300 ஆண்டுக்கு முன் மூழ்கிய கப்பல்.. ரூ.1.4 லட்சம் கோடி மதிப்புள்ள புதையல் இருப்பது கண்டுபிடிப்பு!
300 ஆண்டுகளுக்கு முன்பு கொலம்பிய கடற்பகுதியில் மூழ்கிய சான் ஹோஸே என்று அழைக்கப்படும் ஸ்பானிஷ் கப்பலில் உலகின் மிகப் பெரிய புதையல் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலில் 16 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, மரகதங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. 1708ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் போருக்கான நிதி அளிக்க தங்கம், வெள்ளி உட்பட மதிப்புமிக்க பொருட்களை ஏற்றிச்சென்ற இந்தக் கப்பலை பிரிட்டன் படைகள் மூழ்கடித்தன.
2015இல் இந்தக் கப்பலை கொலம்பிய கடற்படையினர் கண்டுபிடித்தனர். தற்போது இந்தக் கப்பலின் அடையாளம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
புதையலுக்கு உரிமைகோரும் 4 நாடுகள்..
இந்நிலையில், இந்தக் கப்பலில் இருக்கும் பொருட்கள் யாருக்குச் சொந்தம் என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. கொலம்பிய அரசோ இந்தக் கப்பலை மீட்டு அருங்காட்சியகத்தில் வைக்க திட்டமிட்டு வருகிறது. ஆனால், ஸ்பெயின் அரசோ, இந்தக் கப்பல் தங்கள் நாட்டுக்குச் சொந்தமானது என்று உரிமை கோருகிறது. பெரு நாடோ, கப்பலில் உள்ள நாணயங்கள் தங்கள் நாட்டு மக்களை அடிமையாக்கி உருவாக்கப்பட்டவை. எனவே புதையலில் தங்களுக்கும் பங்கு உண்டு என்று கூறுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த கடல் ஆய்வு நிறுவனம் ஆர்மடா, இந்தக் கப்பலை கண்டுபிடித்ததில் தங்கள் பங்கே முதன்மையானது. தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று உரிமை கோருகிறது. பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கப்பல், 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது.