அஜித்குமார் கொலை|இதுவரை கூறியது பொய்யா? முன்னுக்குப் பின் முரணான பதிலால் சிபிஐ-யிடம் சிக்கிய நிகிதா?
செய்தியாளர் - இளையராஜா
தமிழ்நாட்டையே உலுக்கிய திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில், காரில் வைத்திருந்த நகை மாயமானதாக நிகிதா அளித்த புகார் பொய்யாக இருக்கலாம் என சிபிஐ சந்தேகமடைந்துள்ளது.
விசாரணையின்போது நிகிதாவுக்கு ஏற்பட்ட தடுமாற்றத்தால் சிபிஐயிடம் அவர் கூறிய முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இந்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ளன. அப்படி விசாரணையின்போது என்ன கூறினார் நிகிதா?... வாங்க பார்க்கலாம்...
முன்னுக்குப் பின் முரணான பதில்.. சிக்கிய நிகிதா?
’நான் என் அம்மாவுடன் காளி கோயிலுக்கு சென்றபோது, அஜித்குமார் என்பவர் என் அம்மாவின் வயது முதிர்வினைப் பயன்படுத்திக் கொண்டு என்னிடம் வற்புறுத்தி காரை அவர் நிறுத்துவதாக சாவியைக் கேட்டார். அதன்பின் அவரிடம் நான் எனது கார் சாவியைக் கொடுத்துவிட்டு சாமி தரிசனம் செய்ய சென்றுவிட்டேன். திரும்பிவந்து காரில் இருந்த எனது பையை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த நகையைக் காணவில்லை’ என அன்றைக்கு பேராசிரியர் நிகிதா அளித்த தகவலின்படி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட பின் நிகிதாவிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், நிகிதாவின் காரை ஒருவர் மட்டுமே பார்க்கிங் செய்யவில்லை என்ற உண்மை வெளிவந்துள்ளது. நீண்ட நேரம் கழித்து தான் கார் சாவியை என் கையில் கொடுத்தார்கள் என நிகிதா தொடர்ந்து புகார் சொல்லிவந்த நிலையில், நிகிதாவின் காரை இருவர் பார்க்கிங் செய்துள்ளார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனில் தனது காரின் சாவியை நிகிதா இரண்டு முறை எப்படி கொடுத்தார்? தெரியுமா?...
முதலில், சாவியை இரண்டு முறை பார்க்கிங் செய்வதற்காக கொடுத்தார் என்பது எஃப்.ஐ.ஆர்.இல் பதியப்படவில்லை. நிகிதாவும் தற்போதுவரை அதை சொல்லவில்லை.
இந்நிலையில், விசாரணை விவரம் வேறு உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது. அதன்படி நிகிதா இரண்டு முறை சாவியைக் கொடுத்திருக்கிறார். ஒன்று கோயிலுக்கு வந்த நிகிதாவின் காரை அருண்குமார் இரண்டு நிமிடத்தில் பார்க் செய்திருக்கிறார். பின்னர் அஜித்குமாரிடம் அவர் கார் சாவியைக் கொடுத்திருக்கிறார். அதை அஜித்குமார் நிகிதாவிடமே கொடுத்துவிட்டார். அதன் பின் இரண்டாவதாக காரை பார்க்கிங்கில் இருந்து எடுப்பதற்காக சாவியை அங்கு வேலைபார்த்த கோயில் ஊழியர் கண்ணன் என்பவரிடம் நிகிதா கொடுத்துள்ளார். கண்ணன் அந்த சாவியை அஜித்குமாரிடம் கொடுத்திருக்கிறார். அஜித்குமார் அதை தினகர் என்ற நபரிடம் கொடுக்க தினகர் காரை எட்டு நிமிடத்தில் வெளியே எடுத்துக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.
கோவில் பார்க்கிங்கை விட்டு நிகிதா கார் வெளியே செல்லவே இல்லை என்பதும் சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்போது கோயிலில் இருந்து கார் எங்குமே செல்லாத நிலையில், அஜித்குமார் மீது நிகிதா அளித்தது பொய் புகாராக இருக்கலாம் என சிபிஐ சந்தேகிக்கிறது. இப்படி சிபிஐ விசாரணையில், நிகிதாவின் பதில்கள் முன்னுக்குப் பின் முரணான இருந்த நிலையில், சென்னையில் அந்த நகைகளை வாங்கியதாக நிகிதா அளித்த தகவலின்படி சிபிஐ விசாரணை அந்த நகையின் பக்கம் திரும்பியிருக்கிறது.