”அன்புமணியே தலைவராக தொடர்வார்” - பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்
ஒரு கட்சியால் தந்தை - மகன் இடையேயான பிளவு, தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆம், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும் கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான மோதல்போக்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. நிர்வாகிகள் நியமனம், ஆலோசனை, பொறுப்புகள் என இம்மோதல் போக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது உச்சத்தை எட்டிவருகிறது. ஆரம்பம் முதலே தாம் கட்சிக்குப் பாடுபட்டதால் நான் சொல்வதே சரி என்றும், அதற்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டும் என்கிறார், ராமதாஸ். ஆனால், அவருக்கு எதிராகக் கட்சி நடவடிக்கைகளில் அன்புமணி ஈடுபடுவதாக மற்றொரு பக்கம் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
இதனால், கடந்த சில நாட்களாக பாமக இரண்டு அணிகளாக உள்ளது. இதற்கிடையே, ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பு தனித்தனியே பொதுக்குழு கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டன. அதன்படி, விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் உள்ள சங்கமித்ரா திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 17 காலை 10 மணிக்கு அக்கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே பாமக தலைவர் அன்புமணி, ஆகஸ்ட் 9ஆம் தேதி (இன்று) காலை 11 மணியளவில் மகாபலிபுரத்திலுள்ள அரங்கத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த ராமதாஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இறுதியில், நீதிமன்றம் அன்புமணி பொதுக்குழு கூட்டம் நடத்தத் தடையில்லை என உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, சொன்னபடியே இன்று அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸுக்கு அன்புமணி அழைப்பு விடுத்த நிலையில், பேனரில் ராமதாஸின் புகைப்படம் இடம்பெற்றது. அவருக்காக மேடையில் போடப்பட்ட இருக்கையும் காலியாகவே இருந்தது. மறுபுறம் கூட்டத்தில், பாமகவின் தலைவராக அடுத்த ஓராண்டுக்கு அன்புமணியே நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அன்புமணியின் பதவிக்காலம் மே 28ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமக உட்கட்சி தேர்தல் நடைபெறும் வரை அன்புமணியே பாமக தலைவராக தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் இருதரப்பினரும் ஆவணங்களைக் கொடுத்து வரும் நிலையில், அன்புமணி தரப்பு உறுப்பினர்களை ஆவணப்படுத்தி வருகிறது.
மேலும், வன்னியர்களுக்கு விரைவில் இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் விடுதலை நாள் அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே பாட்டாளி மக்கள் கட்சியின் இலக்காகும். தமிழ்நாட்டில் நான்கு முறை உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.