இனவெறி தாக்குதல்களுக்கு எதிரான பேரணி
இனவெறி தாக்குதல்களுக்கு எதிரான பேரணிpt web

"அழுக்கு இந்தியர்" | அயர்லாந்தில் இனவெறித் தாக்குதல்.. உலகம் முழுவதும் புலம்பெயர்ந்தோர் நிலை என்ன?

அயர்லாந்து நாட்டில் ஆறு வயது இந்திய வம்சாவளி சிறுமி மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

வேலை நிமித்தமாக மக்கள் ஒரு நாட்டிற்குள்ளாகவோ அல்லது ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கோ செல்கின்றனர். தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தைவிட்டு செல்லும் சிலர் வேலைக்காக குடிபெயர்ந்த இடத்திலேயே தொடர்ந்து வாழ தொடங்கிவிடுகிறார்கள். அவர்களது சந்ததியும் அங்கேயே வாழ்க்கையை தொடர்கிறது. இப்படி புலம்பெயர்ந்து செல்பவர்கள் தாங்கள் குடிபெயரும் பகுதியில் பலவிதமான இன்னல்களை சந்திக்கின்றனர். நிறம் காரணமாகவோ, கலாசாரம் காரணமாகவோ இன்னும் பல வழிகளிலோ மக்கள் பாகுபாடுகளுக்கு ஆளாகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குடிபுகுந்த இந்தியர்கள் பலரும் இத்தகைய இன்னல்களை சந்தித்துள்ளார்கள். அப்படியான ஒன்றுதான் அயர்லாந்தில் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. அயர்லாந்தில் நடந்தது என்ன? அங்குள்ள சூழ்நிலை என்ன? புலம்பெயர்ந்தவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அயர்லாந்தில் இந்தியர்கள்..

அயர்லாந்தில் இந்தியர்கள் வேகமாக வளர்ந்து வரும் குடியேர்ப்பு சமூகமாக இருக்கின்றனர். நம் நாட்டில் இருந்து அயர்லாந்தில் குடியேறுவதற்காக கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் குடியேற்பு அனுமதிகளைப் பெற்றிருக்கின்றனர். மிகவும் குறுகிய காலத்திலேயே, இந்தியர்கள் நாட்டின் மிகப்பெரிய வெள்ளையர்கள் அல்லாத இனக்குழுவாக வளர்ந்திருக்கின்றனர்.

அயர்லாந்தின் பொருளாதாரத்தில் இந்தியர்கள் பல்வேறு துறைகளில் முக்கியப்பங்காற்றி வருகின்றனர். குறிப்பாக, மருத்துவ சேவை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் இந்திய வல்லுநர்களின் பணி, பெரிதும் தேவைப்படும் ஒன்று என்றே பார்க்கப்படுகிறது. இவ்வளவு அத்தியாவசிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும்போதும் இந்தியர்கள் மீதான இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றதை வரவேற்று அங்கீகரித்த முதல் நாடு அயர்லாந்துதான். இந்தியாவிற்கும் அயர்லாந்துக்கும் இடையேயான உறவு பல தசாப்தங்களாக நீடிக்கிறது. குறிப்பாக இருநாடுகளுக்கும் இடையிலான ராஜாங்க ரீதியலான உறவு கடந்த 1949ல் தொடங்கியது. கடந்த ஆண்டு இருநாடுகளும் தங்களது ராஜாங்க ரீதியிலான உறவு 75 ஆண்டுகளை எட்டியதைக் கொண்டாடியதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய மாணவர்கள் அயர்லாந்து பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க அதிகமாகவே விரும்புகின்றனர். 2023-ஆம் ஆண்டில் மட்டும் 8,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கல்வியை கற்பதற்காக அயர்லாந்தினைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இது 2013-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பத்து மடங்கு அதிகம்.

இனவெறி தாக்குதல்களுக்கு எதிரான பேரணி
அயர்லாந்து | "இந்தியாவுக்குத் திரும்பிச் செல்" இனவெறித் தாக்குதலுக்கு ஆளான 6 வயது இந்தியச் சிறுமி!

இனவெறித் தாக்குதல் - அயர்லாந்தில் நடந்தது என்ன?

அயர்லாந்தின் வாட்டர்ஃபோர்டில், வசித்துவரும் 6 வயது சிறுமி கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி தனது வீட்டு வாசலில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. குழந்தை விளையாடுவதை பார்த்துக்கொண்டிருந்த குழந்தையின் தாயார் தனது 10 மாத மகனுக்கு உணவளிப்பதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கண்ணீருடன் வீட்டிற்குள் வந்திருக்கிறது.

குழந்தையிடம் விசாரிக்கும்போதுதான் குழந்தை தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அதாவது, 8 வயது சிறுமி மற்றும் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சில சிறுவர்கள் சேர்ந்து குழந்தையைத் தாக்கியுள்ளனர். குழந்தையின் முகத்தில் குத்திய அவர்கள் குழந்தையை சைக்கிளைக் கொண்டும் தாக்கியிருக்கின்றனர். அதோடு, "இந்தியாவுக்குத் திரும்பிச் செல்", "அழுக்கு இந்தியர்" போன்ற இனவெறி வாசகங்களையும் சிறுமியைப் பார்த்து அக்குழந்தைகள் தெரிவித்திருக்கின்றனர்.

இனவெறி தாக்குதல்களுக்கு எதிரான பேரணி
மகாராஷ்டிரா | பாஜக உடன் முற்றும் மோதல்.. மோடி, அமித் ஷா உடன் ஏக்நாத் ஷிண்டே திடீர் சந்திப்பு!

இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய சிறுவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டாம் என்றும் உளவியல் ஆலோசனையும் வழிகாட்டலுமே அளிக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கூறியுள்ளார்.

அயர்லாந்தில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 40 வயது இந்தியரின் ஆடைகளைக் களைந்து பதின்பருவச் சிறார் சிலர் இனவெறித் தாக்குதல் நடத்தினர். தலைநகர் டப்ளினில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் இந்திய வமசாவளியினர் மீதான மூன்று தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அயர்லாந்தில் இனவெறித் தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், கடந்த வாரம் டப்ளினில் உள்ள இந்தியத் தூதரகம், அயர்லாந்தில் இருக்கும் இந்திய மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று தெரிவிக்கும் வகையில் அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறது.

இனவெறி தாக்குதல் நடந்துள்ள இந்த சூழலில் இந்த தாக்குதல் தொடர்பாக இணையத்தில் மிகவும் தவறான புரிதலுடன் விவாதம் நடந்துள்ளது. அதாவது, அயர்லாந்து நாட்டில் குடிபெயர்ந்த இந்தியர்களின் நடத்தை காரணமாகவே அதாவது கலாசார ரீதியாக பின் தங்கிய நிலையின் செயல்பாடுகள் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக அந்த இணைய பதிவுகள் கூறுகின்றன.

இனவெறி தாக்குதல்களுக்கு எதிரான பேரணி
”விராட் கோலி சிறந்த என்டெர்டெய்னர்” தோனி கருத்து.. வைரலான வீடியோ !

ரெட்டிட் தளத்திலும் இதுதொடர்பான விவாதங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. பதிவர் ஒருவர், “புலம்பெயர்ந்தவர்களாகிய நாம், நாம் வாழும் நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ப நம்மை தகவமைத்துக்கொள்ள வேண்டாமா? ஏதோ ஒரு காரணத்திற்காக இந்தியாவை விட்டு வெளியேறிய போதிலும், அவர்கள் வாழும் நாட்டை இந்தியாவைப் போல உணர வைக்க முயற்சிக்கும் பல இந்தியர்களை நான் பார்த்திருக்கிறேன். நான் 'உங்கள் கலாச்சாரத்தை முழுமையாக விட்டுவிடுங்கள்' என்று சொல்ல வரவில்லை . ஆனால், நாம் வாழும் நாட்டின் கலாச்சாரத்திற்கும் மரியாதை காட்டவேண்டும்; அதை இன்னொரு இந்தியாவாக மாற்ற முயற்சிக்கக்கூடாது” எனத் தெரிவித்திருக்கிறார்.

மற்றொருவரோ, “நான் பார்த்ததின் அடிப்படையில், இந்தியாவிலிருந்து குடியேறியவர்களில் இரண்டு வகை மக்கள் இருக்கிறார்கள். 1. சிலர் இதை புரிந்து கொண்டு அந்த நாட்டின் சூழ்நிலைக்கேற்ப நடக்கிறார்கள்; 2. சில விஷயங்கள் தெரிந்திருந்தும் அதைப் புறக்கணித்து, தங்களது பழக்கப்படியே செயல்படுகிறார்கள்.

அதனால் என்ன நடக்கிறது என்றால் — கடற்கரையில் குப்பை போடுவது, பொதுப் போக்குவரத்தில் சத்தமாக இசையை ஒலிக்கச் செய்வது போன்ற செயல்களை நான் கண்டுள்ளேன். நன்றாகக் கல்வி கற்ற ஒரு வெளிநாட்டுக்காரர் இதுப்போன்ற செயல்களை செய்ததை நான் கண்டதில்லை. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இரண்டாவது வகை மக்கள், அந்த நாட்டினரின் மனதை சுலபமாகக் கோபப்படுத்தி விடுகிறார்கள்; அதன் எதிர்விளைவாக, ஒழுக்கமாக நடக்கும் முதலாவது வகை இந்தியர்களும் அதன் தாக்கத்தை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இனவெறி தாக்குதல்களுக்கு எதிரான பேரணி
அமெரிக்கா செல்வது இனி அவ்வளவு சுலபம் இல்ல.. விசா விதிகளில் புதிய மாற்றங்கள் .. என்னென்ன தெரியுமா?

இந்த விவகாரம் தொடர்பாக The Irish Times தலையங்கம் வெளியிட்டிருக்கிறது. அதில், “ஒரு காலத்தில் வரவேற்கத்தக்க சூழலாக இருந்த இடம், இப்போது பலரும் அன்றாட வாழ்க்கையை நடத்திக்கொள்வதற்கே பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்கச் செய்து விட்டது. யாரும் தங்கள் இனம் அல்லது தோலின் நிறம் காரணமாக பாதுகாப்பற்று உணரக்கூடாது என்பதற்கான பொறுப்பு அனைவருக்கும் பொதுவானது” எனத் தெரிவித்திருக்கிறது.

அயர்லாந்தில் இந்தியர்கள், கல்வி, தொழில், சமூக பணிகள் என அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர். ஆனால், அதே சமயம் புலம்பெயர்ந்த சமூகங்களின் மீது எழும் இனம் சார்ந்த வன்முறைகள், வெறுப்பும் பயமும் நிறைந்த சூழலை உருவாக்கி வருகிறது.

இனவெறி தாக்குதல்களுக்கு எதிரான பேரணி
இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50% வரி! இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சொன்னது என்ன?

எப்படி புரிந்து கொள்வது?

இந்த விவகாரத்தை முற்றிலும் வேறு விதமாக புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவில் உள்ள ஒரு உதாரணத்தை வைத்தே இதனை புரிந்து கொள்ளலாம். பீகாரில் இருந்து தொழிலாளர்கள் பலரும் தமிழ்நாட்டிற்கு பணிக்கு வருகிறார்கள். ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கோ, பெங்களூருக்கோ படையெடுத்தது போல் இன்று பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டே இருக்கிறார்கள். கடின உழைப்பை செலுத்தும் பல வேலைகளை அவர்கள் செய்கிறார்கள்.

இப்படி பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களின் பழக்க வழக்கங்களை கிண்டல் செய்யும் பழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. வடமாநில தொழிலாளர்கள் மீதான கிண்டல் பேச்சு வெறுப்பு பேச்சாக மாறியது. ஆனால், இதன் அடிநாதம் என்ன பின் தங்கிய மாநிலத்தில் இருந்து வரும் ஒருவரின் பழக்கம் வழக்கம் என்பது அந்த மாநிலத்தில் துயர நிலையை குறிப்பதே ஆகும். அது மனிதர்கள் குறித்த பிரச்னை அல்ல.

இன்னொன்று, தொழில் செய்பவர்கள் குறைந்த கூலியில் வேலை வாங்கி லாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் தொழிலாளர்களை இறக்குமதி செய்கிறார்கள். ஆனால், வேலைவாய்ப்பு சிக்கல்கள் எழுதும் போதும் அதற்கு காரணமான பொருளாதார நிலை, யார் எடுக்கும் முடிவால் நமக்கு சிக்கல் வருகிறது என்ற தெளிவு இல்லாமல் சக மனிதனான பிற மாநில/நாட்டு தொழிலாளர்கள் மீது வெறுப்பாக மாற்றப்படுகிறது. இந்த எண்ணத்தை தவறான அரசியல் புரிதல் கொண்ட அரசியல் தலைவர்கள் மக்கள் மீது விதைக்கிறார்கள்.

அமெரிக்கர்கள் ஆப்பரிக்க நாடுகளில் உள்ள மக்களை அடிபணிய வைக்கவோ, பிரிட்டீசார் இந்தியர்களை அடி பணிய வைக்கவோ கையில் எடுத்த மிகப்பெரிய ஆயுதம் அவர்களை மிகவும் நாகரீகமற்றவர்கள் என்று நம்ப வைத்தது தான். இதனால் பலன் அடைந்த அமெரிக்க பண்ணையார்கள், பிரிட்டீஸ் முதலாளிகளை தாண்டி இந்த கருத்தாக்கம் அந்த நாட்டு மக்களையும் தொற்றிக் கொண்டது. அதுதான் தன்னைப் போலவே சக நிலையில் உள்ள மனிதனை அவன் இழிவாக பார்க்கும் நிலை ஏற்பட்டது. இன்று உலகம் முழுவதும் இந்த சிக்கல் நிலவி வருகிறது. பணக்கார வளைகுடா நாடுகளில் உலகின் பல நாடுகளில் இருந்து வேலைக்கு செல்கிறார்கள். வளர்ந்த அமெரிக்க, மேற்கத்திய நாடுகளுக்கும் வேலைக்கு செல்கிறார்கள். இங்கெல்லாம் இந்த பிரச்னைகள் எழுவே செய்யும். இதில் இருந்து நிச்சயம் பாடம் கற்க வேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com