நாட்டாகுடி ஊரில் வசிக்கும் ஒரே ஒரு முதியவர்
நாட்டாகுடி ஊரில் வசிக்கும் ஒரே ஒரு முதியவர்pt

ஊரே காலியான சோகம்.. தனியொரு ஆளாக வசிக்கும் முதியவர்! சோகப் பின்னணி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே, மக்கள் அனைவரும் ஊரை காலி செய்து விட்ட நிலையில், ஒரே ஒரு முதியவர் மட்டும், பிறந்த மண்ணை பிரிய முடியாமல், ஊரிலேயே வசித்து வருகிறார். ஊரே காலியான நிலையின் பின்னணி குறித்து பார்க்கலாம்...
Published on

சிவகங்கை-மதுரை நெடுஞ்சாலையில்,15 கிலோ மீட்டர் தொலைவில்அமைந்திருக்கிறது நாட்டாகுடி கிராமம். ஊர் எல்லையில் குளம், குளக்கரையில்அய்யனார் கோயில், ஊர் மந்தை, ஊருக்குள்ளே ஓர் அம்மன் கோயில், சின்னச்சின்ன வீதிகள், ஓட்டு வீடுகள் என ஒரு கிராமத்துக்கான அத்தனை அம்சங்களுடன் இருக்கிறது நாட்டாகுடி.

நாட்டாகுடி
நாட்டாகுடி

கிராமத்தின் அழகை ரசிக்கும் நமக்கு, உள்ளுக்குள்ளே நடுக்கமும் தோன்றுகிறது. காரணம், நாட்டாகுடிகிராமத்தின் அத்தனை வீட்டிலும் இப்போது யாரும் வசிக்கவில்லை. ஜடைவிழுந்த முடியுடன் காணப்படும் ஒரே ஒருமுதியவர் மட்டும் அங்கே வசிக்கிறார். நாட்டாகுடியில் உள்ள மாரியம்மன்கோயில் பூசாரி தங்கராஜ் தான்அவர். ஊரே வெறிச்சோடி, வீடுகள்அனைத்தும் அனாதையாக கிடக்க என்ன காரணம் என்று விசாரித்தோம்.

என்ன காரணம்? ஏன் ஒருவர் மட்டும் இருக்கிறார்?

வானம் பார்த்த பூமியான நாட்டாகுடிக்கு, குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என்றும், உப்பாற்றில் ஊற்று பறித்து தண்ணீர் சேமித்ததாகவும் கூறினார் தங்கராஜ். உப்பாற்றில் இருந்து தண்ணீர்வரும் கால்வாயும் தூர்ந்து போனதால், வேளாண்மை பொய்த்து விட்டதாக கூறினார். வாழ்வாதாரம் இல்லாததால், மக்கள் அனைவரும் படிப்படியாக வெளியேறியதாககூறினார்.

மேலும், 10 மாதம் குழந்தையை சுமக்கும் தாய், அதை சுமையாக நினைத்தது இல்லை. வாழ்ந்த ஊரை விட்டு எப்படி போவது? வாழ்வதற்கு அர்த்தம் வேண்டும், எது நடந்தாலும் இந்த ஊரிலேயே நடக்கட்டும் என்றும் கூறுகிறார்.

ஊரைவிட்டு வெளியேறிய பெண்மணி ஒருவர் கூறுகையில், “எந்த நம்பிக்கையில் நாங்கள் இங்கே தங்கியிருப்பது? அரசு எங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்க வேண்டும். வெளியேறிச் சென்றவர்களை மீண்டும் வரவழைக்க வேண்டும்” என வேதனை தெரிவிக்கிறார்.

கடந்த 22ஆம் தேதி, கூலித் தொழிலாளி சோனைமுத்து தலை துண்டிக்கப்பட்டு,கொடூரமாக கொல்லப்பட்டது மீதமிருந்த மக்களை அதிர வைத்துள்ளது. வாழ்வாதாரம் இல்லாததோடு, பாதுகாப்பின்மையும் தலைதூக்கியதால் நாட்டாகுடியே காலியாகிவிட்டது.

குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்காத நாட்டாகுடி இளைஞர்களுக்கு பெண் கிடைக்காத நிலை இருந்ததாக வேதனை தெரிவிக்கிறார் அந்த முதியவர். தாம் பிறந்து வளர்ந்த ஊர், இப்போது ஜனங்களே இல்லாமல், ஒட்டுமொத்தமாக காலியாகி உயிரின்றி காணப்படும் வேதனையில், சொந்த ஊரின் வீதிகளிலும் காட்டிலும் மேட்டிலும் ஒற்றை ஆளாக நடந்து திரிகிறார் முதியவர் தங்கராஜ். ஒரு நாள் அனைவரும் ஊர் திரும்புவார்கள் என்றும் கண்களில் ஏக்கத்துடன் காத்திருக்கிறார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com