இஸ்ரேல் Vs ஈரான் | “கொல்லப்பட்டவர்களின் இரத்தத்தை..” - ‘Operation Rising Lion’ சொல்லும் அர்த்தமென்ன?
‘ஆபரேஷன் ரைசிங் லயன்’
‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ பெயரே அச்சமூட்டக்கூடிய வகையில் இருக்கிறதா? இது வெறும் போர் நடவடிக்கைக்கான பெயர் மட்டுமல்ல... இஸ்ரேலின் நெடுநாள் நடவடிக்கைகளைக் குறிக்கும் ஒரு STATEMENT. இஸ்ரேலின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பைபிளிலுள்ள ஒரு வசனத்திலிருந்து இந்தப் பெயர் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமை ஒரு புகைப்படத்தை வெளியிட்டது. அதில், "the people shall rise up as a lion" என்ற வசனம் குறிப்பிடப்பட்டிருந்தது.
‘Rising Lion’ எனும் சொற்றொடர் எபிரேய பைபிளில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த பைபிளில், “இதோ, மக்கள் ஒரு பெரிய சிங்கத்தைப் போல எழுவார்கள், ஒரு இளம் சிங்கத்தைப் போல தங்களை உயர்த்துவார்கள்: இரையைச் சாப்பிட்டு, கொல்லப்பட்டவர்களின் இரத்தத்தைக் குடிக்கும் வரை படுக்க மாட்டார்கள்” (Behold, the people shall rise as a great lion, and lift himself as a young lion: he shall not lie down until he eat of the prey, and drink the blood of the slain) எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஈரான் மீது தாக்குதல் - மக்கள் பலர் உயிரிழப்பு
ஜூன் 13ஆம் தேதி ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை குறி வைத்து, இஸ்ரேல் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நிகழ்த்தியது. முதல் தாக்குதல் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை அடுத்து எங்கும் புகை மண்டலங்களாக காட்சியளித்த நிலையில், அவசரகால மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில், பலர் உயிரிழந்த நிலையில் சடலங்களாகவே மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஈரானின் பிரதிநிதி அமீர்-சயீத் இரவானி, மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்திருந்தார். இஸ்ரேலின் தாக்குதலில் 78 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 320 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறிய அவர், அதில் பெரும்பாலானோர் பொதுமக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சியோனிசப் படைகளின் நேரடிப் படுகொலை
தங்கள் தாக்குதலில், ஈரானின் இஸ்பஹானிலுள்ள அணுசக்தி கட்டமைப்பு தகர்க்கப்பட்டுவிட்டதாக, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன. ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் ஆறு உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானிகள் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதி ஜெனரல் ஹொசைன் சலாமி, ஈரானின் இராணுவத் தளபதி ஜெனரல் முகமது பகேரி மற்றும் ஈரானின் உயரடுக்கு ஹதெம் அல்-அன்பியா மத்திய கட்டளையின் தளபதி கோலம் அலி ரஷீத் போன்றோரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய ஊடகங்கள் இந்தத் தாக்குதலை, ‘சியோனிசப் படைகளின் நேரடிப் படுகொலை’ என அழைக்கின்றன.
ஈரானின் ஹமாடன் மற்றும் தப்ரிஸ் விமானப்படை தளங்களை தாக்கியதாகவும், அதில் தப்ரிஸ் விமானப்படை தளம் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஃபோர்டோ மற்றும் நாடன்ஸ் ஆகிய இடங்களிலுள்ள அணுசக்தி கட்டமைப்புகளை இஸ்ரேல் தாக்கியுள்ளதாகவும், இதில் நாடன்ஸிலுள்ள அணுசக்தி தளத்தில் சில பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோஸி தெரிவித்துள்ளார்.
OPERATION TRUE PROMISE 3
இஸ்ரேலின் இந்தத் தாக்குதலை அடுத்து ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமெனி தனது நாட்டின் ஆயுதப்படைகள் இஸ்ரேலுக்கு எதிராக தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள கமெனி, “சியோனிச ஆட்சி ஒரு பெரிய தவறைச் செய்துள்ளது. மேலும் ஒரு பொறுப்பற்ற செயலைச் செய்துள்ளது. கடவுளின் கிருபையால், இதன் விளைவுகள் அந்த ஆட்சியை அழிவுக்கு இட்டுச் செல்லும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “ஈரானின் ஆயுதப்படைகள் தயாராக உள்ளன. நாட்டின் அதிகாரிகளும் மக்களும் ஆயுதப்படைகளுக்கு பின்னால் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான், OPERATION TRUE PROMISE 3 என்ற பெயரில் பதில் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. 150 பாலிஸ்ட்டிக் ஏவுகணைகள் உள்ளிட்டவை மூலம் தாக்குதல் நிகழ்த்தி வரும் ஈரான், பல்வேறு இலக்குகள், இராணுவ, விமானப்படை தளங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசேலத்தை குறிவைத்து ஈரான் தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், டெல் அவிவின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் தலைமையகம் அமைந்துள்ள பகுதி அருகே, குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக அவ்வூடகங்கள் கூறுகின்றன.
வரும் காலங்களில் அமைதி நிலவும்
டெல் அவிவில் 7 இடங்களில் ஈரான் ஏவுகணைகள் தாக்கியதாக, இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்துள்ளார். அதேவேளையில், ஈரான் ஏவும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவம் உதவி வருவதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஈரானின் தாக்குதலில் காயமடைந்து 40 பேர் இஸ்ரேல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி ஈரான் சிவப்பு கோட்டை தாண்டிவிட்டதாக, இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனிடையே, இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பொதுமக்கள் கொண்டாடியுள்ளனர்.
தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ராணுவ வானொலியிடம் பேசுகையில், "இந்தத் தொடக்க தாக்குதல் வெற்றிபெற்றிருந்தால், ஹெஸ்பொல்லாவுக்கு பத்து நாட்களில் நாங்கள் செய்ததை, ஈரானுக்கு பத்து நிமிடங்களில் செய்துவிட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மக்களுக்கும் நெதன்யாகு ஒரு செய்தியைத் தெரிவித்துள்ளார். அதில், ஈரான் மக்களுக்கு எனக் குறிப்பிட்டு செய்தியைத் தொடங்கும் அவர், நீங்கள் எங்களது எதிரிகள் அல்ல என்றும் உங்காளது ஆட்சியாளர்களே எதிரிகள் என்றும் தெரிவிக்கிறார். இந்த கொடுங்கோன்மை ஆட்சி ஒழிந்தவுடன் வரும் காலங்களில் நமக்கிடையே அமைதி நிலவும் என நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.