அண்ணாமலையால் கூட்டணிக்குக் குழப்பம்? டெல்லிக்குப் போன செய்தி.. அலர்ட் ஆன அண்ணாமலை.. என்ன நடந்தது?
'என்னைப் பற்றி பேச எடப்பாடிக்கு எந்த அதிகாரமும் கிடையாது' என்று பேசிவந்த அண்ணாமலை, 'எடப்பாடியை முதல்வராக்குவோம்' என்று முற்று முழுதாக மாறி இருக்கிறார். தமிழக அரசியல் களத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகி 2 மாத காலம் ஆன நிலையில், தலைமை கைகோர்த்தாலும், தொண்டர்கள் ஒட்டாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில், அண்ணாமலையின் மனமாற்றத்திற்கு இங்கிருந்து டெல்லிக்குப்போன செய்தி ஒன்று முக்கியக் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி தலைமைக்கு போன செய்தி என்ன? அலர்ட் ஆனாரா அண்ணாமலை? என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், 2023 வாக்கில் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு அது முறிவில் சென்று முடிந்தது. அதிமுக மற்றும் பாஜகவின் தலைமைக்கு இடையே நடைபெற்ற வார்த்தை மோதல் இதற்கு பிரதான காரணமாக இருந்தது. குறிப்பாக, அண்ணா, ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்தார். இப்படியாக கூட்டணி முறிவு ஏற்பட்டதில், அதிமுக - பாஜக இரண்டுமே நாடாளுமன்ற தேர்தலில் தனித்தனி கூட்டணியை அமைத்து போட்டியிட்டன. முடிவு தோல்விதான்.. இந்நிலையில்தான், அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகி, தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதில், கூட்டணியின் அறிவிப்பின்போதே அண்ணாமலையின் மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டது.
கூட்டணி அமைவதில் அவர் முட்டுக்கட்டையாக இருப்பாரோ என்று யோசித்த டெல்லி தலைமை, மாநில தலைவரை மாற்றியதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். அதிமுகவில் இருந்து வந்த.. அதிமுகவோடு நெருக்கம் காட்டும் நயினாரே நல்ல சாய்ஸ் என்று அவருக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டது. எனினும், கூட்டணி ஒன்று சேர்ந்தாலும், கூட்டணிக்கு தமிழக தலைமையாக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் நிகழ்ச்சிகளை புறக்கணித்தே வந்தார் அண்ணாமலை.
மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தை கோவையில் வைத்தே துவங்கினார் எடப்பாடி பழனிசாமி. அந்த தொடக்க விழாவில், கூட்டணி கட்சிகள் சார்பில், நயினார், எல்.முருகன், வானதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனாலும், 2024 மக்களவைத் தேர்தலில், கோவையில் போட்டியிட்ட அண்ணாமலை, அந்த நிகழ்ச்சியில் ஆப்செண்ட். அதே நேரம், எடப்பாடியின் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். இப்படியே சென்ற நிலையில்தான், சமீபத்திய அவரது பேச்சுகள் தொண்டர்களிடையே கவனத்தை ஈர்த்ததோடு புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னதாக, அமித்ஷா தலைமையில் நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில், முக்கிய விடயத்தை கூறினார் அண்ணாமலை. 2026ல் தமிழ்நாட்டில் அமையப்போவது கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா பேச, எடப்பாடியை முதல்வராக்குவதே எண்டிஏ தொண்டர்களின் வேலை என்று முழங்கினார். அதோடு, கடந்த சில நாட்களாக வார்த்தைக்கு வார்த்தை எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என்று விளிக்கிறார்.
முன்பே சொன்னதுபோல, எடப்பாடியின் நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்தவர், மூப்பனார் நினைவேந்தல் நிகழ்ச்சியின்போது, எடப்பாடியுடன் கைகோர்த்தார். எடப்பாடியும், அண்ணாமலையும் ஒரே வரிசையில் அருகருகே அமர்ந்தனர். கண்கள் பணித்தன. இதயம் இனித்தது என்கிற கதையாக அண்ணாமலையின் இந்த திடீர் மாற்றம் குறித்து விவரம் அறிந்தவர்களிடம் விசாரித்தோம்.
பாஜகவின் தமிழக தலைமை மாற்றப்பட்டது.. அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது என்று முக்கியமான தருணங்களில், தனி டீமை வைத்து கூட்டணிக்குள் சிக்கலை உருவாக்கும் விதமாக அண்ணாமலை செயல்பட்டதாகவும், இந்த செய்தி டெல்லி தலைமையின் காதிற்கு சென்றதாகவும் சொல்லப்படுகிறது. அண்ணாமலையிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக பாஜகவுக்குள்ளாகவே கோஷம் எழுந்ததை பார்க்க முடிந்தது. அதோடு, நயினாரின் தலைமையை கேள்விக்குறியாக்கும் விதமாகவும் அவரது வார் ரூம் செயல்பட்டதாக, நயினார் அபிமானிகளால் குற்றம்சாட்டப்படுகிறது.
இப்படியாக, அண்ணாமலையால் கூட்டணிக்குள் குழப்பம் உண்டாகுமோ என்று டெல்லி தலைமை யோசித்து வந்த விஷயம், எப்படியோ அண்ணாமலையின் காதுகளுக்கு வந்துள்ளது. இதன் காரணமாகவே, தன்னால் கூட்டணிக்குள்ளோ, கட்சிக்குள்ளோ எந்த குழப்பமும் இல்லை என்று உணர்த்தும் விதமாக அண்ணாமலை அலர்ட் ஆனதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். எடப்பாடியை அண்ணன் என்று விளிப்பது.. முதல்வராக்குவோம் என்று முழங்குவது எல்லாம், இதன் வெளிப்பாடுதான் என்கின்றனர் கமலாலய வட்டாரத்தினர்.
அதே சமயம், சமீபத்தில் தமிழகம் வந்த நிர்மலா சீதாராமன், கிண்டியில் வைத்து தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அண்ணாமலை பங்கேற்காத அந்த கூட்டத்தில், அண்ணாமலையின் வார் ரூம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், யாருக்கும் தனி மனித துதி பாடக்கூடாது என்று அண்ணாமலை குறித்து மறைமுகமாக பேசியதாகவும் சொல்லப்படுகிறது. பாஜகவில் தலைமை என்பது ஒருவருக்கானது இல்லை.. யார் வேண்டுமானாலும் மாறுவார்கள்.. கட்சிக்கே உழைக்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை எச்சரித்ததாகவும் சொல்கின்றனர் கமலாலய வட்டாரத்தை நன்கறிந்தவர்கள். ஆக, 2026ஐ இலக்காக வைத்து உருவான அதிமுக - பாஜக கூட்டணி, எந்த நேரத்திலும் சிதைந்துவிடக்கூடாது என்பதில் பாஜக தேசிய தலைமை கவனமாக இருக்கிறது. தன்னால் எந்த பிரச்னையும் வராது என்பதை உறுதி செய்ய அண்ணாமலையும் மெனக்கெடுவது பட்டவர்த்தனமாக தெரிகிறது. 2026 களம் அதிமுக -பாஜக கூட்டணிக்கு கைகொடுக்கமா என்பதை 7 மாத காத்திருப்பே உணர்த்தும்.