“டேய் தகப்பா என்னடா இதெல்லாம்?” - ஓய்வு குறித்து விமர்சித்த தன் தந்தைக்கு அஸ்வின் நகைச்சுவை பதில்!
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இதன்மூலம், 14 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுத்திருக்கிறார் கேரம் பால் (ball) கிங் அஸ்வின்.
அஸ்வினின் திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய அணியில் ஆகச் சிறந்த வீரராக விளங்கிய அஸ்வினின் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் ரசிகர்கள் தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர்.
வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றும் அஸ்வின், முக்கிய போட்டிகளின்போது பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டது மிக முக்கிய காரணமாக ரசிகர்கள் குற்றம்சாட்டினர்.
இதனிடையேதான் அஸ்வினின் தந்தை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்று வைரலானது. அதில், “அஸ்வின் ஓய்வு பெறுவது குறித்து எனக்கும் கடைசி நிமிடத்தில்தான் தெரியும். அவரது மனதில் என்ன இருந்தது என்பது எனக்குத் தெரியாது. அவர் ஓய்வை அறிவித்ததை முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஓய்வை அறிவித்ததில் ஒரு பக்கம் எனக்கு எந்த வருத்தமும் இல்லையென்றாலும், மறுபக்கம் நான் மகிழ்ச்சியாகவும் இல்லை.
அவரது முடிவுகளில் என்னால் தலையிட முடியாது. அவர் ஓய்வு பெற்றதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அஸ்வினுக்கு மட்டும்தான் அது தெரியும். அவர் அவமானப்படுத்தப்பட்டதுகூட காரணமாக இருக்கலாம்.
14 முதல் 15 ஆண்டுகள் வரை கிரிக்கெட் விளையாடியுள்ளார். திடீரென்ற ஓய்வு அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில்தான் உள்ளது. அதேசமயத்தில் நாங்கள் அதை எதிர்பார்த்தோம். அவமானப்படுத்தப்படுவதை அவரால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
டேய் தகப்பா என்னடா இதெல்லாம்?
இந்த வீடியோவை மேற்கோள் காட்டிய கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி ராமன், அஸ்வினை டேக் செய்து பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அஸ்வின், “ஊடகத்திடம் பேசுவதில் என் தந்தைக்கு அனுபவம் கிடையாது. டேய், father என்னடா இதெல்லாம்? (பிரபல கவுண்டமனியின் நகைச்சுவையை குறிப்பிடுவது போல)
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களது தந்தைகள் பேசுவதையே நீங்களும் (அப்பாவை) பின்பற்றுவீர்கள் என நான் நினைக்கவில்லை. அவரை (அப்பாவை) மன்னித்துவிடவும், அவரை தனியாக விடவும் அனைவரிடமும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்தப்பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.