தவெக நடத்திய ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டு அரசியலில் மிக முக்கியமான ஒன்று.. ஏன்?
திமுக ஆட்சி ‘சாரி மா மாடல் ஆட்சி’ ஆகிவிட்டதாக விமர்சித்துள்ள தவெக தலைவர் விஜய், தவெகவுக்கு அஞ்சி ஒன்றிய ஆட்சிக்கு பின்னால் திமுக ஒளிந்துகொள்வதாக சாடியுள்ளார். காவல் நிலைய மரணங்களை கண்டித்து சென்னையில் தவெக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய விஜய், “இளைஞர் அஜித்குமார் குடும்பத்துக்கு கொடுத்த நிவாரணம் போல, இதே ஆட்சியில் நிகழ்ந்த 24 இளைஞர்களின் குடும்பங்களுக்கும் நிவாரணம் கொடுங்கள். சாத்தான்குளம் சம்பவத்தை சிபிஐ-க்கு மாற்றியபோது, அது தமிழ்நாட்டு காவல்துறைக்கு அவமானம் என்றீர்கள். இன்று நீங்கள் உத்தரவிட்டிருப்பதற்கு பெயர் என்னங்க சார்? இப்போதும் அதே சிபிஐ-தானே? ஏன் நீங்கள் அங்கே போய் ஒளிந்து கொள்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
விஜயின் போர் முழக்கம்
தவெக நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “விஜயின் போர் முழக்கம் என்றுதான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். aggressive அரசியலை நோக்கி நகர்கிறார். காவல் நிலைய மரணங்கள் எந்த ஆட்சியில் நடந்தாலும் அது கண்டிக்கத்தக்கவைதான். சிவில் சமூகம் இதை எதிர்த்துதான் வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அது ஒரு கருப்பு ராஜ்ஜியம்.
இன்னும் தெளிவு வேண்டும்
ஆனால் விஜய்க்கு SIT,CIA மற்றும் உள்ளூர் போலீஸ் விசாரணை போன்றவற்றில் இன்னும் தெளிவு இல்லையோ என நான் சந்தேகப்படுகிறேன். ஏனென்றால், நடப்பு விசாரணையே முதலில் நீதிமன்றத்தின் கண்காணிப்பில்தான் நடக்கிறது. அதாவது சிபிசிஐடி விசாரணையே உயர்நீதிமன்றம்தான் உத்தரவிட்டது. அதன்பிறகு முதலமைச்சர் அதை சிபிஐ விசாரணையாக மாற்றி உத்தரவிட்டார். அதன்பிறகு, ‘அஜித்குமார் மரணத்தை மட்டும் சிபிஐ விசாரிக்க உத்தரவிடவில்லை. அதோடு சேர்த்து, சம்பந்தப்பட்ட பெண் கொடுத்த புகார் தொடர்பாகவும் விசாரிக்க உத்தரவிடுகிறோம்; இரண்டுமே நேரடியாக நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கின்றன’ என்று சொல்லித்தான் அடுத்த வாய்தா தேதியே போடப்பட்டிருக்கிறது. எனவே தற்போது நடந்துவரும் சிபிஐ விசாரணையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில்தான் நடக்கிறது. ஆனாலும், காவல்நிலைய மரணங்களுக்காகவும், அவற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க வேண்டுமென்பதற்காகவும் விஜய் குரல் கொடுத்திருப்பது ஆரோக்கியமான அரசியலாகத்தான் பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்திய அரசியலிலேயே முதல்முறை
மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் தவெக ஆர்ப்பாட்டம் தொடர்பாகப் பேசுகையில், “லாக்கப் மரணங்கள் தொடர்பாக அரசியல் கட்சியொன்று போராட்டத்தை முன்னெடுத்தது வரவேற்கத்தக்க ஒன்று. இந்தியா முழுவதிலும் எத்தனையோ லாக்கப் மரணங்கள் நடக்கின்றன. இதுவரை ஒரு அரசியல் கட்சி கூட போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியதில்லை என்பதும் மிக முக்கியமான விஷயம். அப்படிப்பார்க்கையில், இந்தியாவிலேயே முதல்முறையாக அரசியல் கட்சியொன்று லாக்கப் மரணங்கள் தொடர்பாக போராட்டத்தை முன்னெடுத்தது வரவேற்கத்தக்க ஒன்று. அரசியல் கட்சிகள் போராடாததன் காரணம், காவல்துறையின் தயவு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேவை.. காவல்துறையின் தயவு இல்லாமல் ஆட்சியே நடத்த முடியாது. சுருக்கமாக அரசினுடைய கையாளாக இருக்கக்கூடிய ஒரு நிறுவனம் என்றால் அது காவல்துறைதான். அப்படியிருக்கையில், தவெகவின் போராட்டம் முக்கியமான ஒன்று.
பாஜகவை தொடாமல் பேசியது வியப்பு
லாக்கப் மரணங்களில் அரசியல் ரீதியாக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியும்? நிர்வாக ரீதியாக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியும்? என்ற கேள்விகள் நம்முன் இருக்கின்றன. இந்த விஷயங்களில் திமுக வெற்றி கண்டிருப்பதாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், இதையும் தாண்டி மிகப்பெரிய கேள்விகள் நம்முன் இருக்கின்றன.
காவல்துறை சீர்திருத்தங்கள் (Police reforms) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கீழ் இருக்கிறது. ஆனால், பாஜகவை எந்த இடத்திலும் விஜய் தொடாமல் பேசியிருப்பதுதான் வியப்பளிக்கிறது. உதாரணத்திற்கு, உத்தரபிரதேசத்தில் நடக்கும் லாக்கப் மரணங்கள் போன்று உலகத்தில் எங்குமே நடக்கவில்லை. அப்படியிருக்கும்போது விஜய் அமித்ஷாவைப் பற்றி பேசாமல், காவல்துறை சீர்திருத்தங்கள் பற்றி பேசாமல் மு.க.ஸ்டாலின்தான் இங்கு இருப்பவர்கள் எல்லாரையும் கொன்று போடுகிறார் எனும் தொணியில் பேசுவது நிச்சயமாக ஏற்கத்தக்க விஷயம் கிடையாது” என்று தெரிவித்தார்.
Sorry என்பதை வைத்து அரசியல் செய்வதா?
இந்த விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பேசுகையில், “திருப்புவனத்தில் நடந்தது நிச்சயமாக கண்டிக்கத்தக்க ஒன்று. காவல்துறையினர் நிகழ்த்தியது படுகொலை. இதற்கு ஆட்சியிலிருக்கும் ஸ்டாலின்தான் காரணம் என சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடிகிறது. இதில் எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களில் நான் எவ்வித தவறையும் காணவில்லை. ஆனால், அதன்பிறகு எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளையும் நீங்கள் பார்க்க வேண்டும். தமிழக காவல்துறையினர் இதைச் செய்திருக்கிறார்கள்; அதை தமிழக காவல்துறையே விசாரித்தால் நன்றாக இருக்காது. எனவே சிபிஐ விசாரணை கொண்டுவந்திருக்கிறார்கள். சிபிஐயும் விசாரித்து வருகிறது. இதில் நீதி நிலைநாட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு நமக்கு இருக்கிறது. முதல்வரும் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசியிருக்கிறார்.. Sorry என்று ஆங்கிலத்தில் சொல்வதும் தமிழில் வருத்தம் என சொல்வதும் ஒன்றுதான். ஆனால், இதை வைத்துக்கொண்டு அரசியல் செய்வது எந்த விதத்தில் சரி என்று எனக்குத் தெரியவில்லை.
எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்டாரா?
திமுக ஆட்சியில் 24 மரணங்கள் நிகழ்ந்திருக்கிறது என்று சொல்லி 24 குடும்பத்தினரிடமும் சாரி சொல்வாரா என விஜய் கேட்கிறார். ஆனால், லாக்கப் மரணங்கள், நீதிமன்ற காவலில் இருக்கும்போது நிகழும் மரணங்கள் எல்லாம் இன்று நேற்று நடப்பவையா? 2011 முதல் 2021 வரை நடந்த லாக்கப் மரணங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விஜய் என்றைக்காவது பேசுவாரா? ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்டாரா?” எனத் தெரிவித்தார்.
திருப்புவனத்தில் அஜித்குமாரின் காவல் நிலைய மரணம் தமிழக அரசையும், காவல்துறையையும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில்தான் தவெக தலைவர் விஜய் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார். ஆனால், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் பலரும், காவல் துறை மரணங்களைப் பொது விவாதத்துக்கு கொண்டுவந்ததற்காக தவெகவின் முயற்சியை வரவேற்கிறார்கள். அதேவேளை மத்திய அரசை எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டதாகவும் சாடுகிறார்கள். முடிவாக, தமிழகத்தில் காவல் துறை சீர்திருத்தமும், அதில், மாநில மற்றும் மத்திய அரசுகளின் பொறுப்புகளும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. இது ஆரோக்கியமான, ஜனநாயக முன்னேற்றத்துக்கான முக்கிய கட்டமாகவே பார்க்கப்படுகிறது.