WTC 2025 | இரண்டு தலைசிறந்த கேப்டன்கள்.. உடையப்போகும் ஒரு முறியடிக்கப்படாத சாதனை! யார் கை ஓங்கும்?
100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கிரிக்கெட் அணியாக இருந்தாலும் ஐசிசி கோப்பை வெல்வது என்பது தென்னாப்பிரிக்கா அணிக்கு கொடுங்கனவாகவே இருந்துள்ளது. க்ரீம் ஸ்மித், ஜாக் காலீஸ், டோனி கிர்க், ஆலன் டொனால்ட், ஷான் பொல்லாக், ஏபிடி வில்லியர்ஸ், ஹசிம் ஆம்லா, டேல் ஸ்டெய்ன், ஃபேப் டூபிளெஸி, கிப்ஸ், இண்டினி போன்ற தலைசிறந்த வீரர்கள் தென்னாப்பிரிக்கா அணியிலிருந்து உருவெடுத்தாலும் அவர்களால் கூட ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை. மாறாக கண்ணீரோடே ஒவ்வொரு தோல்வியின்போதும் நாடு திரும்பினர்.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் 1992, 1999, 2007, 2015, 2023 என ஐந்துமுறை அரையிறுதியிலும், ஐசிசி 2024 டி20 உலகக்கோப்ப இறுதிப்போட்டியிலும் என 6 முறை நாக் அவுட் போட்டிகளில் தோற்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி ‘சோக்கர்ஸ் அணி’ என்ற அவப்பெயரோடு வலம்வருகிறது.
இந்த சூழலில் 1998 நாக் அவுட் கோப்பையை வென்றதற்கு பிறகு 27 வருடம் கழித்து கோப்பை வெல்லும் தருவாயில் 2025 WTC இறுதிப்போட்டியில் விளையாடிவருகிறது தென்னாப்பிரிக்கா. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 282 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிவரும் தென்னாப்பிரிக்கா அணி கோப்பை வெல்ல இன்னும் 69 ரன்களே மீதமுள்ளன. கையில் 8 விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்கா கொண்டிருக்கும் நிலையில், வெற்றி 90% சதவீதம் அவ்வணிக்கே சாதகமாக இருக்கிறது.
2 சிறந்த கேப்டன்களில் யாருக்கு மகுடம்?
பாட் கம்மின்ஸ் - ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் இதுவரை எத்தனையோ தலைசிறந்த பவுலர்கள் இருந்திருந்தாலும், பாட் கம்மின்ஸுக்கு முன்புவரை ஒரு வேகப்பந்துவீச்சாளர் கூட டெஸ்ட் அணியை வழிநடத்தியதில்லை. அந்த பெருமையை பெற்ற முதல் வீரராக பாட் கம்மின்ஸ் மாறிய நிலையில், தலைமைக்கு தான் சரியான நபர்தான் என்று நிரூபித்து காட்டிய பாட் கம்மின்ஸ் ‘2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை’ என இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று, ஐசிசி ஃபைனலில் தோல்வியே காணாத கேப்டனாக வலம்வருகிறார்.
டெம்பா பவுமா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த டெஸ்ட் கேப்டன் என்றால் அது க்றீம் ஸ்மித் தான். இளம்வயதில் தென்னாப்பிரிக்காவின் கேப்டன்சி பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஸ்மித், ஸ்மித்திற்கு முன்பு ஸ்மித்திற்கு பின்பு என தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டை மாற்றியமைத்தார். அப்படியான ஒரு கேப்டன் கூட செய்யாத சாதனையை டெம்பா பவுமா தன் கையில் வைத்துள்ளார். டெஸ்ட் கேப்டனாக முதல் 9 போட்டியில் 8 வெற்றிகளை பதிவுசெய்த ஒரே கேப்டனாக பவுமா வரலாற்றில் தன்பெயரை பொறித்துள்ளார். 2023-ல் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட டெம்பா பவுமா, 9 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை வழிநடத்தி அதில் 8 வெற்றிகள், 1 சமன் என தோல்வியே காணாமல் வலம்வருகிறார்.
யாருக்கு வெற்றி? யாருக்கு கோப்பை? - இரண்டு தலைசிறந்த கேப்டன்களில் யாருக்கு கோப்பை என்ற மகுடம் சேரப்போகிறது என்று இன்றைய நாள் தெரிந்துவிடும். கம்மின்ஸை விட 27 ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருக்கும் டெம்பா பவுமா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றால் ரசிகர்கள் அதிகம் மகிழ்ச்சி அடைவார்கள். சிறந்த கிரிக்கெட்டை விளையாடும் அணி இறுதிப்போட்டியில் கோப்பையை தட்டிச்செல்லும்.