ஆசிரியர் பணியில் தொடர ’டெட்’ தேர்வு கட்டாயம்.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யாருக்கு பாதகம்?
மன்மோகன்ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட விசயங்கள் பல தரப்பினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன..
ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற அல்லது பதவி உயர்வு பெற, ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி தீபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஓய்வுபெறும் வயதை அடைய 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் பணியில் தொடரலாம் என்றும், ஒருவேளை 5 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக, அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும் டெட் தேர்வை கட்டாயமாக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து ஆசிரியர் கூட்டமைப்புகள் பலவும், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தன. அதேபோல், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மனுக்கள் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யாருக்கு பாதகம்?
தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா, மன்மோகன் அமர்வு, ஆசிரியர்கள் அவர்களது பணியை தொடர அல்லது பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என தெரிவித்திருக்கிறது. "கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் இருந்து மொழி, மதவாரி சிறுபான்மை பள்ளிகளுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றைக் களைய அரசியல் சாசன அமர்வை ஏற்படுத்தி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறோம். அதுவரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை ஏற்றுத்தான் நடக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறது.
* ஓய்வுபெறும் வயதை அடைய 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் பணியில் தொடரலாம். அதேநேரம் 5 ஆண்டுகளுக்கும் குறைவான பதவிக்காலம் கொண்ட ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற விரும்பினால் கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
* 5 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம்.
* தேர்ச்சி அடையாவிட்டால் ஆசிரியர் பணியில் இருந்து வெளியேறலாம் அல்லது கட்டாய ஓய்வு பெறலாம். அவர்களை ஓய்வு பெற்றவர்களாகக் கருதி ஓய்வூதியப் பலன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
என்ற விசயங்களையும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
மேலும், சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தகுதி தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா? அது அவர்களின் உரிமைகளை பாதிக்குமா? என்பது குறித்து விசாரிக்கவும் உயர் அமர்வுக்கு இவ்வழக்கை பரிந்துரைத்து நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.
முன்னதாக, சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர்நீதிமன்றத்தின் கடந்த கால தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை, நடப்பாண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு திரும்பப் பெற்றிருந்தது.
இந்தசூழலில் சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வை அரசு கட்டாயப்படுத்துமா என்ற கேள்வியும் குழப்பமும் எழுந்துள்ளது. அதேவேளையில் டெட் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணி பெற்றவர்களும், பதவி உயர்விற்கு டெட் தேர்வை திரும்ப எழுதவேண்டுமா என்ற குழப்பவும் ஏற்பட்டுள்ளது. ஒருதரப்பு 2011-க்கு முன் ஆசிரியர் பணி பெற்றவர்களுக்கு தான் பிரச்னை என கூறிவரும் சூழலில், ஒரு தரப்பினர் 2011-க்கு பின் பணிநியமனம் பெற்றவர்களும் டெட் தேர்வு எழுதுவது கட்டாயம் என்றால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசியிருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எக்காரணம் கொண்டும் தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது, யாரும் கவலை பட வேண்டாம் என்றும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக வந்த உடன் அதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.