மூளையை உண்ணும் அமீபா | எதனால் பரவுகிறது? தற்காத்துக்கொள்வது எப்படி?
மூளை திண்ணும் அமீபா என்றால் என்ன? இது எவ்வகையான பாதிப்பை ஏற்படுத்துகிறது? இதன் அறிகுறிகள் என்ன? தற்காத்துக் கொள்வது எப்படி?
இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளங்களுக்கு பெயர்போன கேரளாவில் கடந்த சில வாரங்களில் மட்டுமே மூளையை தின்னும் அமீபாவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் மூன்று மாத குழந்தை ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூளையை திண்ணும் அமீபா என்றால் என்ன?
கேரளாவில் பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல் பாதிப்பை தொடர்ந்து, தற்போது இந்த மூளையை தின்னும் அமீபா இறப்புகள் பொதுமக்களிடையே அச்சுறுத்தலை உண்டாக்கி வருகின்றன. இந்தத் தொற்று, வலுவான பொதுசுகாதார அமைப்புக்குப் பெயர் பெற்றிருக்கும் கேரளாவிலும் இன்னும் வலுவான கட்டமைப்பு வேண்டுமென்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
அமீபிக் மெனின்கோஎன்செபலைட்டிஸ் (Amoebic meningoencephalitis) எனப்படும் இவ்வகையான நோய்த்தொற்று, பொதுவாக “மூளைத் தின்னும் அமீபா” என்று அழைக்கப்படும் நீக்ளேரியா ஃபோவ்லெரி (Naegleria fowleri) எனும் அமீபாவால் ஏற்படுகிறது. குறிப்பு: இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்றல்ல.
மாசடைந்த நீரில் இவ்வகையான அமீபா காணப்படலாம். அத்தகைய நீரில் நீந்தும்போதோ அல்லது குளிக்கும்போதோ மூக்கின் வழியாக உடலுக்குள் நுழையும் இந்த அமீபா மூளைக்குச் சென்று கடுமையான அழற்சி ஏற்படுத்தி, மூளைத் திசுக்களை அழிக்கத் தொடங்குகிறது.
1965-ல் ஆஸ்திரேலியாவில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்ட இந்த அமீபா தொற்று, பின்னர் உலகம் முழுவதும், குறிப்பாக வெப்பமான பகுதிகளில் அதிகம் காணப்பட்டது. கேரளாவில் முதல் மரணம் 2016-இல் பதிவான நிலையில், 2024ல் அதுவரை இல்லாத அதிகமானோர் இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டனர்.
உலகளாவிய மரண விகிதம் 97% என்று இருந்தாலும், கேரளாவின் தீவிர சிகிச்சை முறைகள் மற்றும் மில்டெஃபோசின் (Miltefosine) என்ற பராசிட்டி எதிர்ப்பு மருந்தின் பயன்பாட்டின் காரணமாக 24 பேரைக் காப்பாற்ற முடிந்தது.
அதிகரித்து வரும் வெப்பநிலை நீக்ளேரியா ஃபோவ்லெரி சிறப்பாக வளர்வதற்கான சூழலை உருவாக்குகிறது. இந்த அமீபா தொற்று குளங்களைத் தாண்டி கிணறு, நீர்தொட்டி, மண், தூசி போன்றவற்றிலும் கண்டறியப்படுவது, வளிமண்டல வெப்பமயமாதலால் நுண்ணுயிர் சூழலில் நிகழும் மாற்றங்களை வெளிக்காட்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அறிகுறிகள்
இந்த அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 - 12 நாட்களுக்குள் அறிகுறிகள் தோன்றலாம் எனத் தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். அறிகுறியாக, காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படலாம்.
மேலும், உடலில் இந்த அமீபாவின் பாதிப்பு அதிகரிக்கும் போது கழுத்து இறுக்கமாக இருப்பது, வலிப்பு நோய், குழப்பம் அல்லது பிரமைகள் போன்றவை ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மிக மிக அதிகமான இறப்புவிகிதம் கொண்டதாக இவ்வகை அமீபா அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எப்படி தற்காத்து கொள்ளலாம்?
நீர்நிலைகளின் பாதுகாப்பு தன்மையை அந்தந்த பகுதிகளில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
அமீபா தொற்றின் ஆரம்ப கால அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனையை அணுகி அது குறித்த பரிசோதனையை மேற்கொள்வது இப்பாதிப்பிலிருந்து மீள வாய்ப்புள்ளது.
நோஸ் கிளிப் (nose clip) பயன்படுத்தவும் அல்லது தொற்று பரவும் காலங்களில் நீர்விளையாட்டுகளை தவிர்க்க வேண்டும்.
நீச்சல் குளம் போன்றவற்றில் போதுமான அளவு குளோரினேஷன் செய்ய வேண்டும். குளோரினேஷன் அளவானது 2 PPM-க்கு மேல் இருக்க வேண்டும். அப்படி உள்ள இடங்களில் இவ்வகையான அமீபா உயிர்வாழ்வது இல்லை.
ஏரி, குளம், குட்டை தேங்கியுள்ள நீர், சுத்தம் இல்லாத பாதுகாப்பற்ற நீர்நிலை போன்றவற்றில் குளிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்..
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்
இந்நிலையில் தமிழ்நாட்டில் இந்த நோய் பரவல் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் நட்சத்திர விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நீச்சல் குளங்களில் நாளொன்றுக்கு இரண்டு முறை தண்ணீரை மாற்ற வேண்டும், குளோரின் தெளித்து சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்பது போன்ற வழிமுறைகளை பின்பற்ற நீச்சல் குள உரிமையாளர்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த மூளைத் தின்னும் அமீபா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவாது என்பதால் பொதுமக்கள் தேவையின்றி அச்சம் அடைய வேண்டாம். ஆனால் நோய் வந்த பிறகு மருந்து உட்கொள்வதை விட, வருமுன் காப்பதே சிறந்தது என்பதை நாமும் உணர்ந்து கொண்டால் நல்லது.