சர்வதேச டி20 கிரிக்கெட்டுக்கு குட்-பை.. ஆஸ்திரேலியா ஜாம்பவான் மிட்செல் ஸ்டார்க் அறிவிப்பு!
ஆஸ்திரேலியா பந்துவீச்சின் ஆணிவேராக இருந்த மிட்செல் ஸ்டார்க் 2021 டி20 உலக்கோப்பை வென்ற கையோடு டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட்டானது டென்னிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன், க்ளென் மெக்ராத், பிரெட்லீ, மிட்செல் ஜான்சன் போன்ற தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளது. அந்தவரிசையில் 2010-ம் ஆண்டு மிட்செல் ஸ்டார்க் என்ற தரமான முத்தை கண்டெடுத்தது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியா அணிக்காக 2010-ல் அறிமுகமான மிட்செல் ஸ்டார்க், தன்னுடைய அபாரமான பந்துவீச்சு திறமையால் மற்ற ஜாம்பவான் பந்துவீச்சாளர்களிடமிருந்து தனித்து விளங்கினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக (15 பந்தில்) 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர், 100வது போட்டியில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர், பந்துகள் அடிப்படையில் அதிவேகமாக 200, 250, 300 மற்றும் 350 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலர் என்ற பல்வேறு உலக சாதனைகளை தன்பக்கம் வைத்துள்ளார்.
2015 ஒருநாள் உலகக்கோப்பை, 2023 WTC கோப்பை, 2021 டி20 உலகக்கோப்பை என வென்றிருக்கும் மிட்செல் ஸ்டார்க், தற்போது டி20 வடிவத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சர்வதேச டி20 வடிவத்திலிருந்து ஓய்வு அறிவிப்பு..
ஆஸ்திரேலியா அணிக்காக 2012-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமான மிட்செல் ஸ்டார்க், இதுவரை 65 டி20 போட்டிகளில் விளையாடி 7.74 என்ற எகானமி உடன் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆடம் ஜாம்பாவுக்கு அடுத்தபடியாக, ஆஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக டி20 விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக ஸ்டார்க் உள்ளார்.
5 டி20 உலகக்கோப்பையில் விளையாடிய மிட்செல் ஸ்டார்க் 2021-ம் ஆண்டு துபாயில் நடந்த டி20 உலகக்கோப்பை பட்டத்தை தன் நாட்டிற்கு கொண்டுவர முக்கிய பங்கு வகித்தார்.
இந்நிலையில் தற்போது சர்வதேச டி20 போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கும் ஸ்டார்க், “நான் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய ஒவ்வொரு டி20 ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும், குறிப்பாக 2021 உலகக் கோப்பையை மிகவும் ரசித்தேன்.
டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் எனது மிக உயர்ந்த முன்னுரிமையாக இருந்து வருகிறது. 2027-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணம், ஆஷஸ் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை கருத்தில்கொண்டு, அவற்றிற்கு சிறந்த முறையில் தயாராக இதுவே எனது சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.