” 60 முதல் 70 நாட்கள் வரவேண்டியிருக்கும் என்று சொன்னாங்க..ஆனா..” - கங்கனா ரணாவத்!
இந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை கங்கனா ரணாவத். இவர் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்டு மண்டி தொகுதி எம்பியாக தேர்வானார் கங்கனா. இந்நிலையில், தன்னுடைய இந்த ஓராண்டு கால அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்து அவர் பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அரசியல் என்பது அதிக செலவு கொண்ட ஒரு பொழுதுபோக்கு எனவும், அரசியலை முழு நேர தொழிலாக கொள்ள முடியாது குறிப்பாக நேர்மையான தலைவர்களால் அது நிச்சயம் முடியாது என தெரிவித்திருக்கிறார். மேலும், சாலை சேதடைந்துவிட்டது கால்வாய் உடைந்து விட்டது என மக்களிடம் இருந்து புகார்கள் தெரிவித்து இழப்பீடு கேட்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
மேலும், அவர் கூறியது என்ன விரிவாக பார்க்கலாம்:
அதில், '' நான் எம்.பி பதவியில் இந்த அளவுக்கு வேலை இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவில்லை. எனக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தபோது பாராளுமன்றத்திற்கு 60 முதல் 70 நாட்கள் வரவேண்டியிருக்கும் என்று சொன்னார்கள். மற்ற நாட்களில் எனது வேலையை பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். அது எனக்கு சரியாக பட்டது.
ஆனால், இப்போது எம்.பி பதவி அதிக வேலை கொண்டதாக இருக்கிறது. எனக்கு அது நன்றாகப் புரிகிறது. நான் அதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன் என்று சொல்ல முடியாது. இது மிகவும் வித்தியாசமான வேலை, சமூக சேவை போன்றது. இது எனது பின்னணி அல்ல. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. நான் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியிருக்கிறேன், ஆனால் அது வேறு. ஆனால் நான் எம்.பி.யான பிறகு மக்கள் பஞ்சாயத்து அளவிலான பிரச்னைகளுடன் என்னிடம் வருகிறார்கள்.
நான் அரசியலை ரசிக்கிறேன் என என்னால் கூற முடியாது அது ஒரு சமூக சேவை, இதற்கு முன்பு நான் மக்களுக்கு சேவை செய்வேன் என நினைத்தது கிடையாது ஆனால் தற்போது செய்கிறேன் என கூறியிருக்கிறார் . நான் என்னுடைய தொகுதிக்கு செல்லும் போதெல்லாம் சாலை சேதமடைந்துவிட்டது; கால்வாய் உடைந்து விட்டது என மக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன, இது மாநில பிரச்சினை எம்.எல்.ஏவிடம் கூறுங்கள் என்றால் உங்களிடம் தான் பணம் இருக்கிறதே நீங்கள் சரி செய்யுங்கள் என மக்கள் கூகிறார்கள். எனவே அரசியல் வாழ்க்கை என்பது மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது.
நிவாரண மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மாநில அரசுதான் செய்ய வேண்டும். ஒரு எம்.பி. என்ற முறையில், நிலைமை குறித்து பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் மட்டுமே நான் தெரிவிக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.