ராமதாஸுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை .. நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்கள்.. பொதுக்குழுவில் நடந்தது என்ன?
சமீப காலமாகவே தமிழக அரசியலில் அடிக்கடி பேசுபொருளாவது பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவி வரும் கருத்துவேறுபாடுதான். இதற்கிடையேதான் ஆகஸ்ட் 19 ஆம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று ராமதாஸ் அறிவித்திருந்தார். தொடர்ந்து அன்புமணியும் ஆகஸ்ட் 9ஆம் தேதி - அதாவது இன்று - பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். இதனையடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் இருந்து மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் பொதுக்குழுவிற்கு தடைவிதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்த நிலையில் மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது.
பாமக வரலாற்றில் ராமதாஸ் பங்கேற்காத முதல் பொதுக்குழு இன்று அன்புமணி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழுதான். விழா மேடையில் உள்ள பேனரில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. 11 மணியளவில் பொதுக்குழு தொங்கப்பட்ட நிலையில் அன்புமணிக்கு அருகில் பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், ராமதாஸ் பொதுக்குழுவில் பங்கேற்கவில்லை.
பொதுக்குழுவில் அரசியல் தீர்மானம் உட்பட மொத்தம். 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானங்களாவன,
1)அரசியல் தீர்மானத்தில் தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினராலும் வெறுக்கப்படும் திமுக அரசை வரும் சட்டப்பேரவை தேர்தலில் வீழ்த்த பாட்டாளி மக்கள் கட்சி உறுதி ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2) பாட்டாளி மக்கள் கட்சியின் உட் கட்சி தேர்தல் ஓராண்டு கழித்தே நடைபெறும் எனவும் அதுவரை ராமதாசால் நீக்கப்பட்டவர்கள் பதவியில் தொடர்வார்கள் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடிவேல் இராவணன், பொருளாளர் மா.திலகமாபா ஆகியோர் தொடர்ந்து செயல்படுவார்கள்.
3. வன்னியர்களுக்கு விரைவில் இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.
4. தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் விடுதலை நாள் அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.
5. சமூகநீதி கடமைகளை நிறைவேற்ற மறுக்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கண்டனம்.
6. அன்புமணி மேற்கொண்டு இருக்கும் மக்கள் உரிமை மீட்பு பயணத்தையும் அதன் நோக்கத்தையும் வெற்றி பெற செய்ய பாமக உறுதி ஏற்கிறது..
7. பெண்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.
8. தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
9. தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே பாட்டாளி மக்கள் கட்சியின் இலக்கு
10. தமிழ்நாட்டில் நான்கு முறை உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும்.
11. தமிழ்நாட்டிற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து தமிழக அரசு விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
12. தமிழ்நாட்டில் காவிரி கொள்ளிடம் பாலாறு உள்ளிட்ட வாய்ப்பு உள்ள அனைத்து ஆறுகள் குறுக்கேயும் தடுப்பணைகள் கட்டுவதை ஒரு ஏக்கமாக தமிழக அரசு மாற்ற வேண்டும்.
13. காவிரி கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்தின் பணிகளை விரைவு படுத்த வேண்டும்.
14. தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஒருங்கிணைந்த கல்வி திட்டம் நிதி ₹2,151 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
15. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் அரசு பள்ளிகளின் நிலை சீரழிந்து வருகிறது. உடனடியாக தமிழக அரசு ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
16. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 9 ஆயிரம் உதவி பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது 180 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை. 10,500 பேராசிரியர் பணியிடங்களில் 9000 இடங்கள் காலியாக உள்ளன. அந்த காலி பணியிடங்களை உடனே நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
17. உங்களுடன் ஸ்டாலின் நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற விளம்பர திட்டங்களை விடுத்து பொது சேவை வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். மக்களை ஏமாற்ற மோசடி திட்டங்களை செயல்படுத்தும் திமுக அரசுக்கு கண்டனம்.
18. அரசு ஊழியர்கள் ஆசைகளுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
19. அரசு துறைகளில் காலியாக உள்ள 6.5 லட்சம் இடங்களை நிரப்ப இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் புதிய பணியிடங்களை ஏற்படுத்துவோம் என திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
20. சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
ஆகிய 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.