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்தில் பேசப்படவே இல்லையே?

மணிப்பூர்

மணிப்பூர் விவகாரத்தினை அரசு விவாதிக்கக் கூடாது என்றே முடிவு செய்துவிட்டது. வேறு ஏதோ நாடுகளில் நடக்கும் பிரச்னைகளுக்கு அரசு குரல் கொடுக்கிறது, பேசுகிறது எனும்போது இந்தியாவில் நடக்கும் பிரச்னையை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதுதானே? மணிப்பூர் இன்றும் பற்றி எரிந்துகொண்டுதான் இருக்கிறது. அங்கு பாதிக்கப்படுவது யார் மக்கள்தானே? மணிப்பூர் பழைய விஷயமாகிவிட்டது என நினைத்து யாராவது பேசாமல் இருந்தால் அதுவே மிகப்பெரிய துரோகம்.